சேதி தெரியுமா: 33-வது மாவட்டம் கள்ளக்குறிச்சி

By கனி

ஜனவரி 8: தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாகக் கள்ளக்குறிச்சியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். மாநிலத்தின் பெரிய மாவட்டமான விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.

 

ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை இல்லை

ஜனவரி 8: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதியளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதியளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆர். எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

 

இந்தியா: குறைபாடுள்ள ஜனநாயகம்

ஜனவரி 8: 2018-ம் ஆண்டுக்கான ஜனநாயகப் பட்டியலை ‘எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ வெளியிட்டது. 167 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், இந்தியா குறைபாடுள்ள ஜனநாயகப் பிரிவில் 41-வது இடத்தில் இருக்கிறது. உலகில் முழுமையான ஜனநாயகம் நிலவும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, டென்மார்க், கனடா, அயர்லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. உலகில் 4.5 சதவீத மக்கள்தான் முழுமையான ஜனநாயகத்துடன் வாழ்வதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது.

10% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஜனவரி 10: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு அரசுப் பணிகள், கல்வி ஆகியவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையிலும் (ஜனவரி 8), மாநிலங்களவையிலும் (ஜனவரி 9) நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ‘சமத்துவத்துக்கான இளைஞர்கள்’ (Youth For Equality) என்ற தன்னார்வ நிறுவனம், இந்த மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்த மசோதா மீறுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அலோக் வர்மா ராஜினாமா

ஜனவரி 10: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் பதவியில் அமர்த்திய உச்ச நீதிமன்றம் (ஜனவரி 8),  பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழு அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. பிரதமர், தலைமை நீதிபதியின் பிரதிநிதி ஏ.கே. சிக்ரி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அடங்கிய உயர்மட்டக் குழு விசாரணையில், அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஐ கூடுதல் இயக்குநர் நாகேஸ்வர ராவ் சிபிஐ இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். தீயணைப்பு, ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக அலோக் வர்மா நியமிக்கப்பட்ட நிலையில் தனது பதவியை ஜன.11 அன்று அவர் ராஜினாமா செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்