ஆஃப் சைடின் கடவுள்; தாதாவின் 49-வது பிறந்த நாள்: கங்குலிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

ஆஃப் திசையின் கடவுள், தாதா, கொல்கத்தா இளவரசர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் 49-வது பிறந்த நாளான இன்று ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. 1996ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

கொல்கத்தாவின் இளவரசர் என்று ரசிகர்களால் புகழப்பட்ட கங்குலி, 1997ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார். 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக திராவிட்டும், கங்குலியும் சேர்ந்து அடித்த 318 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிரிக்கெட் உலகை மிரட்டியது. இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் சேர்த்தார் கங்குலி.

2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரம் தலைதூக்கியபின் அமிக்கு கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார்.

கங்குலி கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்துதான் அணித் தேர்வில் புதிய முறைகள் பின்பற்றப்பட்டன. இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக அளிக்கப்பட்டன. ஜாகீர்கான், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு ஊக்கமாக இருந்து வழிகாட்டியவர் சவுரவ் கங்குலி. அவர்கள் மீது அதீதமான நம்பிக்கை வைத்திருந்தார். கங்குலிக்கு அடுத்தபடியாக வெற்றி கேப்டனாக வலம் வந்த தோனியும் கங்குலியின் கண்டுபிடிப்புதான்.

பேட்டிங்கில் ஆவேசத்தையும், களத்தில் ஆக்ரோஷத்தையும் இணைத்துச் செயலாற்றுவதுதான் கங்குலியின் பழக்கமாகும். கங்குலி மட்டும் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், நேரம் செல்லச் செல்ல பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கும். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

இதுவரை எந்த இந்திய கேப்டனும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை. 424 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 18 ஆயிரத்து 576 ரன்கள் சேர்த்துள்ளார். இந்திய அணிக்கு மொத்தாக 197 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்திய கங்குலி 95 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் தொடரை வென்றது, ஆஸ்திரேலியாவின் தொடர் 16 டெஸ்ட் வெற்றிக்கு 2001-ல் முற்றுப்புள்ளி வைத்தது, 2-1 என்று தொடரை வென்றது, கங்குலி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றது எனப் பல சாதனைகளைச் சொல்லலாம்.

311 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கங்குலி 11,363 ரன்கள் குவித்துள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்கள் சேர்த்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான கங்குலி, சச்சினுடன் சேர்ந்து தொடக்க ஜோடியாகக் களமிறங்கி மிரட்டி இருக்கிறார். இருவரும் சேர்ந்து 136 போட்டிகளில் 6,609 ரன்கள் சேர்த்துள்ளார்கள்.

21 முறை 100 ரன்களுக்கு மேலாகவும், 23 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள்.

ஆஃப் திசையின் கடவுள் என்று ராகுல் திராவிட்டால் புகழப்பட்டவர் சவுரவ் கங்குலி. தெரிந்தோ தெரியாமலோ கங்குலிக்கு ஆஃப் திசையில் பந்துவீச்சாளர் பந்து வீசிவிட்டால் பந்து சிக்ஸர், பவுண்டரி திசையில் பறக்கும். கங்குலி ஆஃப் திசையில் கவர் டிரைவ் விளையாடும் அழகே தனி.

2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கங்குலி தலைமையில் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று திரும்பியது. பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டை முதல் முறையாக இந்தியா வீழ்த்தியது. 2005-06ஆம் ஆண்டு பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அணியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற கங்குலி, ஐபிஎல் தொடரில் விளையாடி 2012ஆம் ஆண்டு உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.

பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு இன்று 49-வது பிறந்த நாள். அவருக்கு சேவாக், விவிஎஸ் லட்சுமண், முகமது கைஃப், பிசிசிஐ அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விவிஎஸ் லட்சுமண் ட்விட்டரில் பதிவிட்ட கருத்ததில், “பிறந்த நாள் வாழ்த்துகள் கங்குலி. வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கட்டும். அடுத்துவரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் ப க்கத்தில், “நல்ல உடல் ஆரோக்கியமும், உற்சாகமும் தாதாவுக்கு எப்போதும் கிடைக்கும். பிறந்த நாள் வாழ்த்துகள் தாதா” எனத் தெரிவித்துள்ளார்.

முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், “களத்தில் அணியை தாதா வழிநடத்தினாலே, நீங்கள் தலைநிமிர்ந்து செல்வீர்கள். நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் தோளில் தட்டிக்கொடுத்து வழிநடத்தும் தாதாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

27 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

47 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்