குர்னால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா அசத்தல் அறிமுகம்: ஆட்டம் கண்ட இங்கிலாந்து பேட்டிங்: இந்தியா மிகப்பெரிய வெற்றி

By க.போத்திராஜ்


குர்னால் பாண்டியாவின் அதிரடி பேட்டிங், பிரச்சித் கிருஷ்ணா, தாக்கூர் ஆகியோரின் அருமையான பந்துவீச்சு ஆகியவற்றால் புனேயில் இன்றுபகலிரவாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலாவதுஒருநாள்ஆட்டத்தில் இந்தியஅணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. 318 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்து 66 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் இருக்கிறது. 106 பந்துகளில் 98 ரன்கள்(11பவுண்டரி, 2சிக்ஸர்) குவித்து சதத்தை தவறவிட்ட ஷிகர் தவணுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த தவணுக்கு கிடைத்திருக்கும் இந்த விருது மீண்டு வருவதற்கு உதவியாக அமையும்.

சாதனை வீரர் பிரசித்

ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தொடக்கத்தில் சொதப்பினாலும் அதன்பின் லைன் லென்த்தை கண்டுகொண்டு 2-வது ஸ்பெல்லை சிறப்பாக வீசினார். பிரசித் கிருஷ்ணா 8.1ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கையூட்டி அசத்தலான அறிமுகத்தைப் பதிவு செய்தார். அறிமுகப் போட்டியில் இதுவரை எந்த இந்திய வீரரும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை அந்த சாதனையை பிரசித்கிருஷ்ணா படைத்துள்ளார்.

துணையாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள், அனுபவ வீரர் புவனேஷ்வர் 2 விக்கெட் என இங்கிலாந்தின் சரிவுக்கு காரணமாகஅமைந்தனர்.

அதிரடி அறிமுகம்

மற்றொரு அறிமுக வீரர், அதிரடி வீரர் குர்னால் பாண்டியா. டி20 போட்டிகளில் இவரின் காட்டடியை கண்டிருக்கிறோம். அதை ஒருநாள் போட்டியிலும் வெளிப்படுத்தினார். தனது அறிமுகத்தையே அதிரடியாகத் வெளிப்படுத்தி முதல் போட்டியிலேயே 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

அறிமுகப்போட்டியில் இதுவரை எந்த வீரரும் 26 பந்துகளில் அரைசதம் அடித்தது இல்லை. அறிமுகப் போட்டியில் 7-வது வரிசையில் களமிறங்கி 58 ரன்கள் குர்னல் பாண்டியா குவித்தது, இதுவரை எந்த இந்திய வீரரும்அறிமுகப் போட்டியில் செய்யாத சாதனையாகும்.

இது தவிர தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணின் ஆட்டம், கோலியின் அரைசதம், கே.எல்.ராகுலின் மிரட்டல் இன்னிங்ஸ் ஆகியவை இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.

40 ஓவர்கள் வரை இந்திய அணி 300 ரன்களைக் கடக்குமா என்பது சந்தேகமாக இருந்தது.ஆனால், ராகுல், குர்னல் பாண்டியா கூட்டணி 112 ரன்களை கடைசி 10 ஓவர்களில் சேர்த்து அணியை மிகப்பெரிய இலக்கை நோக்கி நகர்த்தினர்.

பேட்டிங், பந்துவீச்சு அருமை

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கிற்கு அருமையான ஆடுகளத்தை நன்றாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்தனர். பந்துவீச்சில் இங்கிலாந்து தொடக்க வீரர்களான பேர்ஸ்டோ, ராய் இருவரையும் கழற்றமுடியாமல், பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

5 பந்துவீச்சாளர்கள் வீசியும் ராய், பேர்ஸ்டோ கூட்டணியைப் பிரிக்க முடியவில்லை. ஏனென்றால் இங்கிலாந்து அணி 6 ஓவர்களில் 50 ரன்கள், 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ரன்ரேட் சென்ற வேகத்தை பார்த்தபோது,ஆட்டம் அவ்வளவுதான் என்ற எண்ணத் தோன்றது.

ஆனால், 15-வது ஓவரில் ஜேஸன் ராய் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தியதுதான் திருப்புமுனை.

அதைச் சரியாகப் பயன்படுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அழுத்தம் கொடுத்து ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அதன்பின் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆட்டம் கண்டது. 135 ரன்கள் வரை விக்கெட் இழக்காத இங்கிலாந்து அணி அடுத்த 41 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 வி்க்கெட்டுகளை இழந்தது. கடைசி 34 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளும் வீழ்ந்தன என்பது "பேட்டிங் கொலாப்க்ஸ்". ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணியின் இருவிதமான ரன்கள் இடைவெளிக்குள் விழுந்து ஆட்டத்தை இழந்தது.

