T20 WC அரையிறுதி அலசல் | மீண்டெழுந்த இங்கிலாந்தின் ஆக்ரோஷமும், அம்பலம் ஆன இந்திய அணியின் போதாமைகளும்!

By ஆர்.முத்துக்குமார்

சிட்னியில் புதன்கிழமை நியூஸிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்திய உடனேயே மெல்போர்ன் இறுதியில் இந்தியா, பாகிஸ்தான்தான் என்று உத்தரவாதமாக நினைத்து பூரிப்படைந்த இந்திய ரசிகர்களுக்கு வியாழக்கிழமை இங்கிலாந்து அதிர்ச்சி அளித்ததோடு, ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது. இந்திய அணியின் பவுலிங் பலவீனத்தை இங்கிலாந்து இதன்மூலம் அம்பலப்படுத்திவிட்டது.

அயர்லாந்திடம் தோற்ற, இலங்கை நிர்ணயித்த குறைந்த இலக்கை எட்ட திக்கித் திணறி கடைசியில் போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இன்று இத்தனை ஆக்ரோஷமாக வெற்றி பெற்று இந்திய அணியை ஊதித் தள்ளியது என்றால் இந்திய டி20 அணியில் பிரச்சினைகள் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்திய பந்துவீச்சின் பலவீனத்தை வங்கதேசம் அன்று அம்பலப்படுத்தியது. அன்றைய போட்டியில் லிட்டன் தாஸ் காட்டிய அதிரடியை வேறு ஒரு தளத்தில் இன்று பட்லரும், அலெக்ஸ் ஹேல்சும் காட்டிவிட்டனர்.

இந்திய அணியின் போதாமைகள் இவை:

  1. முதல் 10 ஓவர்களில் நிதானமாக ஆடுவது. (இன்று முதல் 15 ஓவர்களில் 100 ரன்களையே எடுத்தோம்)
  2. பந்துவீச்சில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க ஆளில்லை.
  3. ஆஸ்திரேலிய பிட்ச்களில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் நிச்சயம் தேவை. ஒரு போட்டியில் கூட சஹலை முயற்சிக்காமல் போனது. அக்சர் படேலை அணியில் எடுத்து, அவரை எப்படி பயன்படுத்துவது என்றும் சரியான திட்டம் இல்லாதது. ஒன்று அவரை ரன் எடுக்க திணறும் தருணங்களில் பிஞ்ச் ஹிட்டர் போல் இறக்கி அடிக்கச் சொல்லி இருக்கலாம். பவுலிங்கைப் பொறுத்தவரை அவரை எப்படி, எப்போது பயன்படுத்துவது என்பது பற்றிய திட்டம் எதுவும் இல்லை.
  4. கே.எல்.ராகுலை நம்பி தொடக்க பொறுப்பை ஒப்படைத்தது.
  5. தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அஸ்வின் ஆகியோர்களின் டி20 திறமையை அளவுக்கதிகமாக நம்பியது.
  6. அணித்தேர்வில் சொதப்பி இளம் வீரர்களான தேர்வு செய்யாமல் இருந்தது.
  7. ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறமை இருதரப்பு தொடர்களில் பரவாயில்லை ரகம், ஆனால் பெரிய தொடர்களில் அவரது அணித்தேர்வும் கள வியூகம், அவரது பேட்டிங் ஆகியவை எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை என்பதும் கவனத்துக்குரியது.

இருதரப்பு தொடர்களில் மேற்கொள்ளப்படும் தர்க்கம் பல்வேறு அணிகளுடன் ஆடும் ஐசிசி தொடர்களில் எடுபடாது. இந்த உலகக் கோப்பையில் இரண்டு பாசிட்டிவ் ஆன விஷயம் பேட்டிங்கைப் பொறுத்தவரை விராட் கோலி பிரமாதமாக தன் ஃபார்மை மீட்டெடுத்து 4 அரைசதங்களை பதிவு செய்துள்ளது. மற்றொன்று சூர்யகுமார் யாதவ் என்ற 360 டிகிரி வீரர் எதிரணியினருக்கு பெரிய அச்சுறுத்தலாக எழுச்சி பெற்றது. பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் தவிர யாரும் தேற மாட்டார்கள், ஹர்திக் பாண்டியா உட்பட.

இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோற்றதற்கு காரணம் ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களையே அடித்தது. இவரது திறமைக்கு 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தாலோ, ராகுல் ஒரு 25-30 ரன்களை 15 பந்துகளில் எடுத்திருந்தாலோ ஸ்கோர் 200 ரன்களுக்கு சென்றிருக்கலாம். இது 200 ரன்கள் எடுக்க வேண்டிய பிட்ச். சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனதுதான் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பெருமை பட்லரையும், ரஷீதையும் சாரும்.

பட்லர் அற்புதமாக கேப்டன்சி செய்தார். அவர் ரஷீதையும், லிவிங்ஸ்டனையும் பயன்படுத்திய விதம் அருமையான கள வியூகம். அதுவும் சூர்யகுமார் யாதவை கொஞ்சம் யோசிக்க வைத்தார். கடைசியில் அவரை எக்ஸ்ட்ரா கவரில் அடிக்கும் வகையில் யோசிக்க வைத்து கொஞ்சம் வைடாக பந்து வீசி விக்கெட்டை வீழ்த்தினார் ரஷீத். அனைத்திற்கும் மேலாக பட்லர் பேட்டிங்கில் இறங்கி செம காட்டு காட்டியது என ஒரு முழுமையான கேப்டனாக அவரை எடுத்துக் காட்டியது.

மாறாக ரோகித் சர்மாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, காரணம் அவரிடம் ஆப்ஷன்கள் இல்லை. புவனேஷ்வர் குமாரை பவுண்டரிகள் விளாசினால் ஷமியையும், அஸ்வினையும் கொண்டு வந்தால் சிக்சர்கள் விளாசுகிறார்கள். ரோகித் சர்மாவுக்கு ஆப்ஷன்களே இல்லை. இங்குதான் கேப்டன்சியில் புது விதங்களை, புதிய உத்திகளைக் கையாள வேண்டும். அதற்கெல்லாம் தென் ஆப்பிரிக்காவின் ஹான்சி குரோனியே, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இந்தியாவின் தோனி போன்று மைதானத்தையும், களத்தையும் சிறப்பாக கணித்து, அதற்கேற்ப அணித்தேர்வு செய்யும் திறமை அவசியம்.

எப்படிப் பார்த்தாலும் அரையிறுதி வரை வந்த இந்திய அணியை நாம் ரொம்பவும் குறை சொல்ல முடியாது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதை வைத்து இந்திய ரசிகர்கள் நமக்குத்தான் கோப்பை என்று ஒரு முடிவுக்கு வந்து மேட்சைப் பார்ப்பதால் ஏமாற்றமாக இருந்திருக்கும். மாறாக தோனி சொல்வது போல் அரையிறுதி வரைதான் நாம் கணிக்க முடியும். முயற்சி செய்ய முடியும். அரையிறுதி வந்து விட்டால் அது Anybody's Game என்று கூறுவார், அதுதான் சத்தியமான வார்த்தை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்