ஏபிடி அதிரடி; மேக்ஸ்வெல் அசத்தல்: ஆர்சிபிக்கு ஹாட்ரிக் வெற்றி: மோர்கனின் தவறான கேப்டன்ஷிப்பால் கொல்கத்தா காலி

By க.போத்திராஜ்


ஏடி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தால் சென்னையில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்தது. 205 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய கொலக்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.

கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு கிடைத்த 3-வது வெற்றியாகும், இதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், கொல்கத்தா அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமே கிளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டம்தான். மேக்ஸ்வெல் 49பந்துகளில் 78 ரன்கள்(3சிக்ஸர்,9பவுண்டரி) சேர்த்து தொடர்ந்து 2-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

ஏபி டிவ்லியர்ஸ் 27 பந்துகளில் அரைசதத்தையும், 34 பந்துகளில் 76 (3சிக்ஸர், 9பவுண்டரி)சேர்த்து தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இருவரும் சேர்ந்து 18 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசினர்.

15-வது ஓவர் ஓவர் ஆர்சிபியின் ரன்ரேட் அடிப்படையில் 175 ரன்களுக்குள்ளாகவே எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டது. ஆனால்,டிவில்லியர்ஸ் கடைசி 3 ஓவர்களில் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்துக்கட்டினார்.

360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸின் காட்டடி பேட்டிங்கால் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் உயர்ந்தது. ஆர்சிபி அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 70 ரன்கள் சேர்த்தது. அதிலும் ஏபிடி மற்றும் ஜேமிஸன் இணைந்து கடைசி 3 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தனர்.

டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் இருவரின் அசுரத்தனமான ஆட்டமே ஆர்சிபி அணியின் பிரமாண்ட ஸ்கோருக்கு காரணம்.

பந்துவீச்சிலும் ஆர்சிபி அணி சிறப்பாகச் செயல்பட்டனர். முகமது சிராஜ், கைல் ஜேமிஸன், ஹர்சல் படேல் மூவரும் அருமையாகப் பந்துவீசினர். இதில் ஹர்சல் படேல் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினார், ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை.

அதேபோல முகமது சிராஜ் 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்தார். விக்கெட் இல்லாவிட்டாலும் 11 டாட் பந்துகளை வீசி கொல்கத்தா பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார். அதிலும் கடைசியில் ரஸலை அடிக்கவிடாமல் சிராஜ் பந்துவீசியது அருமை.

ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபி அணி பந்துவீ்ச்சு, பேட்டிங், பீல்டிங்கில் பட்டையக் கிளப்பிவிட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் கேப்டன்ஷிப் மிக மோசமாக இருந்தது.

வருண் சக்ரவர்த்தி தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசி கோலி, பட்டிதார் இருவரையும் வீழ்த்திய நிலையில் தொடர்்ந்து வீச வைத்திருந்தால் மேக்ஸ்வெலை செட்டில் ஆகவிடாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், வருணுக்கு ஓவர் தரவில்லை. பவர்ப்ளேயில் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்பஜனுக்கு தொடர்ந்து வழங்கவில்லை.

டிவில்லியர்ஸ் நன்றாக செட்டில் ஆகி அசுரத்தனமாக பேட் செய்துவரும் நிலையில் 18 மற்றும் 20வது ஓவரை ரஸுக்கு வழங்கினார் மோர்கன். இதுதான் வாய்ப்பு என ரஸல் ஓவரை டிவில்லியர்ஸ் கிழித்து தொங்கவிட்டார்.

சகிப் அல்ஹசன் தொடக்கத்தில் ரன்களைக் கொடுத்தாலும் அனுபவமான பந்துவீச்சாளர் அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. எந்தெந்த வீரரை எப்படி பயன்படுத்த வேண்டும் என சரியாக மோர்கன் பயன்படுத்தியிருந்தால், ஆர்சிபி அணி பெரிய ஸ்கோர் அடித்திருக்க வாய்ப்பில்லை.

கொல்கத்தா அணிக்கு ஷுப்மான் கில், ராணா நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதிலும் கில் ஏதோ முடிவு எடுத்துவந்து இறங்கியது போன்று பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

அடுத்துவந்த திரிபாதி அதிரடியாக 4 பவுண்டரிகள் உள்பட 25 ரன்கள் சேர்்த்து சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா அணி.
ஆரஞ்சு தொப்பியை நோக்கி நகர்ந்துவரும் நிதிஷ் ராணா 18 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் சஹல் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

கேப்டன் மோர்கன் 3-வது முறையாக சொதப்பினார். களத்தில் இருந்து அணிக்கு வழிகாட்ட வேண்டிய கேப்டன் மோர்கன், சிறிதுநேரமே சகிப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 29 ரன்களில் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியி்ல் பவுண்டரி கூட அடிக்கத் தெரியாத பேட்ஸ்மேன் என கிண்டல் செய்தவர்களுக்கு ரஸல் தனது ‘மஸல்’லை வெளிப்படுத்தினார். சஹல்வீசிய 17-வது ஓவரை உருட்டி எடுத்த ரஸல் ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார்.

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழந்த நிலையில் வெற்றிக்கு தேவைப்படும் ரன்களும் அதிகரித்தன. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு, 58 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது.

ஜேமிஸன் வீசிய 18-வது ஓவரில் சகிப் அல் ஹசன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். சகிப் அல்ஹசன் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டாலும், பாவம் அவருக்கு பந்து மீட் ஆகவில்லை. அடுத்துவந்த கம்மின்ஸ் ஒரு சிக்ஸர் விளாசிய நிலையில், கடைசிப்பந்தில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

19-வது ஓவரை வீசிய சிராஜ் மிகஅருைமயாக பந்தவீசினார். ரஸலை கிரீஸில் நிற்கவைத்த முகமதுசிராஜ் படம் காட்டி, அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே வழங்கினார். டெத் ஓவர் என்றால் சிராஜ் வீசியஓவரைத்தான் குறிப்பிட முடியும். அற்புதமான பந்துவீச்சு.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்றபோதே கொல்கத்தா அணியின் தோல்வி உறுதியானது. ஹர்சல் படேல் வீசிய முதல் பந்திலேயே ரஸல் 31 ரன்னில் போல்டாகி வெளியேறினார். வருண் 2ரன்னிலும், ஹர்பஜன் சிங் 2 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 38 ரன்னில் தோல்வி அடைந்தது. ஆர்சிபி தரப்பில் ஜேமிஸன் 3 விக்கெட்டுகளையும், சஹல், ஹர்சல் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

24 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்