உலக சாம்பியன்ஷிப் போட்டி: விமானத்தில் ஏற அனுமதிக்காததால் வேதனையோடு திரும்பிய தமிழக வீராங்கனை

By வி.சுந்தர்ராஜ்

இத்தாலியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அனைத்துத் தகுதிகளுடன் மும்பை விமான நிலையம் சென்ற "இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி" வீராங்கனையை கத்தார் விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் உலக அளவிலான போட்டியில் விளையாட முடியாத வேதனையோடு ஊர் திரும்பியுள்ளார் தமிழக வீராங்கனை.

தஞ்சாவூர் மாதாக்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். இவரது இரண்டாவது மகள் பூர்ணிஷா (16). இவர் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். பூர்ணிஷா 'இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி' விளையாட்டு வீராங்கனையாக கடந்த 11 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று, மாநில, தேசிய அளவில் ஆறு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இத்தாலி நாட்டில் 'இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி' சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் அமெரிக்கா, அர்ஜென்டினா, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றன.

இதில் பங்கேற்க கடந்த ஆக.11-ம் தேதி சண்டிகரில் நடைபெற்ற தகுதித் தேர்வில், இந்தியாவிலிருந்து 10 பேர் கொண்ட மகளிர் அணியும், 16 பேர் கொண்ட ஆண்கள் அணியும் தேர்வு செய்யப்பட்டன.

இதில் மகளிர் அணியில் தென்னிந்தியாவிலிருந்து தஞ்சாவூரைச் சேர்ந்த பூர்ணிஷா மட்டுமே தேர்வாகியிருந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மகளிர் அணியினர் அனைவருக்கும் இத்தாலி செல்ல விசா வந்ததை அடுத்து அவர்கள் 9 பேரும் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இத்தாலிக்குச் சென்றனர்.

ஆனால், பூர்ணிஷாவுக்கு மட்டும் இத்தாலி நாட்டின் விசா வரத் தாமதம் ஏற்பட்டதால், இணையதளத்தில் விசாவைப் பதிவிறக்கம் செய்துகொண்டு மும்பை விமான நிலையத்துக்குச் சென்றார். அங்கு கரோனா பரிசோதனை உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துகொண்டார்.

பின்னர் இத்தாலி நாட்டுக்கு வர இருக்கும் விளையாட்டு வீரர்களின் இத்தாலி அரசின் பட்டியலையும் விமான நிலையத்தில் சமர்ப்பித்தார். பின்னர், விமான நிலைய அதிகாரிகள் விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில் அமரவைத்தனர். பின்னர் விமானம் புறப்படும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு, கத்தார் விமான நிலைய அதிகாரிகள் "இத்தாலி நாட்டின் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனக்கூறி அவரை விமானத்தில் ஏற்ற மறுத்து திருப்பி அனுப்பினர். இதனால் பெரும் மனவேதனையோடு பூர்ணிஷா சொந்த ஊர் திரும்பினார்.

இதுகுறித்து பூர்ணிஷா கூறுகையில், "எனது தந்தை ஹாக்கி வீரர். எனது சகோதரி மோனிஷா ஸ்கேட்டிங் விளையாட்டில் தேசிய சாம்பியன். எனது தாயார் பள்ளி ஆசிரியையாக உள்ளார். நான் கடந்த 11 ஆண்டுகளாக 'இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி' விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறேன். இந்தப் பயிற்சியை தஞ்சாவூர், திருச்சியில் தொடர்ந்து எடுத்து வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதியானதை அடுத்து ரூ.70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக ஹாக்கி மட்டை, ஸ்கேட்டிங் ஷூ ஆகியவற்றை வாங்கித் தொடர் பயிற்சியில் ஈடுபட்டேன்.

எனக்கு இத்தாலி நாட்டிலிருந்து விசா வரத் தாமதம் ஏற்பட்டது. விசாவை ஆன்லைனில் வந்ததும் அதனைப் பதிவிறக்கம் செய்து அதில் தமிழக அரசு, மத்திய அரசிடம் அனுமதி பெறவே, சென்னை, டெல்லி, மும்பை என 10 முறை விமானத்தில் அலைந்தோம். எனக்குத் தமிழக அரசும், மத்திய அரசு அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து சான்றிதழ்களைப் பெற உதவினர். 10-ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள, கடைசியாக 9-ம் தேதி நான் மும்பையிலிருந்து இத்தாலி சென்றுவர ரூ.1.40 லட்சம் செலவில் டிக்கெட் பதிவு செய்திருந்தோம்.

இதற்காக 9-ம் தேதி மும்பை விமான நிலையத்துக்குச் சென்றதும், எனது ஆவணங்களைப் பரிசோதித்து, பயணிகள் காத்திருப்போர் கூடத்தில் அமர வைத்தனர். விமானம் இரவு 10 மணிக்குப் புறப்படும் முன்பாக வந்த கத்தார் விமான நிலைய அதிகாரிகள் என்னை அழைத்து, "இத்தாலி நாட்டின் மருத்துவச் சான்றிதழ் இருந்தால்தான் விமானத்தில் ஏற முடியும்" எனக் கூறினர்.

நான் உடனடியாக இத்தாலி குடியுரிமை அதிகாரிகள், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டேன். அவர்கள் செல்போன் மூலம் பேசி அங்குள்ள அதிகாரிகளிடம் விளையாட்டு வீரர்களுக்கு இந்த மருத்துவச் சான்று தேவையில்லை எனக் கூறியும், ஏற்கெனவே இதேபோல் வீரர்கள் சென்றுள்ளனர் எனக் கூறியும் அதனை கத்தார் விமான நிலைய அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதனால் நான் விமான நிலையத்துக்குள் சென்றும், விமானத்தில் ஏறி இந்திய அணிக்காக விளையாட முடியாமல் திரும்பிவிட்டேன். இந்தச் சம்பவத்தை நினைத்தால் எனக்கு வருத்தத்தில் அழுகைதான் வருகிறது. எனக்கு நிகழ்ந்தது போன்று, இனி எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஏற்படக் கூடாது. இத்தாலி செல்வதற்காக நானும் என் குடும்பத்தினரும் ஒரு வார காலம் சரியாகத் தூக்கம் இல்லாமலும், சரியாகச் சாப்பிடாமலும் இருந்துள்ளோம். இதற்காக விமான டிக்கெட் உள்பட ரூ.5 லட்சம் வரை செலவாகியுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்