அண்டர் 19 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியாவை சந்திக்கிறது மே.இ.தீவுகள்

By ஆர்.முத்துக்குமார்

டாக்காவில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை போராடி வீழ்த்திய மே.இ.தீவுகள் இறுதிக்குள் நுழைந்து கோப்பைக்கான போட்டியில் இந்திய இளையோர் அணியை சந்திக்கிறது.

வங்கதேச அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 226 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணிக்கு வங்கதேசம் கடும் சவால் அளித்தது. ஆனாலும் ஷமார் ஸ்பிரிங்கர் என்ற வீரர் 62 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் மே.இ.தீவுகள் அணியை 230/7 என்று வெற்றிக்கு இட்டுச் சென்றார். இதே ஷமார் ஸ்பிரிங்கர் பந்து வீச்சில் 10 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் ஆல்ரவுண்ட் திறமைக்காக ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

உண்மையில் இரு அணிகளும் கடும் போட்டி மனப்பான்மையுடன் வெற்றியை விட்டுக் கொடுக்காமல் ஆடின, குறிப்பாக வங்கதேசம், மே.இ.தீவுகளி கடும் அதிரடித் தொடக்கத்தினாலும் மனம் துவளாமல் பந்து வீசி ஒரு நேரத்தில் 181/6 என்று மே.இ.தீவுகளை அச்சுறுத்தினர்.

227 ரன்கள் துரத்தலை ஆரம்பித்த மே.இ.தீவுகள் கிட்ரான் போப் என்ற தொடக்க வீரர் மூலம் அதிரடி தொடக்கம் கண்டது, அவர் முதல் ஓவரிலேயே 14 ரன்களை விளாசினார். வங்கதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ் முதல் ஓவரை வீச 2-வது பந்தை கிட்ரான் போப் மேலேறி வந்து லாங் ஆஃபில் அதிரடி சிக்ஸ் அடித்து அதிர்ச்சி அளித்தார். பிறகு ஒரு ஸ்வீப் ஸ்கொயர்லெக்கில் 4 ரன்கள், அடுத்ததாக லாங் ஆஃபில் மீண்டும் ஒரு பளார் ஷாட்டில் பவுண்டரி.

மேலும் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்த ஓவர்களில் அடித்து 13 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்த போப், பவுன்சரை ஹூக் செய்ததில் தவறு செய்ய பந்து ஷார்ட் பைன் லெக்கில் கேட்சாகச் சென்றது ஆனால் அது தவறவிடப்பட்டது.

மற்றொரு தொடக்க வீரர் இம்லாக் 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து 5-வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் ஸ்கோர் 44/1 என்று இருந்தது.

விக்கெட் விழுந்தது அதிரடி போப்பை கட்டுப்படுத்தவில்லை 7-வது ஓவரில் அவர் மீண்டும் மெஹதி ஹசன் மிராஸின் ஓவரை பொளந்தார். முதலில் கவருக்கு மேலே ஒரு பவுண்டரி, அடுத்து ஒரு ஸ்லாக் ஸ்வீப் இது டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ். 25 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்த போப் மீண்டும் ஒரு சுழற்று சுழற்ற பந்து சிக்காமல் பவுல்டு ஆனது. ஆனாலும் ஸ்கோர் 7 ஓவர்களில் 56/2 என்று 8 ரன்கள் வீதத்தில் இருந்தது.

அதன் பிறகு வங்கதேசம் கட்டுப்படுத்தத் தொடங்கியது. கார்ட்டி, ஹெட்மயரும் கிரீசில் இருந்தனர். மெஹதி ஹசன் ரானா, மற்றும் மொகமது சைபுதீன் கொடுத்த நெருக்கடியில் ஹெட்மயர் 16-வது பந்தில்தான் தனது முதல் ரன்னை எடுக்க முடிந்தது. 7 ஓவர்களில் 56/2 என்பதிலிருந்து அடுத்த 5 ஓவர்களில் வெறும் 14 ரன்களையே மே.இ.தீவுகளால் எடுக்க முடிந்தது. இடையே கார்ட்டி மட்டும் 2 பவுண்டரிகளை அடித்தார்.

அதன் பிறகு ஹெட்மயரும் 2 பவுண்டரிகளை அடித்து 16 பந்துகளில் 1 ரன் என்றிருந்தவர் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து 18 ரன்களுக்கு வந்தார். 18-வது ஓவரில் சயீத் சர்க்கார் என்ற பவுலர் வீச வர, ஹெட்மயர் புகுந்தார், அந்த ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 15 ரன்கள் வந்தது. 37 பந்துகளில் ஹெட்மயர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்களுக்கு விறுவிறுவென வந்தார். ஸ்கோர் 19 ஓவர்களில் 117/2 என்ற நிலையில் கார்ட்டி 22 ரன்களில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஸ்பிரிங்கர் களமிறங்கினார். ஹெட்மயர் 47 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அருமையான அரைசதம் எடுத்தார். ஆனால் 24-வது ஓவரிலிருந்து 28-வது ஓவர் வரையிலும் வங்கதேசம் மிகவும் சிக்கனமாக வீசி நெருக்கடி கொடுக்க 16 ரன்களே வந்தது. இந்நிலையில் 59 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்த ஹெட்மயர், ஆட்டமிழந்தார். 28-வது ஓவர் முடிவில் 149/4 என்று இருந்தது.

பிறகு 29-வது ஓவரிலிருந்து மொகமது சைபுதின், மொசாபெக் ஹுசைன் அருமையாக வீசி கட்டுப்படுத்த 35-வது ஓவர் வரை 15 ரன்களே எடுக்க முடிந்தது. ஆனால் இந்த ஓவரின் இடையில் இன்றைய மேட்ச் வின்னர், ஆட்ட நாயகன் ஸ்பிரிங்கர் 15 ரன்களில் இருந்த போது மொகமது சைபுதீன் பந்து வீச்சில் தனக்கு வந்த கேட்சை கோட்டை விட்டார்.

ஹெட்மயர் ஆட்டமிழந்த பிறகு அடுத்த 10 ஓவர்களில் வெறும் 30 ரன்களே எடுக்க முடிந்தது. இந்நிலையில் கூலி என்பவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு பால் அவுட் ஆகும் போது 38-வது ஓவரில் 181/6 என்று சற்றே ஆட்டம் 50:50 என்று மாறியது. ஆனால் ஸ்பிரிங்கர் 88 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 62 நாட் அவுட் என்று வெற்றி பெற வைத்தார். வங்கதேச தரப்பில் சலே அகமது ஷவோன் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொசபக் ஹுசைன் 10 ஓவர்கள் 2 மெய்டன்களுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார். 48.4 ஓவர்களில் மே.இ.தீவுகள் 230/7 என்று வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அந்த அணி முதல் 5 விக்கெட்டுகளை 113 ரன்களுக்கு இழந்தது. இதில் ஜொய்ராஜ் ஷேக் மட்டுமே அதிகபட்சமாக 35 ரன்களையும், விக்கெட் கீப்பர் ஜாகிர் ஹசன் 24 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு வங்கதேச கேப்டன் மெஹதி ஹசன் மிராஸ் (60), மொகமது சைபுதீன் (36) இணைந்து 85 ரன்களை 18 ஓவர்களில் சேர்த்தனர். இதனால் ஸ்கோர் 226 ரன்களுக்குச் சென்றது. மே.இ.தீவுகல் தரப்பில் கே.ஏ. பால் 3 விக்கெட்டுகளையும் ஸ்பிரிங்கர், ஹோல்டர் தலாஅ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வரும் ஞாயிறன்று இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை வெல்லும் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்