ஒயிட் வாஷ் இல்லை! இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

By இரா.முத்துக்குமார்

மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 3-வதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-2 என்று தொடரை இழந்து ‘ஒயிட் வாஷ்’ சங்கடத் தோல்வியை தவிர்த்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி, ஷிகர் தவண், கேப்டன் தோனி ஆகியோரது அரைசதங்களாலும் ராயுடுவின் நிதானமான 44 ரன்கள் மற்றும் ரெய்னாவின் அதிரடி 38 ரன்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியது. ஆனால் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இந்தத் தோல்வி மூலம் தொடர்ச்சியான அதன் வெற்றிக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

318 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்த முறை நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. 3-வது பந்தே ரன் அவுட் வாய்ப்பு வந்தது. உமேஷ் யாதவ் மிட் ஆனில் மிஸ் பீல்ட் செய்ய தமிம் பாதுகாப்பு எய்தினார். பின்னியும், தவல் குல்கர்னியும் தொடங்கினர்.

பின்னி முதல் ஓவரை வீச 2-வதாக வீசிய தவல் குல்கர்னியின் ஓவரில் தமிம் இக்பால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வர அது தமிமின் பேடைத் தாக்கியது, நடுவர் கையை உயர்த்தினார். அவ்வளவு திருப்திகரமாக தீர்ப்பாக அது தெரியவில்லை.

அவர் அவுட் ஆனவுடன் சவுமியா சர்க்கார் அடித்து ஆடத் தொடங்கினார். ஸ்டூவர்ட் பின்னியின் குறைந்த வேகம் மற்றும் லெந்த் அவருக்கு சவுகரியமாக அமைய மிட் ஆனில் பிளாட் சிக்ஸ் ஒன்றையும், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியையும் அடித்தார். அவருடன் இப்போது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் இணைந்திருந்தார். தொடர்ந்தும் பின்னியை அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார்.

குல்கர்னி வீசிய ஒரு பவுன்சரும் அருமையான ஹூக் ஷாட்டில் சிக்ஸருக்குப் பறந்தது. வங்கதேச ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது. 7-வது ஓவர் உமேஷ் யாதவ் வந்தார், ஆனாலும் சவுமியா சர்க்கார் அடங்கவில்லை அவரையும் 2 பவுண்டரிகள் விளாசினார். அதே ஓவரில் மோசமான ஒரு பந்து 5 வைடுகள் ஆனது. 7வது ஓவர் முடிவில் 56/1 என்று அதிரடி தொடக்கமானது.

ஆனால் 10-வது ஓவரில் தவல் குல்கர்னி பழிதீர்த்தார். குல்கர்னி ஒரு ஸ்லோ பந்தை வீச மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முஷ்பிகுர் ரஹிம் இறங்கியவுடன் அஸ்வினை அபாரமாக லாங் ஆனில் சிக்ஸ் அடித்து ஆக்ரோஷம் காட்டினார். 18 ஓவர்களில் ஸ்கோர் 110/2 என்ற நிலையில் 30 பந்துகளில் 24 ரன் எடுத்த முஷ்பிகுர் ரஹிம், ரெய்னா பந்தை கட் ஆட முயன்று தோனியின் அருமையான கேட்சிற்கு வெளியேறினார்.

லிட்டன் தாஸ் ஒரு முனையில் தனது 34 ரன்களுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக, அக்சர் படேலின் நேர் பந்தில் பவுல்டு ஆனார்.

ஷாகிப் அல் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 21 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆக்ரோஷம் காட்டினார், ஆனால் அவரும் ரெய்னாவின் பந்தை தவறாக எடைபோட்டு பெரிய ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று லாங் ஆனில் தவல் குல்கர்னி கேட்ச் பிடிக்க நடையைக் கட்டினார்.

அதன் பிறகு சபீர் ரஹ்மான் அருமையாக ஆடினார் அவர் 38 பந்துகளில் 6 பவுண்டரி அடித்து ஸ்டூவர்ட் பின்னியின் ஸ்லோ ஆஃப் கட்டர் பந்தில் பவுல்டு ஆனார். உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆகி வெளியேறினார்.

இவருக்குப் பிறகு மொர்டசா 9 பந்துகள் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல், அஸ்வின் பந்துக்கு முன்னமேயே மேலேறி வர அஸ்வின் இழுத்து விட, பவுல்டு ஆனார். இன்னொரு முனையில் நசீர் ஹுசைன் 30 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தை ஷாட் ஆடி, பந்து லீடிங் எட்ஜ் எடுக்க கவரில் கேட்ச் ஆனார்.

ரூபல் ஹுசைன், ரெய்னாவை ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரெய்னா 7 ஓவர்கள் 35 ரன்கள் 3 விக்கெட். கடைசியில் முஸ்தபிசுர் ரஹ்மானை, அம்பாத்தி ராயுடு யார்க்கரில் எல்.பி. செய்தார். 47-வது ஓவரில் வங்கதேசம் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியது. ராயுடு எடுத்தது மெய்டன் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் பின்னி ரன்களை விட்டுக் கொடுத்தார். தவல் குல்கர்னி 8 ஓவர்களில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 10 ஓவர்கள் 1 மெய்டன்35 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ரெய்னா 8 ஓவர்களில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ராயுடு 5 ரன்னுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகனாக முஸ்தபிசுர் ரஹ்மானும் தேர்வு செய்யப்பட்டனர். வங்கதேச அணி இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

மேலும்