மேத்யூ வேட், மிட்செல் மார்ஷின் இறுதி கட்ட அதிரடி: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

By இரா.முத்துக்குமார்

சவுதாம்டனில் உள்ள ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 1-0 என்று ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்ய, அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

7-வது விக்கெட்டுக்காக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், மிட்செல் மார்ஷ் இணைந்து 13 ஓவர்களில் 112 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலியா 37-வது ஓவர் முடிவில் 193/6 என்பதிலிருந்து 305/6 என்ற நிலையை எட்டியது. இதில் கடைசி 10 ஓவர்களில் 93 ரன்கள் விளாசப்பட்டது.

மேத்யூ வேட் 50 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுக்க, மிட்செல் மார்ஷ் 34 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து இருவருமே நாட் அவுட்டாக திகழ்ந்தனர்.

தனது கணக்கைத் துவங்கும் அவசரத்தில் மேத்யூ வேட் வாட்சனை (6) ரன் அவுட் ஆக காரணமாக இருந்தாலும், அதன் பிறகு அருமையான ஷாட்களை ஆடினார். பென் ஸ்டோக்ஸ் பந்தில் அடித்த ஸ்வீப் ஷாட் புதிய மேத்யூ வேட் உருவாகியுள்ளதை நமக்கு பறைசாற்றியது. அதே போல் ஆக்ரோஷமான கட் ஷாட்கள், ரிஸ்கான துடுப்பு ஸ்வீப் ஷாட்கள் என்று அவர் ரன்களை குவித்தார். அப்படிப்பட்ட துடுப்பு ஸ்வீப்பில் கிறிஸ் வோக்ஸை ஆஃப் ஸ்டம்பிலிருந்து எடுத்து ஃபைன் லெக்கில் அடித்ததும் ஒரு குறிப்பிடத் தகுந்த புதுமை புகுத்தலே.

தொடக்கத்தில் வாரன்ர், ஜோ பர்ன்ஸ் ஜோடி 76 ரன்களை 14.3 ஓவர்களில் சேர்த்தனர், வார்னர் முதல் 12 ஓவர்களில் ஒரே பவுண்டரியை மட்டுமே அடித்தார். பர்ன்ஸ் குறிப்பிட்ட இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தார் ஆனால் அவர் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து அவரது பந்து வீச்சில் அவுட் ஆனார். பாதி ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 126/1 என்று இருந்தது, 150 பந்துகளில் இத்தனைக்கும் 81 பந்துகளில் ரன் எடுக்கப்படவில்லை. வார்னர் 59 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தில் ஷார்ட் தேர்ட்மேன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

27-வது ஓவரில் 133/1 என்ற நிலையிலிருந்து 37-வது ஓவரில் 193/6 என்று சரிந்தது ஆஸ்திரேலியா. அப்போதுதான் வார்னர், ஸ்மித், பெய்லி மேக்ஸ்வெல், வாட்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் வேட், மிட்செல் மார்ஷ் ஜோடி 300 ரன்களை கடக்கச் செய்தனர், இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அடி வாங்கினார் அவர் 72 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடில் ரஷீத் மட்டுமே நன்றாக வீசி 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து ஆக்ரோஷமாக தொடங்கியது, ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், உலகின் நம்பர் 1 ஒருநாள் போட்டி பவுலரான மிட்செல் ஸ்டார்க்கின் 3 ஓவர்களில் 29 ரன்களை விளாசி அவரை பந்துவீச்சிலிருந்து அகற்றச் செய்தனர். ஜேசன் ராய் மிகச்சிறபாக ஆடி 64 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல்லின் சொத்தை பந்தை அதைவிட சொத்தையாக கட் ஆடி பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக ஹேல்ஸ் 22 ரன்களுக்கு நன்றாக ஆடிவிட்டு மார்ஷிடம் வீழ்ந்தார். ஜேம்ஸ் டெய்லர் 51 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து வாட்சன் பந்தில் பவுல்டு ஆனார்.

29-வது ஓவரில் மீண்டும் ஸ்டார்க் அழைக்கப்பட 13 ரன்களில் இருந்த அபாய ஸ்டோக்ஸை வீழ்த்தினார் அவர் இங்கிலாந்து 172/4 என்று ஆனது. பிறகு இயான் மோர்கன் (38), ஜோஸ் பட்லர் (4), இருவரும் மோசமான ஷாட்டுக்கு ஆட்டமிழந்தனர். வாட்சனை புல் ஆட முயன்று அவுட் ஆனார் மோர்கன், பட்லரோ, கூல்டர் நைல் பந்தை நேராக மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். அதன் பிறகு 246 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து.

ஸ்டார்க், கூல்ட்டர் நைல், கமின்ஸ், வாட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மார்ஷ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக மேத்யூ வேட் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

43 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்