சேதி தெரியுமா? - தோனி 600 ‘கேட்ச்’கள்

By கனி

காவிரி உச்ச நீதிமன்ற தீர்ப்பு

காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு பிப்ரவரி 16 அன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தில் தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 177.25 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டி.எம்.சி. தண்ணீரோடு, 14.75 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. அத்துடன், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

குரூப் 4 தேர்வு எழுதிய முனைவர் பட்டதாரிகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், விஏஓ உள்ளிட்ட 9,351 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை பிப்ரவரி 11 அன்று நடத்தியது. இந்தத் தேர்வுகளை எழுதுவதற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு. இந்தத் தேர்வை எழுதுவதற்காக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தத் தேர்வுக்கு 992 முனைவர் பட்டதாரிகள், 23,049 எம்.பில் பட்டதாரிகள், 2.53 லட்சம் முதுநிலைப் பட்டதாரிகள், 1.90 லட்சம் பி.இ., பி.டெக் பட்டதாரிகள், 8 லட்சம் இளநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்த தகவலைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கி - நிரவ் மோடி மோசடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்ததற்காக, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மீது பிப்ரவரி 13 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் செய்தது. இந்த மோசடி தொடர்பாக பிப்ரவரி 15 அன்று வழக்குப்பதிவு செய்த சிபிஐ, நிரவ் மோடியையும் குடும்பத்தினரையும் தேடிவருகிறது.

அவரின் பங்குதாரர் மெஹுல் சோக்ஸியின்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக் கிளையில் இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில், ஜனவரி 1 அன்றே நாட்டைவிட்டு வெளியேறிய நிரவ் மோடி, தற்போது நியூயார்க்கில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

தோனி 600 ‘கேட்ச்’கள்

தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் பிப்ரவரி 16 அன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 5-1 எனக் கைப்பற்றியது. இப்போட்டியில், தென் ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் தோனியின் 600-வது கேட்ச் ஆகும். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி, 774 விக்கெட்கள் வீழ்வதற்குக் காரணமாக இருந்துள்ளார். தோனிக்கு முந்தைய இடங்களில் மார்க் பவுச்சர் 952 கேட்ச்களுடனும் ஆடம் கில்கிரிஸ்ட் 813 கேட்ச்களுடனும் இருக்கின்றனர்.

மும்பை: 12-வது பணக்கார நகரம்

‘நியு வேர்ல்டு வெல்த்’ நிறுவனம் பிப்ரவரி 11 அன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பை, உலக அளவில் 12-வது பணக்கார நகரமாக இடம்பெற்றிருக்கிறது. மும்பையின் சொத்து மதிப்பு 95,000 கோடி அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

அரசின் நிதிகளைத் தவிர்த்து, தனிநபர் சொத்துகள், பணம், பங்குகள், வியாபார முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பணக்கார நகரங்களின் பட்டியலில் நியூயார்க் முதலிடத்திலும், லண்டன் இரண்டாவது இடத்திலும், டோக்கியோ மூன்றாவது இடத்திலும் உள்ளன.

 

வானொலித் திருவிழா

இந்தியாவின் முதல் வானொலித் திருவிழா, டெல்லியில் அமைந்திருக்கும் ‘யுனெஸ்கோ’ இல்லத்தில் உலக வானொலி தினமான பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, உலக வானொலி தினத்தின் கருப்பொருளான ‘வானொலியும் விளையாட்டும்’ என்ற தலைப்பில், இந்த விழாவில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அத்துடன், கண்காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சர்வதேச மகளிர் வானொலி, தொலைக்காட்சி சங்கம் (Internation Association of Women in Radio and Television), யுனெஸ்கோவுடன் இணைந்து இந்த வானொலித் திருவிழாவை ஒருங்கிணைத்திருந்தது.

 

நேபாளத்தின் புதிய பிரதமர்

நேபாளத்தின் 41-வது பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி பிப்ரவரி 15 அன்று பதவியேற்றுக்கொண்டார். நேபாளக் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கே.பி. ஷர்மா இரண்டாவது முறையாக நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் அக்டோர் 2015 முதல் ஆகஸ்ட் 2016 வரை பிரதமராகப் பதவிவகித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிபஎன் (யுஎம்எல்) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேபாள காங்கிரஸ் கட்சியின் ஷேர் பஹாதூர் தேவுவா பதவிவிலகினார்.

தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபர்

சிரில் ரமஃபோஸா, தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபராக பிப்ரவரி 15 அன்று பதவியேற்றார். முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பிப்ரவரி 14 அன்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், துணை அதிபர் சிரில் ரமஃபோஸாவை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். இன்னும் ஓர் ஆண்டுக்கு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் நீடிப்பார். ஒன்பது ஆண்டுகள் அதிபராகப் பதவிவகித்த ஜேக்கப் ஜூமா, ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாகப் பதவி விலகிய நிலையில், சிரில் ரமஃபோஸா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

7 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்