புதுத் தொழில் பழகு 10: எதிர்பாராமல் கிடைத்த தொழில்!

By ஜெய்குமார்

 

தொ

ழில் தொடங்குவதற்காகப் பலவிதமான திட்டங்களை முன்பே தயார் செய்து தொடங்குவோர் உண்டு. சிலர் தங்கள் பரம்பரைத் தொழிலையே தொடர்வார்கள். சொற்பமானவர்கள்தாம் பெரிய திட்டமிடல் இல்லாமல் சொந்தத் தொழிலில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆறுமுகம். விபத்தில் விழுவதுபோல அவர் விழுந்து முத்தெடுத்த தொழில் ‘ரப்பர் பேண்ட்’ தயாரித்தல்.

வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுவந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகத்துக்கு, அதற்கு முன்பு ரப்பர் பேண்ட் தயாரிப்புத் தொழில் குறித்து ‘ஆனா ஆவன்னா’கூடத் தெரியாது. வாகனம் வாங்கிய பிறகு ஓட்டிப் பழகுவதுபோலத் தொழிலைத் தொடங்கித்தான் பழகியுள்ளார். அதனால் பொருளாதாரரீதியாகச் சில தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. அது அவருக்குப் பலன் கொடுத்தது.

நன்மை தந்த விபத்து...

இடங்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலையும் முயற்சித்துள்ளார். அதேநேரம், நிலையான ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்றும் நினைத்துள்ளார். எந்தத் தொழிலும் ஒத்துவராத நேரத்தில், ஒரு நிலத்தை வாங்கியுள்ளார். பணப் பரிவர்த்தனை முடிந்த பிறகும் நிலத்தை விற்றவர் கிரயம் செய்து கொடுக்கவில்லை. அந்த நிலத்தில் ரப்பர் பேண்ட் தயாரிக்கும் இயந்திரங்கள் இருந்துள்ளன. அதை விற்ற பிறகுதான் கிரயம் செய்துதர முடியும் என்றிருக்கிறார் விற்ற நபர். வேறு வழியில்லாமல் அந்த இயந்திரங்களுடன் சேர்த்து அந்த இடத்தை வாங்கியுள்ளார்.

23CH_Arumugam ஆறுமுகம்

அந்த இயந்திரங்களை விற்றுவிடலாம் என்று நினைத்தபோதுதான், ஏன் இதை வைத்துத் தானே ரப்பர் பேண்ட் தயாரிக்கலாமே எனத் தோன்றியுள்ளது. அந்தத் துறை சார்ந்தவர்களிடம் ஆலோசித்துள்ளார். பிறகு அது குறித்துக் கற்றுக்கொண்டு, ரப்பர் பேண்ட் தொழிலை விரைவிலேயே தொடங்கியுள்ளார். நிறுவனத்துக்கு ‘ஸ்லோகன் எண்டர்பிரைசஸ்’ எனப் பெயர் வைத்துள்ளார்.

ரப்பர் பேண்ட் தயாரிப்பு குறித்து முறையான பயிற்சி இல்லாததால், முதலில் அதில் சில சிரமங்களைச் சந்தித்துள்ளார். அடுத்ததாக, ரப்பர் பேண்ட் தயாரித்தால் மட்டும் போதாதல்லவா? விற்க வேண்டுமே. தொடக்கத்தில் அது பெரும் சவாலான காரியமாக இருந்துள்ளது. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில்தான், அதற்கான பெரிய சந்தை இருப்பதைப் போகப்போக அறிந்துகொண்டார். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருந்துள்ளது. ஆறுமுகத்துக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும், பேசத் தெரியாது. ஆனாலும் தட்டுத் தடுமாறித் தனது நிறுவனத்துக்கான ஆர்டரை வடமாநிலங்களில் இருந்து பெற்றார். தன்னுடைய சொந்த ஊரில் இருந்தபடியே ரப்பர் பேண்டுகளைத் தயாரித்து வெளி மாநிலங்களில் விற்கத் தொடங்கினார்.

“இந்த ரப்பர் பேண்ட் தயாரிக்கும் தொழிலில் நான் நுழைந்தது ஒரு விபத்து மாதிரிதான். காயங்களுக்குப் பதில் நன்மையைத் தந்த விபத்து அது” என்கிறார் ஆறுமுகம்.

சாதாரண ரப்பர் பேண்ட், நைலான் ரப்பர் பேண்ட் என இரு வகையான ரப்பர் பேண்ட்களை இப்போது தயாரித்துவருகிறார். ரப்பரை நம்பியுள்ள தொழில் என்பதால் ரப்பர் பால் வராத காலத்தில் தொழில் சற்றுத் தொய்வுடன் இருக்கும் என்கிறார் ஆறுமுகம். ஆனால், மற்ற காலத்தில் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, இதை ஈடுகட்ட வேண்டும். இதுபோல பல சவால்களையும் சமாளித்து வெற்றிகண்டுள்ளார் ஆறுமுகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்