வெற்றிக்கான யுத்தகள தொழில்நுட்பங்கள்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற நிறுவனம் சுருக்கமாக DRDO என்று அழைக்கப்படுகிறது. அதன் முன்னாள் தலைவராக விளங்கியவர் டாக்டர் வி.கே.ஆத்ரே.  அப்துல் கலாமுக்குப் பிறகு  அந்தப் பதவியை வகித்தவர் இவர்.  இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது பெற்ற இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் ‘யுத்தகளத் தொழில்நுட்பங்கள்’ (Battlefield Technologies) என்ற தலைப்பில் அண்மையில் உரையாற்றினார்.

வருங்காலத்தில் அணு ஆயுதப் போர்கள் நடைபெறுமா,  அவற்றுக்கு எந்த வகையில் இந்தியா தயாராகிக்கொண்டிருக்கிறது, வெற்றிக்கான வியூகங்களாக எந்தெந்தக் கோணங்களில் இந்தியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன என்பது குறித்து டாக்டர் ஆத்ரே பேசுகையில், “மதம், எல்லைப் பிரச்சினை, கலாச்சார மோதல்கள் ஆகியவற்றால்தான் முன்பெல்லாம் யுத்தங்கள் நடைபெற்றன.  ஆனால், சமீபகால யுத்தங்களுக்குப் பொருளாதாரம், கோட்பாடு, தான் என்ற அகம்பாவம் ஆகியவையே முக்கியக் காரணங்களாக அமைந்துவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை கடற்படையில் நாம் கவனம் செலுத்துவது இயல்பானது மட்டுமல்ல அவசியமானதும்கூட.  நில எல்லையை ஒட்டியுள்ள கடல் பரப்பில் 200 கிலோ மீட்டர் தூரம்வரை இந்தியாவின் எல்லைதான்.  இதில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அது அகற்றப்பட வேண்டியதுதான். நீருக்கு அடியில் செயல்படும் போர்த் தளவாடங்கள் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

எது நம் பலம், எது நம் தனித்துவம் என்பதில் தெளிவு தேவை.  பேரரசன் அலெக்ஸாண்டர் இந்திய மன்னன் புருஷோத்தமனுடனான போரில் சிக்கித் தடுமாறியது இதனால்தானே. போரஸின் தனித்துவமான அபார யானைப் படைக்கு முன்னால் அலெக்ஸாண்டரின் குதிரைப் படைகள் வெகு நாட்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லையே.

ஆனால், அந்தக் காலத்தில் படையினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  வியூகம் வகுக்கிறவர்கள் குறைவாக இருப்பார்கள். இனிவரும் போர்களில் ராணுவ வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் போதும்.  விஞ்ஞானிகளின் பங்குதான் போரை நடத்துவதில் முக்கியமானதாக இருக்கும்” என்றார்.

போர்க் களத்திலும் ‘ஸ்மார்ட்’!

யுத்தகளத்தில் ஆயுதங்களைவிட கண்காணிப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு. நானோ டெக்னாலஜி என்பது முக்கியத்துவம் பெறும்.  சிறிய அளவுள்ள சாதனத்தில் பெரிய விளைவுகள் எதிர்பார்க்கப்படும்.  உதாரணத்துக்கு, எவ்வளவு சிறிய செல்போனில் ஜி.பி.எஸ். என்ற பெரிய தொழில்நுட்பம் இயங்குகிறது!  ஒவ்வொரு செல்போனுக்குள்ளும் சுமார் மூன்று ஆன்டனாக்கள் இயங்குகின்றன.  செல்போனிலேயே பெரிய பகுதி அதன் திரைதான் என்கிற அளவுக்கு அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் மிகச் சிறியவையாக இருக்கின்றன.

இப்போதெல்லாம் ‘ஸ்மார்ட்’ என்ற வார்த்தையைப் பலவிதங்களில் பயன்படுத்துகிறார்கள். போர்க்களத்திலும் ‘Smart Ammunition’  எனப்படும் படைத்தளவாடம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.  எளிமையாகச் சொல்வதானால் ஒரு ஏவுகணையைச் செலுத்தினால் அதன் முனை வளைந்து சென்று தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருந்தால் அது ‘ஸ்மார்ட்’.

லேசர் ஆயுதங்களுக்கு மதிப்பு அதிகமாகும்.  மென்பொருள்கள் மேலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.  எதிரியின் களத்தில் நம்மால் போக முடியாத, போகப் பிடிக்காத இடங்களுக்கு ரோபோட்களை அனுப்பலாம் என்று யுத்தம் தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிகளை விளக்கத் தொடங்கினார்.

அணு ஆயுதங்கள் வேண்டாமே!

“இந்திய விமானப் படை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய ‘தேஜஸ்’ அபாரத் திறமை கொண்டது.  இது முழுக்க நம் நாட்டிலேயே தயாரானது.  குறிப்பிடத்தக்க மற்றொன்று ‘நிஷாந்த்’.  ஆளில்லாமலேயே செல்லும் வானூர்தி. உலகின் சில பகுதிகளில் ஓட்டுநர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  அதற்கு முன்னோடி ‘நிஷாந்த்’ எனலாம்.

என்னைப் பொருத்தவரை அணு ஆயுதங்களை எந்த நாடும் பயன்படுத்தப்போவதில்லை. ஆனாலும் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகளை பெரிய நாடுகள் எதுவும் நிறுத்தப்போவதுமில்லை. காரணம் மனிதனுக்கு அடிப்படையிலேயே ‘சண்டை போடும் இயல்பு’ இருப்பதுதான்.  என்னைக் கேட்டால் அணு ஆயுதங்கள் எப்போதுமே இருக்க வேண்டிய இடம் மண்ணுக்கு அடியில்தான்” என்று விளக்கியதன் மூலம் ஆயுதங்கள் தற்காப்புக்கே தவிர, தாக்குதலுக்கு அல்ல என்பதை உணர்த்தினார் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.

- ஜி.எஸ்.சுப்பிரமணியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்