கடைசி 10 ஓவரில் 118 ரன்கள்: பொலார்ட், பூரன் காட்டடி; கேட்ச்சுகளை கோட்டைவிட்ட இந்திய வீரர்கள் - கோலி படைக்கு 316 ரன்கள் இலக்கு

By க.போத்திராஜ்

பொலார்ட், நிகோலஸ் பூரன் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தால் கட்டாக்கில் பகலிரவாக நடந்து வரும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மே.இ.தீவுகள் அணி.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு இது கடினமான இலக்குதான். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை மே.இ.தீவுகள் அணி கழற்றி நெருக்கடி அளித்தால் தப்பிக்கலாம், இல்லாவிட்டால், ஆட்டம் இந்தியாவின் பக்கம் செல்லும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், நிகோலஸ் பூரன் இருவரும் கடைசி 10 ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 118 ரன்களும், கடைசி 5 ஓவர்களில் 79 ரன்களும் சேர்க்கப்பட்டன.

அதிரடியாக ஆடிய பொலார்ட் 51 பந்துகளில் 71 ரன்களுடன் (7 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்மிழக்காமல் இருந்தார். துணையாக ஆடிய பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் (3 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கேப்டனுக்கே உரித்தான வகையில் நிதானமாக ஆடத் தொடங்கிய பொலார்ட் நேரம் செல்லச் செல்ல கடைசி 10 ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடினார். 40 ஓவர்கள் முடியும்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 200 ரன்களைக் கூட எட்டாமல் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஆனால், அதன்பின் பொலார்டும் பூரனும் சேர்நது இந்திய வீரர்கள் யார் பந்துவீசினாலும் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்து வீசிவிட்டு கடைசி நேரத்தில் கோட்டை விட்டனர். கடைசி 10 ஓவர்களில் பொலார்ட், பூரன் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். ஷைனி, தாக்கூர், ஷமி ஆகியோர் 40 ஓவர்கள் வரை 4 எக்கானமி ரேட் வைத்திருந்த நிலையில், ஆட்டம் முடியும்போது அனைவரின் ரன் ரேட்டும் 6 ரன்களுக்கு மேல் சென்றிருந்தது. பொலார்ட், பூரன் அதிரடிக்கு இந்தியப் பந்துவீச்சாளர் ஒருவரும் மிஞ்சவில்லை.

இந்திய அணியின் ஃபீல்டிங் இன்று படுமோசமாக இருந்தது. 2 ரன் அவுட், 3 கேட்ச்சுகளை கோட்டைவிட்டனர்.

49-வது ஓவரில் ஹோல்டருக்கு ஒரு ரன் அவுட்டை குல்தீப் தவறவிட்டார். அதேபோல ஹெட்மயருக்கு ஜடேஜா ஒரு ரன் அவுட்டைத் தவறவிட்டார்

இதுமட்டுமல்ல கேட்ச் வரிசையிலும் கையில் எண்ணெயைத் தடவிக்கொண்டு பிடித்ததுபோலத்தான் இன்று கதை இருந்தது. நவ்தீப் சைனி பந்துவீச்சில் லூயிஸ் 12 ரன்கள் சேர்த்திருந்தபோது ஒரு கேட்ச்சை ஜடேஜா தவறவிட்டார். 25 -வது ஓவரில் ஹெட்மெயருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்திய அணியின் ஃபீல்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இன்று அமையவில்லை.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சாஹருக்குப் பதிலாக அறிமுக வீரராக நவ்தீப் ஷைனி களமிறங்கினார். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மே.இ.தீவுகள் அணிக்கு லூயிஸ், ஹோப் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். வழக்கமாக அதிரடியாக ஆடக்கூடிய லூயிஸ் நிதானம் காட்ட, ஹோப் அதிரடியாக சில பவுண்டரிகள் அடித்தார். தொடக்கத்தில் இந்திய வீரர்களும் கட்டுக்கோப்பாகவே பந்து வீசினார்கள்.

ஜடேஜா வீசிய முதல் ஓவரில் லூயிஸ் 21 ரன்களில் லாங்-ஆன் திசையில் ஷைனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மே.இ.தீவுகள் 57 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்துவந்த சேஸ், ஹோப்புடன் சேர்ந்தார். சிறிது நேரம் மட்டுமே களத்தில் இருந்த ஹோப், 42 ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்டாகி விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த ஹெட்மெயர், சேஸுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி, 62 ரன்கள் வரை சேர்த்துப் பிரிந்தனர். ஷைனி பந்துவீச்சில் ஃபைன் லெக் திசையில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஹெட்மெயர் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பூரன் களமிறங்கினார். சிறிது நேரத்தில் ஷைனி பந்துவீச்சில் சேஸ் போல்டாகி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது மே.இ.தீவுகள் அணி.

பூரனுடன், பொலார்ட் இணைந்தார். இருவரும் தொடக்கத்தில் அடித்து ஆடாமல் ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். 30 ஓவர்களில் இருந்து 40 ஓவர்கள் வரை இருவரும் சேர்ந்து 53 ரன்களே சேர்த்திருந்தனர்.

ஆனால், 40 ஓவர்களுக்கு மேல் இருவரும் தங்கள் ரன் மெஷின் வேகத்தை அதிகரித்தனர். ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸர் என இருவரும் விளாசினர். பூரன் 43 பந்துகளில் அரை சதம் அடித்தார். கடந்த போட்டியிலும் அரை சதம் அடித்த நிலையில் இந்த ஆட்டத்திலும் அரை சதம் அடித்தார்.

குல்தீப் வீசிய 43-வது ஓவரில் பொலார்ட், பூரன் இருவரும் தலா ஒரு சிக்ஸர் விளாசினர். ஷைனி வீசிய 46-வது ஓவரில் பூரன் 3 பவுண்டரிகளை விளாசினார்.

சர்துல் தாக்கூர் வீசிய 48-வது ஓவரை பூரன் நொறுக்கினார். 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்து 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷைனி வீசிய 49-வது ஓவரை பொலார்ட் கவனித்துக்கொண்டார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து, பொலார்ட் 44 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன்பின் ஷமி வீசிய கடைசி ஓவரில் பொலார்ட் இரு சிக்ஸர்கள் விளாசி அணியை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார்.

50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. பொலார்ட் 74 ரன்களிலும், ஹோல்டர் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் ஷைனி 2 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்