ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்ந்தன; பும்ரா, ஷமி, ஷைனி மிரட்டல் பந்துவீச்சு; பயிற்சி ஆட்டத்தில் ஆஸி.ஏ அணி 108 ரன்களில் சுருண்டது: இந்தியா ஏ அபார முன்னிலை

By க.போத்திராஜ்

பும்ரா, ஷமி, நவ்தீப் ஷைனி ஆகியோரின் கட்டுக்கோப்பான, மிரட்டலான பந்துவீச்சில் சிக்கி, ஆஸ்திரேலிய ஏ அணியின் பேட்ஸ்மேன்கள் மண்வீடுபோல் சரிந்து விக்கெட்டுகளை இழந்தனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய ஏ அணி 32.2 ஓவர்களில் 108 ரன்களுக்குப் பரிதாபமாக ஆட்டமிழந்தது.

இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

இன்று ஒரே நாளில் இந்திய அணியின் தரப்பில் 10 விக்கெட்டுகளும், ஆஸி. ஏ அணியின் தரப்பில் 10 விக்கெட்டுகளும் என 20 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பட்டையைக் கிளப்பிய பும்ரா, பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக முதல்தரப் போட்டியில் அரை சதம் அடித்து 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முகமது ஷமி 11 ஓவர்கள் வீசி 4 மெய்டன், 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவ்தீப் ஷைனி 5.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஆஸ்திரேலிய ஏ அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேரெ 32 ரன்களும், ஹாரிஸ் 26 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

46 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த ஆஸி. ஏ அணி, அடுத்த 52 ரன்களுக்கு மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஷமீ வீசிய 13-வது ஓவரில் மட்டும் ஹாரிஸ், மெக்டர்மார்ட் இருவரும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சீரான இடைவெளியில் ஆஸி. பேட்ஸ்மேன்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதில் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன், டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா அடித்த பந்து தலையில் பட்டு கன்கஸனில் வெளியேறினார். இதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேமரூன் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்குத் தொடக்க வீரராகக் களமிறக்கலாம் என ஆஸி. வாரியம் ஆலோசித்துவரும் ஜோ பர்ன்ஸ் இந்த முறையும் டக் அவுட்டில் வெளியேறினார். ஏற்கெனவே வார்னர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத நிலையில் அடுத்தடுத்து வீரர்கள் காயம் அடைந்துள்ளது, ஃபார்மில்லாமல் தவிப்பது ஆஸி. அணிக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட் செய்தார். மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். அபாட் வீசிய 3-வது ஓவரில் அகர்வால் (2) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கில், பிரித்வி ஷா ஓரளவுக்கு நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். 2-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பிரித்விஷா (43) ரன்களில் சதர்லேண்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த விஹாரி (15) ரன்களில் ஏமாற்றி ஆட்டமிழந்தார். கடந்த பயிற்சிப் போட்டியிலும் சொதப்பிய விஹாரி இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். ரஹானே (4), ரிஷப் பந்த் (5), சாஹா (0), ஷைனி (4), ஷமி (0), கில் (40) என வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்த 21 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது விக்கெட்டுக்கு பும்ரா, சிராஜ் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினர். ஆனால், பும்ரா தொடக்கத்திலிருந்தே வேகமாக ரன்களைச் சேர்த்து, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். 53 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

பும்ரா அடித்த ஷாட்டில் தலையில் பந்து பட்டு காயமடைந்த கேமரூன் க்ரீன்.

ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து பும்ராவாலேயே அரை சதம் அடிக்க முடிந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் வரிசையில் முன்னணியில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அவர்களின் பேட்டிங் திறமையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

முகமது சிராஜ் 22 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்வீப்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்தனர். பும்ரா 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 48.3 ஓவர்களில் இந்திய அணி 194 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் சீன் அபாட், வில்டர்முத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்