ஆக்ரோஷத்துக்கு பலியான ஆஸ்திரேலியா 308 ரன்களுக்குச் சுருண்டது

By ஆர்.முத்துக்குமார்

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 308 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

2-ம் நாள் ஸ்கோர் 264/5 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா ஷேன் வாட்சன் விக்கெட்டை அவரது சொந்த ரன் எண்ணிக்கையான 30 ரன்களில் இழந்தது. வழக்கமான, ஃபுல் நேர் பந்தை பேடில் வாங்கினார். அது அவுட். ஆனால் ஒரு ரிவியூவையும் விரயம் செய்து விட்டு போனார்.

நேதன் லயன் 6 ரன்களில் மார்க் உட் பந்தில் கால் காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். பிராட் ஹேடினுக்கு பிராட், ஆண்டர்சன், மார்க் உட் ஆகியோர் சில டைட் ஓவர்களை வீச அவர் ஒருவாறாக 5 பவுண்டரிகளை அடித்து 22 ரன்களுக்கு வந்தார். அப்போது ஆண்டர்சனின் புதிய பந்தில் அவுட் ஸ்விங்கருக்கு பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜான்சன் 14 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தை நேராக மிட்விக்கெட் கையில் பிளிக் செய்து வெளியேறினார். கடைசியாக ஸ்டார்க் ரன் எடுக்காமல் ஆண்டர்சன் ஸ்டம்ப்களை விட்டு விலகிச் சென்று வீசிய பந்தை தவறாக டிரைவ் பந்து என்று நினைத்து ஆட எட்ஜ் ஆனது, ரூட் 3-வது ஸ்லிப்பில் இடப்புறம் டைவ் அடித்து அபாரமான கேட்சைப் பிடிக்க ஆஸ்திரேலியா 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முன்னதாக நேற்று இங்கிலாந்தின் 430 ரன்களை எதிர்த்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் எச்சரிக்கையாக ஆடிய கிறிஸ் ராஜர்ஸ் 95 ரன்கள் எடுத்தார்.

இது போன்ற மந்தமான பிட்ச்களுக்கென்றே அவர் பெயர் பெற்றவர். ஆனாலும் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் என்ற பெயரையும் எடுத்தார் இதில் இந்தியாவுக்கு எதிராக 6 அரைசதங்கள் என்பதையும் நாம் மறக்கலாகாது. மார்க் உட் ஒரு பந்தை சற்றே ஆங்கிள் மாற்றி வீச 95 ரன்கள் எடுத்த பிறகும் எட்ஜ் செய்து அவுட் ஆனார் ரோஜர்ஸ்.

ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 வீரர் ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களில் 5 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் மொயீன் அலியை அடிக்கச் சென்று இந்தியா மடிந்த வரலாற்றை ஆஸ்திரேலியா பார்க்கவில்லை போலும், முதலில் அவரை 2 பவுண்டரிகள் அடித்த ஸ்மித், மொயீன் அலி பந்துக்கு மேலேறி வர அவரோ பந்தை லெக் திசையில் வேகமாக வீச, ஸ்டம்ப்டு ஆவதைத் தடுக்க பேடைக் கொண்டு சென்றார். ஆனால் பேட்டும் அருகில் இருந்ததால் பந்து பட்டு குக்கிடம் கேட்ச் ஆனது.

மைக்கேல் கிளார்க்கும் ஆக்ரோஷமாக விளையாடி 38 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். ரோஜர்ஸ் அவுட் ஆகிவிட்ட பிறகு நிதானம் காட்டியிருக்க வேண்டிய கேப்டன் ஆக்ரோஷம் காட்டினார். இவரும் மொயீன் அலியை மேலேறி வந்து அடிக்க முயன்றார், முன்னதாகவே மேலேறியதால் பார்த்து விட்டார் மொயீன் அலி, கிளார்க் அடித்த ஷாட் மொயீனிடமே கேட்ச் ஆனது. அதாவது கிளார்க் பந்தை தூக்கி அடிக்க அங்கு நேரமில்லாமல் போனது.

மொயீன் அலி 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்து ஆடம் வோஜஸ், ஸ்டோக்ஸின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தை டிரைவ் செய்தார், சரியாகச் செய்யவில்லை ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் அருகிலேயே கேட்ச் ஆனது. இதுவும் பொறுமையின்மையின் ஆட்டமிழப்புதான். 2-ம் நாள் ஆட்டம் முடிய இன்னும் 10 நிமிடங்கள் இருந்த போது இவர் அவுட் ஆனார்.

இப்படியாக ஆஸ்திரேலியா தேவையற்ற ஆக்ரோஷத்தைக் காட்டி அதற்கான சரியான செயல்படுத்தம் இல்லாது 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆண்டர்சன் 3, பிராட், உட், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

122 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து சற்று முன் 3-ம் நாள் உணவு இடைவேளை தருணத்தில் அலிஸ்டர் குக் விக்கெட்டை ஸ்டார்க்கிடம் இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

மேலும்