அருமையான தொடக்கம்

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பேர்ஸ்டோ, ராய் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த வீரர்கள் பயன்படுத்தவில்லை. முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தனர். இந்தியப் பந்துவீச்சை சிக்ஸர்,பவுண்டரி என வெளுத்துக் கட்டிய பேர்ஸ்டோ 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ராய், பேர்ஸ்டோ இருவரும் ஒருநாள் போட்டி போன்று இல்லாமல் டி20 போன்று விளையாடி இந்திய பந்துவீச்சாளர்களின் நம்பி்க்கையை உடைத்தனர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

வாய்ப்பைத் தவறவிட்ட வீரர்கள்

ராய் 46 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்ததுதான் திருப்புமுனையாகும். 94 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் சதத்தை தவறவிட்டு பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ்(1), மோர்கன்(22), பாட்லர்(2), பில்லிங்ஸ்(18), மொயின் அலி(30) ஆகியோர் பிரசித் கிருஷ்ணா, தாக்கூர் பந்துவீச்சில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டை இழந்தனர்.

பின்வரிசை வீரர்களான சாம்கரன்(12) டாம் கரன்(11), ரஷித்(0) ஆகியோரும் நம்பிக்கையற்று விளையாடி 8 ஓவர்கள் மீதிருக்கும் போதே தோல்வி அடைந்துவி்ட்டனர். டாம் கரன் வரை இங்கிலாந்து அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் சீர்குலைந்தது தோல்விக்கு காரணமாகும்.

சாம்கரன் வீணடிப்பு

சாம்கரன் நன்கு விளையாடக் கூடியவர் அவரை 3வது வீரராக, அல்லது 4-வது வீரராக களமிறக்க வேண்டும். திறமையான சாம் கரனை மோர்கன் வீணடிக்கிறார் என்றே தோன்றுகிறது.

பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து 30 ஓவர்களுக்கு மேல் விக்கெட்டுகளை விரைவாக எடுத்த இங்கிலாந்து வீரர்கள் டெத்ஓவர்களில் கோட்டை விட்டனர். ஆர்ச்சர், வோக்ஸ், போன்ற அனுபவமான வீரர்கள் இல்லாதது பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஹிட் மேன் மந்தம்

முன்னதாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் விக்கெட்டுக்கு வந்த ரோஹித் சர்மா, தவண் கூட்டணி மந்தமான தொடக்கத்தையே அளித்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தபோதிலும், ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பவில்லை. 9-வது ஓவரில் ரோஹித் இரு பவுண்டரிகளையும், 7-வது ஓவரில் தவண் இரு பவுண்டரிகளை அடித்த ஸ்கோரை உயர்த்தநர். 12 ஓவர்களில்தான் 50 ரன்களை இந்திய அணி எட்டியது. மந்தமாக ஆடிய ரோஹித் சர்மா 28 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கோலி, தவண் கூட்டணி

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த கோலி, தவணுடன் சேர்ந்தார்.
இருவரும் சேர்ந்தபின் ஸ்கோர் ஓரளவு உயரத் தொடங்கியது. 17 பந்துகள் வரை சந்தித்த கோலி ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. அதன்பின்புதான் கோலி இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பினார்.

பேட்டிங் ஃபார்மின்றி தவித்த தவண் 68 பந்துகளில் அரை சதம் அடித்தார். விராட் கோலி 50 பந்துகளில் அரை சதம் அடித்தார். தவண் அரை சதம் அடித்தபின்புதான் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். தவணுக்கு ரன்கள் பெரும்பாலும் லாங்ஸ்வீப் ஷாட் மூலமே கிடைத்தது.

நிதானமாக ஆடிய கோலி, மார்க் உட் பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி கணக்கில் 6 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 105 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர் நிலைக்கவில்லை. மார்க் உட் பந்துவீச்சசில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த ராகுல், தவணுடன் சேர்ந்தார்.
சதத்தை நெருங்கிய தவண், 98 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். தவண் கணக்கில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அதில் ரஷித் பந்துவீச்சில் தவண் 59 ரன்கள் சேர்த்திருந்தபோது ஒரு கேட்ச் வாய்ப்பை மொயின் அலி தவறவிட்டிருந்தார். ஆனால், இந்த முறை தவண் தப்பிக்கவில்லை.

கடைசி 10 ஓவர்களில் காட்டடி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.
6-வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டிய ராகுல் ஜோடி சேர்ந்தது. 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 205 ரன்கள் என்ற நிலையில்தான் இருந்தது. ஆனால், பாண்டியா,ராகுல் ஜோடி சேர்ந்து கடைசி 10 ஓவர்களை அடித்து நொறுக்கியது.

டி20 ஓவர்களில் கடைசி 5 ஓவர்கள் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் எவ்வாறு இருக்குமோ அதுபோல் 10 ஓவர்களைத் தங்கள் வசம் இருவரும் கொண்டு வந்தனர். 26 பந்துகளில் குர்னல் பாண்டியா அரை சதமும், 39 பந்துகளில் ராகுல் அரை சதமும் அடித்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 52 பந்துகளில் 100 ரன்களை எட்டினர்.

ராகுல் 62 ரன்களிலும் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்), குர்னல் பாண்டியா 58 ரன்களிலும் (2 சிக்ஸர்,7 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் உட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

உலகம்

6 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

21 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

41 mins ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்