'லெஃப்டு... ரைட்டு... : டிவில்லியர்ஸை 6ம் நிலையில் களமிறக்கியது ஏன்? -விராட் கோலியின் தடுமாற்ற பதில்

By இரா.முத்துக்குமார்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முதல் 3 அதிரடி வீரர்கள் நேற்று விராட் கோலியின் ஆர்சிபி அணிக்கு ‘ஆப்பு’ வைத்தனர். தவறான முடிவெடுத்து கோலியே சுய-ஆப்பு வைத்துக் கொண்டார் என்று தோன்றுகிறது.

முதலில் பேட் செய்ய முடிவெடுத்த கோலிக்கு எதுவும் சரியாக அமையவில்லை, ஷார்ஜா சேசிங் பிட்ச், இங்கு முதலில் பேட் செய்தார். ஆனால் அவராலும் சரியாக ஆட முடியவில்லை. ஷார்ஜாவில் குழந்தைகளும், பாட்டிகளும் சிக்ஸ் அடிக்கும் போது விராட் கோலி 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 48 ரன்களை மட்டுமே எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.

அன்று முதலில் பேட் செய்து திணறிக்கொண்டிருந்த நிலையில் இதே மைதானத்தில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இறங்கினார், நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடினார், அது அழகும் அரக்கத்தனமும் இணைந்த ஒரு இன்னிங்சாக அமைந்து 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசி அணியை கிட்டத்தட்ட தன் சொந்த பேட்டிங்கினாலேயே வெற்றி பெறச் செய்தார்.

ஆனால் நேற்று அத்தகைய ஏ.பி.டிவில்லியர்ஸை 6ம் நிலையில் இறக்கி பெரும் தவறு செய்தாரா கோலி அல்லது இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் வென்றால் பரவாயில்லை, ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பது போலவே கொண்டு சென்றால்தான் தொடரின் அனைத்து போட்டிகளுக்குமான வணிக மதிப்பு எகிறும் என்ற ஐபிஎல் தொடரின் உள்ளார்ந்த ஒரு நீக்குப்போக்கா என்பதும் தெரியவில்லை.

இதனையடுத்து 171 ரன்களையே ஆர்சிபி எடுக்க, டிவில்லியர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸை ஒரு கேப்டன் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6ம் நிலையில் களமிறக்குகிறார். ஆனால் கோலியே இந்தத் தவறை ஒப்புக் கொள்ளாமல் சில மாற்றங்கள் கைகொடுப்பதில்லை என்று கூறி தவறை நீர்த்துப் போகச் செய்தார். கிங்ஸ் லெவன் இந்த இலக்கை 177/2 என்று ஊதியது. அதே போல் பவர் ப்ளேயில் வாஷிங்டன் சுந்தர் பெரிய பவுலராக இருந்து வரும் நிலையில் 9வது ஓவரில் அவரை பந்து வீச அழைத்ததும் புரியாத புதிர். ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் பெரிய மீன்களை லாவகமாக வளைத்துப் போட்டு பெவிலியன் அனுப்புபவர், தனது கடினமான பவுலிங் கோணங்களால் அடிப்பதற்கு சிரமம் ஏற்படுத்தும் பவுலர். இந்த உத்தியையும் கோலி சரியாக விளக்கவில்லை.

இந்நிலையில் கோலி ஆட்டம் முடிந்து கூறியதாவது:

நாங்கள் இது தொடர்பாக பேசியே முடிவெடுத்தோம். வெளியிலிருந்து இடது, வலது பேட்டிங் கூட்டணி வேண்டும் என்று ஆலோசனைக் கூறப்பட்டது.

அதனால் இது தொடர்பாக விவாதித்தோம் ஏனெனில் கிங்ஸ் லெவனில் ரவி பிஷ்னாய், முருகன் அஸ்வின் என்ற இரண்டு ஸ்பின்னர்கள் இருந்தனர். அதனால் வலது -இடது காம்பினேஷன் கைகொடுக்கும் என்று முடிவெடுத்தோம்.

அதனால்தான் டிவில்லியர்ஸுக்கு முன்னதாக அடித்து ஆட வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபேயை அனுப்பினோம். இது ஒர்க் அவுட் ஆகவில்லை, கிங்ஸ் லெவன் நன்றாக வீசினர். பிட்சினால் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. அவர்கள் மீது அழுத்தம் ஏற்படுத்த முடியவில்லை.

சில வேளைகளில் இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது, ஆனால் கைகொடுக்காமல் போய் விடுகிறது.

சில வேளைகளில் எடுக்கும் முடிவுகள் நன்மையில் முடியாது, இன்றைய தினம் அந்தமாதிரியான தினம், ஆனால் எடுத்த முடிவு குறித்து மகிழ்ச்சியே அடைகிறோம். இந்தப் பிட்சில் 170 ரன்கள் நல்ல ஸ்கோர்தான்.

சாஹலிடம் எந்த ஒரு உரையாடலும் நடத்தவில்லை. கடைசி பந்தில்தான் பேசினோம் வெளியே வீசச் சொன்னோம், ஆனால் நிகோலஸ் பூரனுக்குப் பாராட்டுகள். (கடைசி வின்னிங் ஷாட் சிக்ஸ் பற்றி).

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்