அஸ்வினின் அசத்தலான 5 மைல்கற்கள்; இம்ரான்கானின் சாதனை சமன்: 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பெயரை வாங்கிய இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

அகமதாபாத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதைப் பெற்ற இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின், இம்ரான்கானின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

வரும் ஜூன் 18-ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் விளையாடவும் இந்திய அணி தகுதி பெற்றது.

தொடர் நாயகன் விருது

இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதை இந்திய வீரரும், தமிழக வீரருமான அஸ்வின் பெற்றார். அஸ்வின் டெஸ்ட் போட்டித் தொடரில் பெறும் 8-வது தொடர் நாயகன் விருதாகும். கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்வின் கடந்த 10 ஆண்டுகளில் 8-வது முறையாகத் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் தொடர் நாயகன் விருதை 8 முறை வென்ற பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான்கான், நியூஸிலாந்தின் ரிச்சார்ட் ஹாட்லி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் ஆகியோரின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இதுவரை அஸ்வின் 28 டெஸ்ட் தொடர்களில் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதற்கு முன் அஸ்வின் 2011-ம் ஆண்டு மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி தொடர் நாயகன் விருது வென்றார்.

அதன்பின், 2012-13இல் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2012-13இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2015-16இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2015-16இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2016-17இல் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2016-17இல் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தொடர் நாயகன் விருதை அஸ்வின் வென்றுள்ளார்.

அதிகமான தொடர் நாயகன் விருதை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பெற்றுள்ளார். 11 விருதுகளை வென்று முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ் 9 விருதுகளை வென்றுள்ளார். 3-வது இடத்தில் தற்போது அஸ்வின், இம்ரான்கான் ஆகியோர் உள்ளனர்.

2-வது சாதனை

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடித்து, 30 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, தொடர் நாயகன் வென்ற வீரர்கள் இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் யாரும் இல்லை. முதல் முறையாக இந்தச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

3-வது சாதனை

ஒரே டெஸ்ட் தொடரில் 30க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 5-வது வீரராக அஸ்வின் இடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் முதல் முறையாக இந்தச் சாதனையைச் செய்த வீரர் எனும் பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

இதற்கு முன், இம்ரான்கான் (இந்தியாவுக்கு எதிராக 1982) , இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் (ஆஷஸ் 1981), ஆஸி. வீரர் ஆர்.பெனாட் (தெ.ஆப்பிரிக்கா 1957), ஆஸி. வீரர் ஜிபென் (இங்கி. ஆஷஸ் 1895) ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

4-வது சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் 30-வது முறையாக 5 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். இதில் 24 முறை இந்தியாவில் எடுக்கப்பட்டதாகும். அனில் கும்ப்ளே 25 முறை இந்தியாவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தாற்போல் அஸ்வின் உள்ளார். ஒட்டுமொத்தமாக கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அடுத்ததாக அஸ்வின் உள்ளார்.

5-வது சாதனை

இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 7 முறை 5 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். இதில் 3 முறை அஸ்வினும், 4 முறை அக்ஸர் படேலும் வீழ்த்தியுள்ளனர். முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் 5 விக்கெட் சாதனையை எடுத்த முதல் வீரர் எனும் பெருமையை படேல் பெற்றார்.

100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பெயர்

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 150 ரன்களுக்குள் ஆல்அவுட் ஆகியுள்ளது. இதற்கு முன் கடந்த 1909-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதேபோன்று 150 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 4 போட்டிகளிலும் ஆல்அவுட் ஆகியிருந்தது. அதன்பின் இதுபோன்று 150 ரன்களுக்குள், 4 போட்டிகளிலும் ஆல்அவுட் ஆனது கிடையாது. ஏறக்குறைய 112 ஆண்டுகளுக்குப் பின் மோசமான பெயரை இங்கிலாந்து அணி பதிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்