ரோஹித்- கோலி இடையே பிளவு உறுதியாகிறதா? எரியும் தீயில் எண்ணெய் வார்க்கும் முகமது அசாருதீன் 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எரியும் தீயில் நெய் வார்த்ததைப் போல் என்று சொல்வார்கள். அதுபோல், ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே மோதலும், பிளவும் இருப்பதாகத் தகவல்கள் வந்த நிலையில் அது உறுதியாகிறதா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17-ம் தேதி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக பிசிசிஐ நேற்று முறைப்படி அறிவித்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மகளின் முதல் பிறந்த நாள் வருவதால் அப்போது குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என்பதால், இந்த விலக்கை கோலி கேட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன்ஷிப்பைப் பறித்த விவகாரத்தில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே லேசான உரசல், மோதல் இருப்பதாகப் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன. ஆனால், கோலி தலைமையில் டெஸ்ட் போட்டித் தொடரில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகியதும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் தொடரில், மகளின் பிறந்த நாளைக் காரணம் காட்டி கோலி, விலக்கு கேட்பதும் பல்வேறு சந்தேகங்களை கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களிடையே எழுப்புகிறது.

ரோஹித் சர்மா தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளதைத்தான் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால், காயத்திலிருந்து ரோஹித் சர்மா குணமடைந்து, ஒருநாள் தொடருக்கு வந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென விராட் கோலி விலக்கு கேட்கும் சூழல்தான் இருவருக்கும் இடையிலான மோதல், உரசல், ஈகோ விவகாரங்களை உறுதி செய்கிறது.

கடந்த ஆண்டு இதேபோன்று இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் பயணத்தில் இருந்தபோது, மனைவிக்குப் பிரசவம் எனக் கூறி ஒரு டெஸ்ட்டில் மட்டும் பங்கேற்று கோலி தாயகம் திரும்பினார். அந்த டெஸ்ட் தொடரில் கோலி இல்லாமல் இளம் இந்திய அணி சிறப்பாக ஆடிக் கோப்பையை வென்று நாடு திரும்பியது.

இந்த ஆண்டும் தனது குடும்பத்தினரைக் காரணம் காட்டி கோலி விலக்கு கேட்கிறாரா அல்லது ரோஹித் தலைமையில் விளையாடுவதற்கு அவரின் மனநிலை இடம் கொடுக்கவில்லையா என்பது தெரியவில்லை.


இதே கருத்தைத்தான் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாததை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கோலி ஓய்வு எடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், அதற்கான சரியான நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை இந்தச் செயல் உறுதி செய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக் கொடுக்காதவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சினிமா

21 mins ago

விளையாட்டு

27 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

25 mins ago

மேலும்