IPL 2023: RCB vs DC | அறிமுக வீரர் வேகத்தில் வீழ்ந்த டெல்லி - 23 ரன்களில் ஆர்சிபி வெற்றி!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-ஆவது ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இணை அணிக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. 4-ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தில் 22 ரன்களுடன் அவுட்டாகி டு பிளெசிஸ் ஏமாற்றமளித்தார். கேப்டன் கோலியும் 50 ரன்களில் கிளம்பினார். மஹிபால் லோமரோர் 2 சிக்சர்களை 26 விளாசினாலும் 26 ரன்களுடன் அவுட்டானார்.

ஹர்ஷல் படேல் 6 ரன்களுடன் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, க்ளென் மேக்ஸ்வெல் 3 சிக்சர்களை விளாசி நம்பிக்கையளித்த போதிலும் 24 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். வீரர்கள் சோபிக்காததால் 15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த ஆர்சிபி 134 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அனுஞ் ராவத் 15 ரன்களையும், ஷாபாஸ் அகமது 20 ரன்களையும் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 174 ரன்களைச் சேர்த்தது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், லலித் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லிக்கு டேவிட் வார்னர், பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுக்க 3-வது பந்திலேயே பிரித்விஷா ரன் அவுட்டானார். அடுத்துவந்த மிட்செல் மார்ஷும் ரன் எடுக்காமல் கிளம்பினார். 2 ஓவரில் 2 ரன்களில் 2 விக்கெட் என பரிதாபமாக தொடங்கியது டெல்லி பேட்டிங். ஓவருக்கு ஒரு விக்கெட்டாக அடுத்து 3-வது ஓவரில் யஷ்துல் அவுட்டானார். வார்னரும் 19 ரன்னில் பெவிலியன் திரும்ப அணியின் நிலை மோசமானது. இப்படியே விட்டால் வேலைக்காகாது என மனிஷ் பாண்டே விளாசினார்.

அவருக்கு எதிர்புறம் வந்தவர்கள், ‘நீ ஆடு தல’ என சொல்லிவிட்டு வரிசையாக வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு ரன்களை சோபிக்காமல் கிளம்பிவிட்டனர். அதன்படி, அபிஷேக் போரல் 5 ரன்கள், அக்சர் படேல் 21 ரன்கள் என நடையைக்கட்ட, ‘நானும் வருகிறேன்’ என்று 50 ரன்களில் மனிஷ் பாண்டேவும் மைதானத்திலிருந்து வெளியேறினார். லலித்கான் 4 ரன்கள், அமன் ஹக்கீம் கான் 18 ரன்கள் என சோபிக்காத வீரர்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 151 ரன்களை மட்டுமே டெல்லியால் சேர்க்க முடிந்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணி தரப்பில், அறிமுக வீரரான வைசக் விஜயகுமார் 3 விக்கெட்டையும், சிராஜ் 2 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல், வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அறிமுக ஆட்டக்காரராக இந்த ஐபிஎல் போட்டியில் களமிறக்கப்பட்ட வைசக் விஜயகுமார் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆர்சிபிக்கு பலமாக அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்