காட்டடியில் இடத்தை தக்கவைத்த ராகுல், இஷான்: கோலி சொதப்பல்: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை புரட்டிய இந்திய அணி

By க.போத்திராஜ்


கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தில் துபாயில் நேற்று நடந்த டி20உலகக் கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷன் வலுவான தொடக்கத்தை அளித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி எடுத்த இருவரும் சிக்ஸர், பவுண்டர்களாக விளாசினர். இங்கிலாந்து அணியில் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவி்ல்லை. கிறிஸ் வோக்ஸ் பந்துகள் சிக்ஸர்களாகப் பறந்தன.

அதிரடியாக ஆடிய ராகுல் 24 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில்(3சிக்ஸர்,6பவுண்டரி) மார்க் உட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.முதல் விக்கெட்டுக்கு இஷான் கிஷன், ராகுல் இருவரும் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த கேப்டன் கோலி, 11 ரன்னில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் அதில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோலி களமிறங்கியவுடன் அவருக்கு வேகப்பந்துவீச்சு வீசுவதை நிறுத்திவிட்டு, சுழற்பந்துவீச்சாளர்கள் கொண்டுவரப்பட்டனர். ஐபிஎல் டி20 தொடரில் ஒழங்காகப் பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் தெரியாத லிவிங்ஸ்டோன் வீசிய லெக் ஸ்பின்னில் இறங்கி அடிக்க கோலி முயன்றார். ஆனால், பந்து பேட்டிங் முனையில் பட்டு தேர்டுமேன் திசையில் ரஷித்திடம் கேட்சானது. கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ரிஷப் பந்த், இஷான் கிஷனுடன் சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். மொயின் அலி பந்துவீச்சில் ரிஷப் பந்த் தொடர்ந்து இரு சிக்ஸர்களை விளாசினார்.
இஷான் தனக்கே உரிய ஸ்டைலில் இங்கிலாந்து பந்துவீச்சை விளாசித் தள்ளினார்.

46 பந்துகளில் 70 ரன்கள் சேரத்த நிலையில் இஷாந் கிஷன் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 7பவுண்டரிகல் அடங்கும். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரிலிருந்து ஃபார்மில்லாமல் தவித்துவரும் சூர்யகுமாரின் மோசமான ஆட்டம் பயிற்சி ஆட்டத்திலும் தொடர்ந்தது.

ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வதற்காக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். ரிஷப் பந்த்துடன் சேர்ந்த ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் வெற்றிக்குத் தேவையான ரன்களும், ரன்களும் சமமானநிலைக்கு வந்தபோது ஹர்திக் அதிரடியாக ஆடத் தொடங்கினார்.

ஜோர்டன் வீசிய 19-வது ஓவரில் இரு பவுண்டரிகளை பாண்டியா அடிக்க, ரிஷப் பந்த் ஒரு சிக்ஸரை அடித்தார், இது தவிர பைஸில் 5 ரன்கள் செல்லவே அந்த ஓவரில் இந்திய அணிக்கு 23 ரன்கள் கிடைத்ததால் வெற்றி பெற்றது. பாண்டியா 12ரன்களிலும், ரிஷப் பந்த் 29 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரராக களமிறங்கும் இடத்தில் கே.எல்.ராகுல் தனக்குரிய இடத்தை வலுவாகப் பிடித்துவிட்டார். ராகுல் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாகவும், கோலி ஒன்டவுனில் களமிறங்குவார் எனத் தெரிகிறது. நடுவரிசையில் சூர்யகுமார் தொடர்ந்து சொதப்பி வருவதால், இஷான் கிஷனுக்கு தனக்குரிய இடத்தை வலுவாக்கி வருகிறார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை புவனேஷ்வர் வீசிய 4 ஓவர்களில் 54 ரன்களைவாரி வழங்கினார். ஷமி 4 ஓவர்கள் வீசி40 ரன்கள் வழங்கினாலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சஹலுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட சஹர் 4ஓவர்கள் வீசி 43 ரன்கள் வழங்கினார். அஸ்வின் விக்ெகட் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்களைக் கட்டுக்கோப்பாக வீசி23 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை மோர்கனுக்குபதிலாக பட்லர் கேப்டன் பொறுப்பேற்றார். பேர்ஸ்டோ(49), லிவிங்ஸ்டோன்(30),மொயின் அலி(43)ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ஸ்கோர் செய்தனர். அரைசதத்தை நெருங்கியநிலையில் பும்ரா வீசிய யார்க்கரில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களான ஜேஸன் ராய்(17), பட்லர்(18) டேவிட் மலான்(18) ஏமாற்றினர்.

ஷமி தனது பந்துவீச்சில் ஏராளமான வேரியேஷன்களை வெளிப்படுத்தி ஜேஸன் ராய், பட்லர், லிவிங்ஸ்டோன் விக்கெட்டை சாய்த்தரார். அஸ்வின் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் அவரின் ஓவரில் ரன் அடிக்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமப்பட்டனர். சஹர் பந்துவீச்சில் டேவிட் மலான் ஆட்டமிழந்தாலும், ரன்களை வாரிக் கொடுத்தார். இதனால் அடுத்தப் போட்டியில் வருண், ஜடேஜாவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்