இனி WWE-ல் இருக்கவே மாட்டேன் என்றில்லை: அண்டர்டேகர்

By செய்திப்பிரிவு

இனி WWE-ல் இருக்கவே மாட்டேன் என்றில்லை என WWE வீரர் அண்டர்டேகர் தெரிவித்துள்ளார்.

ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தம் என்று கருதப்படும் அண்டர்டேகர், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். கடைசியாக சர்வைவர் சீரிஸ் 2020-ல் அண்டர்டேகர் தோன்றவிருக்கிறார். இதில் பெரிய அளவில் அவருக்குப் பிரிவுபச்சார விழா திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மார்க் காலவே என்பதே அண்டர்டேகரின் இயற்பெயர். 1990-ம் ஆண்டு உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டு என்று சொல்லப்படும் WWE-ல் இவர் அறிமுகமானார். 30 வருடங்களாக இதில் கோலோச்சிய இவர் கடைசியாக ரெஸில்மேனியா 36-ம் பதிப்பில் விளையாடினார். அதில் வெற்றி கண்டார். இதுவரை ரெஸில்மேனியாவில் சண்டையிட்ட 27 போட்டிகளில் 25-ல் அண்டர்டேகர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது ரெஸ்ட்லிங் வாழ்க்கை, ஓய்வு குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் அண்டர்டேகர்.

"நான் இன்னும் இந்தத் துறையில் எனது 30 வருட வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, ஆச்சரியப்படுகிறேன். இனி நான் இதில் இருக்கவே மாட்டேன் என்றில்லை. ஏனென்றால் இது எப்போதுமே எனக்கான இடமாக இருந்திருக்கிறது. நான் சண்டையிடுவதை நீங்கள் இனி பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் வளர்ந்து வரும் திறமையாளர்களுக்குப் பயிற்சி தருவது, அவர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்வது என்று இங்குதான் பணியாற்றிக் கொண்டிருப்பேன்" என்று அண்டர்டேகர் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு ரெஸ்ட்லிங் என்பது மேடையில் சண்டையிடுவதைத் தாண்டி எப்படி, என்ன கதையைச் சொல்கிறோம் என்பதில் தான் இருந்திருக்கிறது என்று கூறும் அண்டர்டேகர் அதே நேரம் மேடையில் சண்டைக்குச் செல்லும் வீரர்களுக்கு தங்கள் மனதை ஒரு நிலைப்படுத்த அவகாசம் கிடைக்காது என்கிறார்.

"(மேடையைச் சுற்றி தீ பற்றி எரியும்) இன்ஃபெர்னோ சண்டையில் நாம் தீயில் விழுந்துவிடக்கூடாது என்பதுதான் எண்ணமாக இருக்கும். ஆனால் அதில் மட்டுமே கவனம் செலுத்த முடியாது. இது கேட்கப் பயங்கரமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.

ஆனால் ரசிகர்களுக்கு ஒன்று புரிவதில்லை. சண்டையிடும் ஒரு வீரர் தோற்கும் அதே நேரத்தில் உயர்வான நிலையிலும் வைக்கப்படுவார். அதிலும் எதிராளி ஒரு சூப்பர்ஸ்டாராக இருந்தால். இதுதான் ஜெஃப் ஹார்டி என்னை ஒரு போட்டியில் கிட்டத்தட்ட தோற்கடிக்கும் போது ஆனது. அப்போது ஜெஃப் ஹார்டி தோற்றாலும் அவர் மீது வெளிச்சம் விழுந்ததில் எனக்குப் பெருமையே" என்று நினைவுகூர்கிறார் அண்டர்டேகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்