மனதோடும் கொஞ்சம் பேசுவோம் 12: வெற்றிக்குப் பதியம்போடும்

By ஆர்த்தி சி.ராஜரத்தினம்

வெற்றி பெற்றவர் வெற்றியாளர், வெற்றியை நழுவவிட்டவர் தோல்வி யாளர் என்றுதான் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், தோல்வியாளரின் மனப்பான்மை என்று ஒன்றிருக்கிறது. அதுவே பல நேரத்தில் தோல்வியை நோக்கி ஒருவரை இழுத்துச் செல்கிறது. தன்னைத் தானே பலிகடாவாகக் கருதும் மனப்பான்மைதான் அது. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கை அனுபவங்களை அணுகும் விதத்திலேயே வெற்றியாளர்களிடம் இருந்து வேறுபடுவார்கள்.

கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வெற்றியாளர் தேடும்போது, சூழலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டுப் பரிதவித்து நிற்பவர்களாகத் தோல்வியாளர்கள் இருப்பார்கள். சின்னஞ்சிறு விஷயங்களில் மூழ்கிப்போய் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கத் தலைகீழாகத் தண்ணீர் குடிப்பார்கள். தங்களுடைய இலக்கை நோக்கி விடா முயற்சியோடு வெற்றியாளர்கள் பயணித்துக்கொண்டிருக்கும்போது எட்டக்கூடிய உயரத்தை எட்டிப்பிடிக்க முயலாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று சுற்றித்திரிவார்கள்.

உறங்காத மனம்

இன்றைய தலைமுறையினருக்குத் தொழில்நுட்பம் கைவந்த கலையாக இருப்பதால் அவர்கள் ‘டெக்னாலஜி நேட்டிவ்’ என்றழைக்கப்படுகிறார்கள். அவர்களால் அதிநவீன இயந்திரங்களை லாகவமாகக் கையாள முடிகிறது. ஆனால், தங்களுடைய அன்றாட உறக்கத்தை ஒழுங்குபடுத்த முடிவதில்லை. தங்களுக்குத் தேவையான தூக்கம் பாதிக்கப்படுவதை உணராமலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் விளைவாகப் பின்னிரவில் தூங்கிக் காலை தாமதமாக விழித்து, பள்ளி, கல்லூரி, பணிக்கு அரக்கப்பறக்கச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வெற்றியாளர்களாக உருவெடுப்பது கடினம். ஏனென்றால், வெற்றிக்கான சூத்திரமான ’20-20-20’ நாளின் முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளேதான் ஒளிந்திருக்கிறது.

செயல்-சிந்தனை-வாசிப்பு

விடியற்காலையில்தான் வெற்றிக்கான பதியம் போடப்படுகிறது. ஆகையால், நாளின் முதல் 20 நிமிடங்களை உடற்பயிற்சிக்காகச் செலவிட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக மட்டும் அல்ல தேகப் பயிற்சி. எதிர்ப்பு சக்தி, நேர்மறையான சிந்தனை, உத்வேகம், உயர்மட்ட அறிவுத் திறன் செயல்பாட்டுக்குத் தேவையான ரசாயனங்கள் தேகப் பயிற்சியின்போது சுரக்கின்றன. நடைப் பயிற்சி, யோகா, ஜாகிங் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டு இப்படி உங்களுக்கு உகந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

இரண்டாவது 20 நிமிடங்கள் மன ஆரோக்கியத்துக்காகச் செலவிடலாம். நேர்மறையான சிந்தனையைத் தூண்டக்கூடிய வாக்கியங்களை உச்சரித்தல், எளிமையான அறிவியல்பூர்வமான தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அல்லது உங்களுடைய கனவு லட்சியத்தை அடைவதற்கான பாதையை மனக்கண்ணில் காணுதல் ஆகியவை புத்துணர்வு ஊட்டும். முந்தைய தினத்தை அசைபோடுதலும் முக்கியமான ஒரு அம்சம்தான். இதன் மூலம் எங்கே தவறவிட்டோம், அதலிருந்து எப்படி மீள்வது என்பதையும் கண்டறியலாம்.

இந்த இடத்திலும் வெற்றியாளருக்கும் தோல்வியாளருக்கும் இடையில் நுட்பமான வேறுபாடு உள்ளது. தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுத் தெளிவு பெறுவது வெற்றியாளரின் பண்பு. ஆனால், தன்னுடைய தோல்வியை வேறொருவரின் தோளில் சுமத்த முயல்வது தோல்வியாளரின் இயல்பு.

15 நிமிடங்கள் கடந்த பிறகு கண்களை மூடி உங்களுடைய மூச்சின் மீது கவனத்தைக் குவியுங்கள். இந்த நாள் மனக்கண்ணில் விரிவதை அவதானியுங்கள். கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையிலான வேறுபாடு நம்முடைய நரம்பு மண்டலத்துக்குத் தெரியாது. ஆகையால், ஒரு பூரணமான நாளை கற்பனை செய்யத் தொடங்கும்போது அதை நிஜமாக்க மனம் தன்னை அறியாமல் தயாராகிவிடும்.

மூன்றாவது 20 நிமிடங்களை வாசிப்புக்கும் அறிவார்த்தமான செயல்பாடுகளுக்கும் ஒதுக்குங்கள். நீங்கள் மாணவரானால் பாடத்தில் கூடுதல் தகவல்களைத் திரட்டவும் பாடப் பகுதிகளில் திருப்புதல் மேற்கொள்ளவும் இந்த நேரத்தைச் செலவிடலாம். வேலைக்குச் செல்பவராக இருந்தால் உங்களுடைய துறை சார்ந்த புது வரவுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த நேரம் மதிப்பெண் ஈட்டித் தரும் பரீட்சைக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கான நேரம் அல்ல. வாழ்க்கை எனும் தேர்வுக்கு உங்களைத் தகவமைத்துக்கொள்வதற்கான நேரமாகும்.

யாராக நாம் வாழப்போகிறோம் என்பதை உண்மையில் நாம்தான் தீர்மானிக்கிறோம். அனுதினமும் நாம் கடைப்பிடிக்கும் பழக்கங்களும் சிந்தனைகளும் செயல்களும்தாம் நாம் யார் என்பதைத் தீர்மானிக்கின்றன.
 

‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in


தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்