அஸ்வின் அசத்தல் சதம்: பேட்டிங் கற்றுக்கொடுத்த கோலி, ரவி: 482 ரன்கள் இலக்கை தாக்குப்பிடிக்குமா இங்கிலாந்து?

By க.போத்திராஜ்


சென்னையில் நடந்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினின் அபாரமான சதத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 482 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

அபாரமாக பேட் செய்த அஸ்வின் 134 பந்துகளில் சதம் அடித்து டெஸ்ட் அரங்கில் தனது 5-வது சதத்தை பதிவு செய்து 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் 85.5 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு அடுத்த இரு நாட்கள் கூடுதலாக ஒத்துழைக்கும் என்பதால், இந்த மிகப்பெரிய இலக்கை எதிர்த்து இங்கிலாந்து சேஸிங் செய்வது மிகவும் கடினமாகும்.

ஆடுகளத்தில் பிளவுகள் அதிகமாகியுள்ளதால், நாளை ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக பவுன்ஸ் ஆகி, பந்து சுழலும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பந்தை கணித்து ஆடுவது நாளை மேலும் சிரமத்தைக் கொடுக்கும்.

அதிலும் அஸ்வின், அக்ஸர் படேல் இருவரின் பந்துவீச்சை சமாளிப்பது கடினமாக இருக்கும். இன்னும் குல்தீப் யாதவுக்கு முழுமையாக ஓவர்கள் அளிக்கவில்லை. அவரின் பந்துவீச்சு 2-வது இன்னிங்கில் முக்கியப் பங்கு வகிக்கும். நாளைய ஆட்டத்தை இங்கிலாந்து அணி தாக்குப்பிடித்தாலே அது பெரிய விஷயமாகும்.

ரவிச்சந்திர அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சதம் அடிப்பது இது 3-வது முறையாகும். டெஸ்ட் அரங்கில் அடிக்கும் 5-வது சதம். சென்னையில் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

கேப்டன் விராட் கோலி (62) அஸ்வின். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா7 ரன்னிலும், ரோஹித் சர்மா 25 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இருவரும் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் கடைசிப்பந்தில் லெக் திசையில் புஜாரா அடித்த ஷாட்டில் பந்து போப்பின் கைகளில் சென்றது.

இதைப் பார்த்த புஜாரா ஓட முயன்று கீரிஸை தொட முயன்றபோது பேட் கைதவறி கீழே விழுந்தது. பந்தைப் பிடித்து போப் விக்கெட் கீப்பர் ஃபோக்ஸிடம் வீச புஜாரா ரன்அவுட் செய்யப்பட்டார். புஜாரா 7 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த, ரிஷப்பந்த் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். ரோஹித் சர்மா 26 ரன்கள் சேர்த்த நிலையில் லீக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரிஷப்பந்த் 8 ரன்னில் லீச் பந்துவீச்சிலும், ரஹானே 10 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி தடுமாறியது.

6-வது விக்கெட்டுக்கு கோலி, அக்ஸர் படேல் ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆனால் அக்ஸர் படேல், 7 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு அஸ்வின் களமிறங்கி கோலியுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து கண்டவாறு பவுன்ஸ் ஆகி, சுழலும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் எவ்வாறு பேட் செய்ய வேண்டும் என்று கோலியும், அஸ்வினும் இங்கிலாந்து வீரர்களுக்கு பாடம் நடத்தினர். அதிலும் முழுநேர பேட்ஸ்மேன் இல்லாத அஸ்வின் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது.

அஸ்வின் இருமுறை ஆட்டமிழக்கும் வாய்ப்பிலிருந்து தப்பினார். பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் இருவரும் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் அஸ்வினுக்கு தலா ஒருமுறை கேட்ச்சை நழுவவிட்டனர். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அஸ்வின்களத்தில் நங்கூரம் பாய்ச்சினார்.

விராட் கோலி நிதானமாக பேட் செய்ய,, மறுபுறம் அஸ்வின் பந்துகளை வீணடிக்காமல் ஒரு ரன், இரு ரன்கள் என சேர்த்து ஸ்கோரை சீராக உயர்த்தி வந்தார். விராட் கோலி 104 பந்துகளில் அரைசதம் அடிக்க, அஸ்வின் 64 பந்துகளில் வேகமாக அரைசதம் அடித்தார். 7-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.

கோலி 62 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கோலி கணக்கில் 7 பவுண்டரிகள் அடங்கும். பிற்பகல் தேநீர் இடைவேளியின்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்திருந்தது. 80 ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது.

அடுத்துவந்த, குல்தீப் யாதவ்(3) இசாந்த் சர்மா(7) இருவரையும் வைத்துக் கொண்டு ஆட்டத்தை அஸ்வின் அருமையாக நகர்த்திச் சென்றார். குல்தீப் யாதவ் 3 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சிலும், இசாந்த் 7ரன்னில் லீச் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

9-வது விக்கெட்டுக்கு வந்த முகமது சிராஜ், அஸ்வினுக்கு ஈடுகொடுத்து பேட் செய்தார். நேர்த்தியாக பேட் செய்த அஸ்வின் 134 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் 5-வது சதத்தை பதிவு செய்தார். அஸ்வின் 148 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோன் பந்துவீச்சில் போல்டாகினார். 10-வது விக்கெட்டுக்கு சிராஜ், அஸ்வின் இருவரும் 49 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அஸ்வின் கணக்கில் 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் 85.5 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி, ஜேக் லீச் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

18 mins ago

க்ரைம்

53 mins ago

சுற்றுச்சூழல்

59 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்