மயங்க் அகர்வாலின் பிரமாதமான இரண்டாவது இரட்டைச் சதம் : ஸ்டீவ் ஸ்மித்திற்கு அடுத்த இடத்தில் உள்ளார்

By இரா.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டைச் சதம் எடுத்ததன் பிறகு குறுகிய இடைவெளியில் 2வது இரட்டைச் சதத்தை மயங்க் அகர்வால் வெள்ளிக்கிழமையன்று இந்தூர் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் எடுத்து அசத்தினார்.

330 பந்துகளைச் சந்தித்த மயங்க் அகர்வால் 28 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 243 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் பந்தை சக்தி வாய்ந்த முறையில் ஸ்வீப் ஆடினாலும் பவுண்டரியில் வேகப்பந்து வீச்சாளர் அபு ஜயீத் அற்புதமாக கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார் அகர்வால்.

மயங்க் அகர்வால் நேற்றே ஆட்டமிழந்து இருக்க வேண்டியது, 32 ரன்களில் இம்ருல் கயேஸ் அவருக்கு அபு ஜயேத் பந்தில் கேட்சை விட்டார். அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவில்லை, வங்கதேச பந்து வீச்சும் அர்ச்சனைப்பூக்களாக இருக்க, பிட்சும் பூமேடை போல் காட்சியளிக்க இரட்டைச் சதம் என்ன முச்சத வாய்ப்புமே அகர்வாலுக்கு இருந்தது என்னவோ உண்மை.

ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆண்டு 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை எடுத்து முதலிடம் வகிக்க மயங்க் அகர்வால் அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது உள்ளார்.

இரட்டைச் சதத்தை சிக்சரில் எடுத்த அகர்வால் 304 பந்துகளில் மைல்கல்லை எட்டினார். அப்போது 25 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடித்திருந்தார். மெஹதி ஹசன் மிராஸ் பந்துகளில்தான் மயங்க் அதிக ரன்களை எடுத்தார்.

மயங்க் அகர்வால் காந்தி ஜெயந்தியன்று அக்டோபர் 2ம் தேதி விசாகப்பட்டிணத்தில் தென் ஆப்பிரிகாவுக்கு எதிராக 215 ரன்கள் எடுத்தார். பிறகு புனேவில் இதே தெ.ஆ.வுக்கு எதிராக 108 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்தூர் டெஸ்ட் போட்டியில் முன்னதாக 234 பந்துகளில் 150 ரன்களை எடுத்தார் அகர்வால், சதத்தை 183 பந்துகளில் எடுத்தார். முன்னதாக புஜாரா ஆக்ரோஷமாக ஆட அகர்வால் நிதானம் கடைபிடித்தார். இன்று காலை மயங்க் 37 ரன்களுடனும் புஜாரா 54 ரன்களுடனும் இறங்கினர்.

புஜாரா ஆட்டமிழக்க, விராட் கோலி அரிய ஒரு டக்-ஐ அடிக்க, ரஹானேவுடன் இணைந்த மயங்க் 190 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்தார்

பிட்சில் ஒன்றுமேயில்லை அதனால் மயங்க் அகர்வால் பிரமாதமாக ட்ரைவ், கட், புல்ஷாட்கள், மேலேறி வந்து சாத்துமுறை நடத்துவது என்று தன் போக்கிற்கு ஆட முடிந்தது. வங்கதேச பவுலர்கள் இந்தப் பிட்சினால் களைப்படைய மயங்க் மேலும் ஆக்ரோஷமாகி தன்னுடைய அனைத்து ஷாட்களையும் எடுத்து விட்டார். நல்ல ஒரு பொழுது போக்கு இன்னிங்சை ஆடியவரையில் மயங்க் அகர்வாலைப் பாராட்டியே தீர வேண்டும்.

தற்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 467 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிற்கும் சேர்த்து எடுத்தாகி விட்டது, இனி என்ன டிக்ளேர் செய்து 3 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிக்க வேண்டியதானே?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

47 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்