கோலி, ரோகித்தால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியாது: கபில் தேவ் திட்டவட்டம்

By ஆர்.முத்துக்குமார்

மும்பை: 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா என்றும், தோனிக்குப் பிறகு இந்தியா ரோகித் சர்மா தலைமையில் 3-வது உலகக் கோப்பையை வென்று விடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு கபில் தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கோப்பையை ஒன்றுமில்லாத நிலையிலிருந்து வென்றவர் கபில் தேவ். இன்று இந்தியாவில் கிரிக்கெட் இத்தனைப் பிரபலமாக இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் அவர் என்றால் அது மிகையாகாது. இந்திய வீரர்களின் பார்வையில் கிரிக்கெட்டின் அர்த்தத்தை மாற்றியவர்.

எப்போதும் பிசிசிஐ அதன் அதிகார - வர்த்தக கூட்டுக் கலவை வலைப்பின்னலின் செல்வாக்கையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் நேர்மையாக தன் விமர்சனங்களை முன்வைப்பவர் கபில் தேவ். இன்று பெரும் தலைகள் எல்லாம் பிசிசிஐ கொடுக்கும் சலுகைகளுக்காக விமர்சனங்களை மூட்டைக் கட்டி பரணில் போட்டிருக்கும் காலத்திலும் தொடர்ந்து கூர்மையான தன் விமர்சனங்களை முன்வைப்பதும், அவரது கருத்துகளை பரிசீலனை செய்வதும்தான் இந்திய கிரிக்கெட்டின் இப்போதைய வர்த்தக சந்தை நலம் பாராட்டுதல்களில் இருந்து விடுவிக்கும்.

கபில் தேவ், தனியார் செய்தி சேனலுக்காக அளித்த பேட்டியில் 2023 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் அளித்துள்ளார். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை என்று கூறி உள்ளார். அதாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமா 5 அல்லது 6 மேட்ச் வின்னர்களை அணியில் உருவாக்க வேண்டும். இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்.

“உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமா? பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.

உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும்.

எப்போதும் ஒன்றிரெண்டு வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன் வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்” என்றார் கபில் தேவ்.

அன்று நாம் கூறியது போல் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதைத்தான் கபில் தேவும் கூற வருகிறார். ஆனால், ஐபிஎல் லாபி, ஐபிஎல் தொடர்பான, வர்த்தகச் சக்திகள் பிசிசிஐ ஸ்பான்சர் அமைப்பில் இருப்பதாலும், அந்த ஸ்பான்சர்களின் ஸ்பான்சர் பிம்பங்களாக அணியின் சூப்பர் ஸ்டார்கள் இருப்பதாலும் கபில் தேவ் கூறும் மாற்றம் 2025 வரை வராது என்று தைரியமாகக் கூறலாம்.

விராட் கோலியின் எம்.ஆர்.எஃப் டயர்ஸ் ஸ்பான்சர் 2025 வரை உள்ளது. இதே போல் இன்னும் எத்தனையோ உள்ளது... மாற்றம் முன்னேற்றம் வருமா என்பது கேள்விக்குறியே! இந்த வர்த்தக நலம் பாராட்டுதல்கள், செல்வாக்குகள், ஐபிஎல் வர்த்தக செல்வாக்குகள் இருப்பதால்தான் அணித்தேர்வில் இத்தனை தகிடுதத்தங்களுக்கு பல்வேறு போலி நியாயங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

30 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்