ஸ்வீப் ஷாட்டில் இந்திய ஸ்பின்னர்களைக் காலி செய்த நியூஸி: மகா விரட்டலின் சூட்சுமம்

By இரா.முத்துக்குமார்

ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் , ஒயிட் வாஷுக்குப் பிறகு நியூஸிலாந்து அணி இவ்வளவு பெரிய இலக்கை அனாயசமாக விரட்டும் என்று விராட் கோலி உட்பட யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

348 ரன்கள் வெற்றி இலக்கை அனாயாசமாக 48.1 ஓவர்களில் ஊதினர், ராஸ் டெய்லர் சதம் எடுத்தார், கேப்டன் டாம் லேதம் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 69 ரன்கள் சேர்த்தனர், இவரது இன்னிங்ஸ்தான் ஆட்டத்தை தங்களிடமிருந்து பறித்தது என்று விராட் கோலி ஆட்டம் முடிந்தவுடன் கூறினார்.

171/3 என்ற நிலையில் சேர்ந்த ராஸ் டெய்ல்ர், லேதம் ஜோடி சுமார் 13 ஓவர்களில் 138 ரன்கள் கூட்டணி அமைத்தது இந்திய அணியை பின்னடைவுக்கு இட்டுச் சென்றது. உலகின் நம்பர் 1 அணி டாஸ் ஒரு பொருட்டேயல்ல என்று சமீபகாலமாக அதிகமாக வாய்பேசி அதற்கேற்ப வெற்றி பெறும் அணி 13 ஓவர்களில் 138 ரன்களை அதுவும் 29-40 ஓவர்களில் கொடுப்பது கோலியின் கேப்டன்சி உத்தி மீது கடும் ஐயங்களை எழுப்புகிறது.

நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் இந்திய வீரர்களைக் காட்டிலும் ஸ்வீப் ஷாட்களை ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிகம் பயன்படுத்தினர். ஸ்வீப் ஷாட் ஆட வராத விராட் கோலி அன்று மீண்டும் தன் லெக் ஸ்பின் பலவீனத்தைக் காட்டி, இஷ் சோதியின் அபார கூக்ளியில் பவுல்டு ஆகி வெளியேறினார். அந்தப் பந்து ஸ்வீப் ஷாட்டுக்கான பந்து, கோலி ஆடவில்லை.

மாறாக இந்திய ஸ்பின்னர்களான ஜடேஜா, குல்தீப் யாதவ்வை லேதம், டெய்லர், நிகோல்ஸ் ஆகியோர் ஸ்வீப் ஷாட்களை ஆடி நிலைகுலையச் செய்தனர். கிட்டத்தட்ட உலகக்கோப்பை 1987-ல் கிரகாம் கூச், இந்திய இடது கை ஸ்பின்னர் மணீந்தர் சிங்கை ஸ்வீப் ஷாட்டில் திட்டம் போட்டு காலி செய்ததை ஒத்திருப்பதுதான் அன்று நியூஸிலாந்து கடைபிடித்த உத்தி.

2 ஸ்வீப்களுடன் தான் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆரம்பித்தார் டாம் லேதம். மொத்தம் 11 ஸ்வீப் ஷாட்களை, அதாவது பலதரப்பட்ட ஸ்வீப் ஷாட்களை டாம் லேதம் ஆடியதாக கிரிக் இன்போ புள்ளி விவரம் கூறுகிறது, மேலும் 25 ரன்களை இவர் ஸ்வீப் ஷாட்களில் எடுக்க, ராஸ் டெய்லர் 13 பந்துகளில் 26 ரன்களையும் நிகோல்ஸ் 7 பந்துகளில் 13 ரன்களையும் சேர்த்து மொத்தம் 31 பந்துகளில் 64 ரன்களை ஸ்வீப் ஷாட்களில் மட்டுமே நியூஸிலாந்து வெளுத்து வாங்கியுள்ளது, ஸ்வீப் ஷாட்களில் மட்டும் 200%க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட். ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 20 ஓவர்களில் 148 ரன்களைச் சேர்த்தனர்.

இந்திய அணியில் கேதர் ஜாதவ் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸை தவிர வேறு ஸ்வீப் ஷாட்கள் இல்லை, இஷ் சோதி, சாண்ட்னர் ஆகியோர் பந்து வீச்சில் ஒரேயொரு முறைதான் இந்திய அணி ஸ்வீப் ஷாட்டை ஆடியதாக கிரிக் இன்போ வர்ணனையைப் பார்த்தால் புரியும்.

ஒருவேளை அரைக்கை பவுலர் கேதார் ஜாதவ் வீசியிருந்தால் இவ்வளவு ஸ்வீப் ஆட முடியாமல் கூட போயிருக்கலாம், ஆனால் ஜாதவ் பவுலிங்கில் அவ்வளவாக தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பதால் கோலி அவரை பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது.

அடுத்த போட்டியில் குல்தீப்புக்குப் பதில் சாஹலையும், ஜடேஜாவுக்குப் பதில் வாஷிங்டன் சுந்தரையும் கொண்டு வந்தாலும் ஸ்வீப் ஷாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்திய அணி நிர்வாகம் இந்நேரம் புரிந்து கொண்டிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்