அஸ்வினிடம் தென் ஆப்பிரிக்கா மீண்டும் சரண்: டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

By இரா.முத்துக்குமார்

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தன் 2-வது இன்னிங்சில் 185 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் தொடரை 2-0 என்று கைப்பற்றியது இந்தியா. அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று முடிந்த 3-வது டெஸ்டில் 124 ரன்கள் வித்தியாச வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்று வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் அயல் நாடுகளில் 9 ஆண்டுகாலமாக எந்தத் தொடரிலும் மண்ணைக் கவ்வாத தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைப் பயணத்துக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. அடுத்தடுத்து 2 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி கைப்பற்றிய விவரங்களை இனி பார்க்க வேண்டும்.

3-ம் நாளான இன்று 32/2 என்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா உணவு இடைவேளைக்கு முன்பாக டீன் எல்கர் (18), மற்றும் டிவில்லியர்ஸ் (9) ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வினிடம் எல்.பி.டபிள்யூ முறையில் இழந்து 105/4 என்று இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஹஷிம் ஆம்லா, டுபிளேஸ்ஸிஸ் ஜோடி 72 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் இருவருமே இந்த டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த முரளி விஜய்யின் 40 ரன்களை கடக்கும் முன்னர் 39 ரன்களில் மிஸ்ராவிடம் வீழ்ந்தனர்.

இவர்கள் பிட்சை ஓரளவுக்குப் புரிந்து கொண்டு ஆடினர். பிளைட் பந்துகளுக்கு முன்னால் வந்தும், வேகமாக வீசப்படும் பந்துகளுக்கு பின்னால் சென்றும் ஆடி ஓரளவுக்கு நன்றாக எதிர்கொண்டனர், ஆனாலும் சில பந்துகள் திரும்பிய போது பீட் ஆயினர், சில பந்துகளை ஆடாமல் விட்டனர்.

அஸ்வினின் துல்லியமான அளவு மற்றும் திசைக்கு முன்னால் பவுண்டரிகள் வருவது, ஏன் ரன்கள் வருவதே கடினமாக இருந்தது. தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 151/6 என்று இருந்தது. அதாவது உணவு மற்றும் தேநீர் இடைவேளைகளுக்கு இடையே 46 ரன்களே எடுக்க முடிந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு டுமினி அஸ்வினிடம் 19 ரன்களுக்கும், விக்கெட் கீப்பர் விலாஸ் 12 ரன்களுக்கும், ரபாதா 6 ரன்களுக்கும் மோர்னி மோர்கெல் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர், அஸ்வின் 29.5 ஓவர்களில் 7 மெய்டன்களுடன் 66 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் 98 ரன்களுக்கு 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். மிஸ்ரா இந்த இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மேலும் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலருமானார் அஸ்வின், 2007-ம் ஆண்டு அனில் கும்ளே 49 விக்கெட்டுகளை ஒரு காலண்டர் ஆண்டில் கைப்பற்றி செய்த சாதனைக்குப் பிறகு அஸ்வின் தற்போது சாதனை நிகழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

10 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்