பெண்களுக்கு ஐ.ஏ.எஸ். எட்டாக் கனியா?

By செய்திப்பிரிவு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளை அடையும் கனவோடு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே காணப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மொத்த விண்ணப்பதாரர்களுள் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தைக்கூடத் தாண்டவில்லை என்பதே நிதர்சனம். இவர்களில் 40 சதவீதம் பெண்களே முதல்நிலைத் தேர்வை எழுதுகிறார்கள்.

இவர்களிலும் 2-3 சதவீதம் பெண்களே முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகின்றனர். நேர்முகத் தேர்வை வென்று இறுதிப் பட்டியலில் இடம்பெறும் பெண்களின் எண்ணிக்கையானது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நான்கில் ஒரு பங்குதான் என்கிறது யூ.பி.எஸ்.சி.யின் ஆண்டறிக்கை.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே தேர்வின் அடுத்தடுத்த நிலைகளில் வெற்றிபெறும் பெண்களின் பங்கேற்பும் இறுதி பட்டியலில் இடம் பெறக்கூடிய சாதனைப் பெண்களின் எண்ணிக்கையும் உயரும்.

சாதனைக்குச் சவால்

குடிமைப்பணித் தேர்வுகளில் பெண்களின் பங்கேற்பும் சாதனையும் குறைவாக இருப்பதற்குப் பல்வேறு சமூகப் பொருளாதாரச் சவால்கள் அடிப்படையாக உள்ளன.

குடிமைப்பணிகள் தேர்வானது முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்று மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையும் வெற்றி தோல்வியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தேர்வின் ஒரு நிலையில் ஒருவர் தோல்வியடைந்தால் அவர் அடுத்த ஆண்டு மீண்டும் முதலில் இருந்தே தேர்வை எழுத வேண்டும்.

தேர்வுக்குத் தயாராகும் காலத்தில் அத்தேர்வைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் அவற்றுக்குத் தயாராகவும் ஏறக்குறைய ஒரு வருடக் காலம் முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே, இதுபோன்ற நீண்டதொரு தேர்வுக் காலத்தைக் கருத்தில்கொள்ளும்போது, ஒரு பெண் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டு தேர்வெழுதுவதற்கு எந்த அளவுக்குக் குடும்பங்களின் ஆதரவு இருந்துவிடப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே மிஞ்சுகிறது. அதுவும் இரண்டு, மூன்று முறை தேர்வு எழுதி வெற்றி கிடைக்கவில்லை எனில், இந்த ஆதரவு என்பது மென்மேலும் சுருங்கிவிடும்.

மாற்றத்தை நோக்கி

இந்நிலையில் போட்டித் தேர்வில் பெண்களின் பங்கேற்பை உயர்த்த நடுவண் அரசும் மத்தியக் குடிமைப் பணியாளர் தேர்வாணையமும் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் பற்றிப் பார்க்கலாம்.

2013 - லிருந்து தேர்வு விண்ணப்பத்துக்குரிய கட்டணத்தில் பெண்களுக்கு விலக்களித்துள்ளது மத்தியக் குடிமைப் பணியாளர் தேர்வாணையம். இதன் காரணமாக குடிமை பணித் தேர்வுக்கு 2012-ல் விண்ணப்பித்தவர்களைவிட 2013-ல் விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 50 சதவீதம் அதிகரித்திருந்தது.

பட்டியலின மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதற்கான இலவசப் பயிற்சியை மத்தியச் சமூக நல அமைச்சகமும் சில மாநிலங்களும் வழங்கிவருகின்றன. எனினும் இதுபோன்ற பயிற்சிகளும் உதவித் தொகைகளும் தனியாகப் பெண்களையோ அல்லது பாலினத்தையோ மையமாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. இத்தகைய இலவசப் பயிற்சி பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதுவரை தமிழகம் உட்பட நான்கு இந்திய மாநிலங்களே மாநிலக் குடிமை பணித் தேர்வுகளில் பெண்களுக்கென்று இட ஒதுக்கீடு வழங்கியுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் இது அமலாக்கப்பட வேண்டும்.

2017-ல் குடிமைப்பணித் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த நான்கு வயது மகனின் தாயான ஹரியாணாவைச் சேர்ந்த அனுகுமாரி 30 வயதைத் தாண்டியவர். ஆனால் பெண்களுக்கென்று வயது வரம்பில் தளர்வு இல்லை. இந்நிலை மாறிப் பெண்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டால், இன்னும் ஏராளமான குடும்பப் பெண்கள் இத்தேர்வை எழுதுவதற்கு நல்வாய்ப்பாக அமையும்.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் நாட்டின் உயர் நிர்வாகத்தில் பெண்களின் பங்கெடுப்பு என்பது ஆணுக்குச் சரிசமமாக இல்லாத சூழலே நிலவுகின்றது. இந்நிலை மாறக் குடிமை பணித் தேர்வுகளில் பெண்களின் பங்கேற்பும் சாதனையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு பெண்கள் எதிர்கொள்ளும் தடை கற்கள் அகற்றப்பட வேண்டும்.

- வைஷ்ணவி, சுகாதாரப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்,
ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிர்வாக இயக்குநர்
தொடர்புக்கு: vaishnavi.sd@shankarias.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்