இணையவழிக் கல்வி: தமிழுக்கும் உண்டு வேலை

By முகமது ஹுசைன்

தாய் மொழிப் பரிச்சயம் நமக்கு இயல்பாகவே உருவாகிவிடும். அந்நிய மொழியில் ஆளுமையைச் சற்று வலிந்தே உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், மொழியில் புலமை பெறுவதைப் பொறுத்தவரை, தாய் மொழி, அந்நிய மொழி என்ற பாகுபாடு கிடையாது. தாய்மொழியையும் முறையாகப் பயின்றால்தான் கைகூடும்.

பொதுவாக, பள்ளிகளில் படிக்கும்போது மாணவர்கள் தங்களின் இயல்பான ஆர்வத்தைக் கண்டுணர முடியாது. சுற்றியுள்ளவர்கள் வழிகாட்டல் என்னும் பெயரில் அவர்களது விருப்பத்தை மாணவர்கள் மீது திணிப்பார்கள். மாணவர்களும் ஏதோ ஒரு படிப்பைப் படிப்பார்கள். பட்டம் பெற்றுத் தன்னம்பிக்கை பெற்ற பின்னரே மாணவர்களுக்குத் தங்களின் இயல்பான தேடல் புரிபடும். இத்தகைய தருணத்தில் தமிழ் மொழி மீதான தங்களுடைய பேரார்வத்தை உணர்ந்தவர்கள் காலம் கடந்துவிட்டதாக நினைக்க வேண்டியதில்லை. மருத்துவம், பொறியியல், அறிவியல் மட்டுமல்ல; மொழியும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சிறந்த படிப்பே. குறிப்பாக, தமிழ் மொழி.

தமிழ் மொழிப் புலமை குறித்த உங்களுடைய தேடலை நோக்கிப் பயணிக்க இன்று தமிழுக்கென்று பல இணைய வகுப்புகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ (www.tamilvu.org)

இணையவழிப் பல்கலைக்கழகம்

தமிழை அழகாகவும் தெளிவாகவும் எளிதாகவும் கற்றுக்கொள்ளும் விதமாக இந்த இணையவழிப் பல்கலைக்கழகத்தில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாடங்கள் மட்டுமின்றிப் புத்தகங்களும் அகராதிகளும் கொண்ட நூலகத்தையும் தரவுகள், தமிழ் செயலிகள், ‘கான் அகாடமி’ (khan academy) வீடியோக்கள் ஆகியவை அடங்கிய கணித்தமிழ் பக்கத்தையும் அது கொண்டுள்ளது.

பாடங்கள் வடிவமைப்பு

மழலைக் கல்வி, சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு எனக் கல்வித் திட்டங்கள் அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மழலைக் கல்வியில் இளம் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கற்பதற்குமுன், தானே பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைப் பாடங்கள் தரப்பட்டுள்ளன. பெரியவர்களுக்கு அவர்களின் திறனைப் பொறுத்து ‘BB00’ அடிப்படை நிலை, ‘BM00’ இடைநிலை, ‘BA00’ மேல்நிலை போன்ற சான்றிதழ் படிப்புகளும் பட்டயப் படிப்பும் மேற்பட்டயப் படிப்பும் இளநிலைப் பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

வகுப்புகள் அதுவும் இணையவழித் தமிழ் வகுப்புகள் என்றவுடன் அலுப்பாக இருக்கும் என்று சிலர் நினைக்கலாம். சர்க்கரைப் பொங்கலைச் சுவைத்தபடி முனைவர் மா. நன்னன் வழங்கும் ‘தமிழ் கற்போம்’ என்ற அதன் அறிமுக வீடியோவே அவர்களின் அலுப்புக்கு மருந்து. மேலும், கவிக்கோ ஞானச்செல்வன் வழங்கும் ‘நல்ல தமிழ் அறிவோம்’ எனும் தொடர் சொற்பொழிவு நல்ல தமிழை வெகு இயல்பாகப் பார்ப்பவருக்குப் புரியவைக்கிறது. பத்துப் பகுதிகளைக் கொண்ட அந்தத் தொடர் சொற்பொழிவு முழுவதையும் பார்ப்பதற்கு மொத்தமாக ஐந்து மணி நேரம் பிடிக்கும். அதை முழுவதும் கேட்பவர்களுக்குத் தமிழில் நிபுணத்துவம் கைகூடும்.

ஏன் படிக்க வேண்டும்?

மேற்கத்திய நாடுகளின் பாதிப்பாலும் உலகமயமாக்கலின் தாக்கத்தாலும் அச்சுத் துறை முன்பைக்காட்டிலும் இப்போது சிறப்பாக முறைப்படுத்தப்பட்டுவருகிறது. இப்போது எந்த எழுத்தாளரும் வறுமையில் வாடுவதில்லை. எழுத்தாளர்களுக்குச் சன்மானம் முறையாக வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வருமானம் மேற்கத்திய எழுத்தாளர்களின் வருமானத்தை நெருங்கிவிட்டது. சினிமா பாடலாசிரியர்களின் வருமானமும் இன்று அதிகரித்திருக்கிறது. ஊடகத் துறையும் தன் பங்குக்கு இன்று சொல்லிக்கொள்ளும்படியான ஊதியத்தைச் செய்தியாளர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் வழங்குகிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. எழுத்தாளரோ பாடலாசிரியரோ தமிழ் ஆசிரியரோ யாராக இருந்தாலும், தேவை ஒரே ஒரு விஷயம்தான். அது தமிழ்மொழிப் புலமை. தமிழில் பண்டிதம் மிக்கவர்களுக்கு மிகப் பெரிய வறட்சி இன்று நிலவுகிறது. தமிழையும் அதன் இலக்கணத்தையும் முறையாகப் படித்தால் வேலை மட்டுமல்ல; நல்ல சம்பளமும் கிடைக்கும்.

இணைய நூலகம்

# நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொற்கள், கலைக்களஞ்சியங்கள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம், தமிழிணையம் போன்றவை தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நூலகத்தில் உள்ளன.

# குழந்தைகளுக்கான புத்தகங்கள் முதல் சங்க இலக்கியப் புத்தகங்கள்வரை பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன.

Pal’s Dictionary (Eng-Tamil), மு. சண்முகம் பிள்ளையின் தமிழ் - தமிழ் அகரமுதலி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில - தமிழ் அகராதி, Tamil Lexicon Vol - 1 to 7, த.இ.க.வின் - உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி (பாட்டும் தொகையும்), காலக் குறிப்பு அகராதி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உள்ளிட்ட பல பயனுள்ள அகராதிகளும் உள்ளன.

# தமிழ் இணையக் கல்விக்கழகம் - www.tamilvu.org

# புத்தகங்கள், அகராதிகள் கொண்ட நூலகம் இது

# தரவுகள், தமிழ் செயலிகள், ‘கான் அகாடமி’ (khan academy) வீடியோக்கள் ஆகியவை அடங்கிய கணித்தமிழ் பக்கமும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்