தொழில் தொடங்கலாம் வாங்க 38: சங்கம் அமைப்போம்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

 

ங்கள் தொழில் சார்ந்த அமைப்பில் நீங்கள் உறுப்பினரா? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் அவசியம் ஒரு அமைப்பு இருக்கும். இல்லாவிட்டால் உருவாக்குவது அவசியம் என்று சொல்வேன். அந்த அமைப்பில் ஈடுபடுவது முக்கியம் என்பது என்னுடைய கருத்து.

அமைப்பு அவசியம்

மனித மனதின் முக்கியமான தேவைகளில் ஒன்று கூட்டம் கூட்டுதல். நாம் அடிப்படையில் ஒரு சமூக விலங்குதானே! அதனால்தான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஒரு குழுவில் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். ஒருவர் பல குழுக்களிலும் இருப்பது இதனால்தான். 10 தெருக்கள் இருந்தால் ஒரு வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்போம். வேலை சார்ந்து சங்கம் அமைப்போம். சங்கங்கள் இல்லாத சாதியே இல்லை எனச் சொல்லலாம். இது தவிர அரசியல், பக்தி, சமூகச் சேவை, கேளிக்கை, விளையாட்டு, இலக்கியம் என எல்லாவற்றுக்கும் பல அமைப்புகள் உள்ளன. இன்னமும் தெளிவாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு அமைப்பு தேவைப்படுகிறது.

இது தவிரச் சமூக ஊடகத்தில்தான் எத்தனை எத்தனை குழுக்கள்? நாம் எதில் இருக்கிறோம், நம்முடன் உள்ளவர்கள் யார் என்று கூடத் தெரியாமல் நம்மில் பலர் இயங்கிவருகிறோம். எதில் இருக்கிறீர்களோ இல்லையோ உங்கள் தொழில் சார்ந்த அமைப்பில் ஈடுபாட்டுடன் இருப்பது நல்லது. அந்த உறுப்பினர் கட்டணமும் நேரமும் பங்கீடும் உங்கள் தொழிலுக்கான மூலதனம் என்று சொல்லலாம்.

பிரச்சினைகள் வரத்தான் செய்யும்

“எனக்கு இதனால் நன்மை என்ன, அதுவும் தனியாகத் தொழில் செய்யும்போது நமக்கு இருக்கிற சுமைகளில் இதையும் ஏற்றிக் கொண்டால் நேரம்தானே விரயம் ஆகும், நான் என்ன கூட்டங்களில் கலந்துகொள்கிற அளவுக்கு வெட்டியாகவா இருக்கிறேன்?” என்றெல்லாம் நினைப்பது இயல்பு. அந்தத் தொழிலில் கரை கண்டவர்கள் பெரிய பதவிகளில் இருப்பார்கள். கண்டிப்பாக இந்த அமைப்புகளில் சிறு பொறுப்பு எடுத்துக் கொண்டாலும் நிறைய நேரம் செலவாகும். இதனால் பலர் உறுப்பினர் ஆன பிறகும் தீவிரமாகப் பங்கு கொள்வதில்லை. தவிர எல்லா வித அமைப்புகளிலும் அரசியல் இருக்கும். பல நேரங்களில் மனித உறவு பிரச்சினைகளால் மனஸ்தாபங்கள் வரும். இவை அனைத்தும் உண்மைதான்.

