மன்கட் அவுட் பற்றி ரிக்கி பாண்டிங் பேசியது என்ன?-அஸ்வின் விளக்கம்

By பிடிஐ

மன்கட் அவுட் பற்றி டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அவர் துபாய் வந்தபின் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டு விளக்கமாகக் கூறுகிறேன் என டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்தார்.

கடந்த 12-வது ஐபிஎல் டி20 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜாஸ் பட்லரை, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் மன்கட் அவுட் செய்து ஆட்டமிழக்கச்செய்தார். இது ஐசிசி விதிப்படி நியாயமானது என்றாலும் கிரிக்கெட்டின் மரபுகளை மீறியது என்று விமர்சிக்கப்பட்டது.

ரவிச்சந்திர அஸ்வின் செய்த மன்கட் அவுட், கடந்த தொடரில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அஸ்வின் மாற்றப்பட்டார்.

இதற்கிடையே சமீபத்தில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டி ஒன்றில், டெல்லி அணிக்குள் வந்தபின் மன்கட் அவுட் போன்றவற்றைச் செய்ய வேண்டாம். அது கிரிக்கெட்டின் உணர்வைக் குலைத்துவிடும் என்று அஸ்வினிடம் தெரிவித்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியினர் துபாய் சென்றுவிட்டனர். ஆனால், பயிற்சியாளர் பாண்டிங் இன்னும் வரவில்லை. அடுத்த வாரம்தான் வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிங்குடன் பேசிய விவரங்கள் குறித்து அஸ்வின் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “மன்கட் அவுட் தொடர்பாக அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசினேன். ரிக்கி பாண்டிங் இன்னும் துபாய் வந்து சேரவில்லை. அவர் வந்தபின், நாங்கள் இருவரும் அமர்ந்து பேசுவோம். என்னுடன் பேச வேண்டும் என அவர் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே நான் பாண்டிங்குடன் தொலைபேசியில் பேசிவிட்டேன். அது மிகவும் சுவாரஸ்யமான உரையாடலாக எனக்கு இருந்தது.

இருப்பினும் நேருக்கு நேர் முகத்துக்கு முகம் பார்த்துப் பேசுவது சிறப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். ஏனென்றால், சில நேரங்களில் ஆஸ்திரேலிய மக்கள் பேசும் ஆங்கிலம் சரியாகப் புரியாது. ஆகவே, நேரடியாகப் பேசும்போது தெளிவடையலாம்.

சில நேரங்களில் ஆஸ்திரேலிய மக்கள் சொல்லும் நகைச்சுவை கூட செய்தியாக்கப்படும். அதனால்தான் கூறுகிறேன். அடுத்த வாரம் பாண்டிங் வந்தபின் அவருடன் விரிவாகப் பேசிவிட்டு, அவரிடம் நான் என்ன பேசினேன் என்பதை விளக்கமாகத் தெரிவிக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே அஸ்வின் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்த முறை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ப்ரீ பால் வழங்க வேண்டும். அதாவது நான்-ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன் அவரின் இடத்தைவிட்டுச் சென்றால், அதற்கு ப்ரீ பால் கொடுத்து, பேட்டிங் செய்யும் அணியின் ஸ்கோரில் 5 ரன்களைக் கழிக்க வேண்டும். ப்ரீ ஹிட் பேட்ஸ்மேனுக்கு இருப்பதைப் போல், பந்துவீச்சாளர்களுக்கு ப்ரீ பால் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்