ஆனால், நீங்கள் ஒரு தொழிலில் நீண்ட காலம் நிலைக்க வேண்டும் என்றால் அந்தத் தொழில் சார்ந்த அமைப்பு அதற்குக் கண்டிப்பாக உதவும். ஒரு அமைப்பின் பலம் அரசாங்கம் உட்பட எந்த நிறுவனத்தை உட்கார்ந்து பேச வைக்கும். தொழில் சார்ந்த புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி தொழிலின் வாய்ப்புகள், போக்குகள், சவால்கள் என அனைத்தையும் ஆதாரத்துடன் தர வல்லது ஒரு தொழில் அமைப்பு. அதனுடன் சேர்வதன் மூலம் நீங்கள் முதலில் தொழில் தகவல்களை முழுவதாகப் பெறுகிறீர்கள். அரசாங்கம், வங்கிகள் மூலம் என்ன உதவி பெற முடியும் என்று தெரிந்து கொள்வீர்கள். தொழில் சார்ந்த வல்லுநர்கள் நடத்தும் பட்டறைகள் உங்களை மேலும் திறன் பெற வைக்கும். புதிய தொடர்புகள் கிட்டும். யோசிக்காத தொழில் வாய்ப்புகள் தேடி வரும். கூட்டு முயற்சிகள் வரும். என்ன, ஜோதிடப் பலன் சொல்வதுபோலத் தோன்றுகிறதா? நம்புங்கள், அத்தனையும் நடக்கும்.

எப்படி ஆரம்பிப்பது? முதலில் நீங்கள் சேரத்தக்க தொழில் அமைப்புகள் என்னென்ன உள்ளன என்று பட்டியல் இடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த அமைப்பின் வலைத்தளம் இருந்தால் பாருங்கள். அதன் நோக்கங்களை ஆராயுங்கள். தலைமை பொறுப்பில் உள்ள மனிதர்களின் நம்பகத்தன்மையை அலசுங்கள். சென்ற ஆண்டின் நடவடிக்கைகள் என்ன என்று அறிந்துகொள்ளுங்கள். அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள் கிடைத்தால் படியுங்கள். முதலில் ஒரு கூட்டத்துக்குச் சென்று வாருங்கள். ஓராண்டு சந்தா கட்டுங்கள். முழு நம்பிக்கை வந்தபின் ஆயுள் சந்தா பற்றி யோசிக்கலாம்.

அனுபவங்களும் தொடர்புகளும்

எனக்கும் தொழில் தொடங்கிய புதிதில் சங்கத்தின் மீது நம்பிக்கையோ மரியாதையோ இல்லை. 10 வருடங்கள் கழித்து, சற்று விவரம் தெரிந்தபின் (!), அதே அமைப்பிலிருந்து (ஐ.எஸ்.டி.டி) செயலாளர் ஆகப் பணியாற்ற அழைத்தார்கள். என் சொந்தத் தொழில் வளரும் என்ற எண்ணத்தைவிடப் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் நிறைய செய்ய ஆரம்பித்தேன். சென்னை கிளைத் தலைமைப் பொறுப்பிலிருந்து நேரடியாகத் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தொடர்ந்து இரு முறை வென்றது எனக்குத் தனிப்பட்ட அங்கீகாரத்தை மட்டும் தரவில்லை. அளவில்லாத கற்றலைத் தந்தது.

இன்று மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கையின் கூட்டத்துக்கு அழைக்கப்படுகிறேன். நாடு முழுவதும் சுற்றிப் பல பொதுத்துறை நிர்வாகிகளைச் சந்தித்துவர முடிகிறது. திறன் வளர்ப்பில் பெரிய திட்டங்களைக் கொண்டு வர முடிந்தது. அயல் நாடுகளுடன் ஒப்பந்தங்கள் இட முடிகிறது. இவை எதுவும் நடை பெறும் என எனக்குத் தெரியாது. அதே போல என் சொந்த நிறுவனம் இந்தப் பதவியால் நேரடியாக எந்த லாபமும் பெறவில்லை. ஆனால், செலவழித்தாலும் கிடைக்காத பல அனுபவங்களும் தொடர்புகளும் இன்று கிட்டியுள்ளன. பிற்காலத்தில் இவை என் தொழிலுக்கு உதவாதா என்ன?

வாய்ப்பு கிடைக்கும் என்று அமைப்பை நாடாதீர்கள். அமைப்புக்கு வந்து பங்களியுங்கள். வாய்ப்புகள் வரும். புரியவில்லையா? டெண்டுல்கர் பணம் வரும் என்று எண்ணி கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கவில்லை. உலகம் போற்றும் ஆட்டக்காரர் ஆனதால் இன்று அவருக்குப் பணம் கொட்டுகிறது! 

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்