உலகின் 100 பணக்கார வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் தோனிக்கு 23-வது இடம்: அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃப்ளாய்ட் மேவெதர் முதலிடம்

By பிடிஐ

உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவர் 23-வது இடத்தில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தரவரிசையில் சறுக்கினாலும், வருமானத்தில் மட்டும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறார். தோனியின் மொத்த வருவாய் ரூ.198 கோடியாகும். இதில் போட்டி ஊதியம் மற்றும் பரிசுத் தொகை மூலம் கிடைத்த ரூ.25 கோடி, பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற ரூ.127 கோடி உள்ளிட்டவையும் அடங்கும்.

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் திரைப்படம் (எம்.எஸ்.தோனி-தி அன்டோல்டு ஸ்டோரி) விரைவில் வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக தோனி இருக்கிறார். அதன்மூலம் அவருக்கு ரூ.19 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

2015 உலகக் கோப்பையில் இந்திய அணியை அரையிறுதி வரை வழிநடத்திச் சென்ற தோனி, கடந்த 8 ஐபிஎல் போட்டிகளில் 6 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றுள்ளார் என போர்ப்ஸ் இதழ் தெரிவித் துள்ளது.

ஃப்ளாய்ட் மேவெதர் முதலிடம்

அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃப்ளாய்ட் மேவெதர் ரூ.1,919 கோடியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற வெல்டர்வெயிட் உலக குத்துச்சண்டை போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரர் மானி பாக்குயோவைத் தோற்கடித்த மேவெதர், அந்த ஒரு போட்டியில் மட்டும் ரூ.1,200 கோடி பரிசுத்தொகையை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஓர் ஆண்டில் அதிக வருவாய் குவித்தவர் என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். முன்னதாக 2008-ல் அமெரிக்காவின் டைகர் உட்ஸ் ரூ.735 கோடி ஈட்டியிருந்ததே ஓர் ஆண்டில் விளையாட்டு வீரர் ஒருவர் சம்பாதித்த அதிகபட்ச தொகையாக இருந்தது. இதுமட்டுமின்றி கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மேவெதர் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் குத்துச்சண்டை வீரர் மானி பாக்குயோ ரூ.1,023 கோடி வருவாயுடன் 2-வது இடத் திலும், போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.509 கோடி வருவாயுடன் 3-வது இடத்திலும், அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி ரூ.472 கோடி வருவாயுடன் 4-வது இடத்திலும், ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் ரூ.428 கோடி வருவாயுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ரூ.308 கோடியுடன் 13-வது இடத்திலும், ஜெர்மனியைச் சேர்ந்த ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் ரூ.211 கோடியுடன் 21-வது இடத்திலும், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ரூ.207 கோடியுடன் 22-வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் வேயன் ரூனி ரூ.172 கோடியுடன் 34-வது இடத்திலும், உலகின் அதிவேக மனிதரான ஜமைக்கா ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் ரூ.134 கோடியுடன் 73-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த 100 பேர் பட்டியலில் இரண்டு வீராங்கனைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா 189 கோடி வருவா யுடன் 26-வது இடத்திலும், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரூ.157 கோடி வருவாயுடன் 47-வது இடத்திலும் உள்ளனர்.

2014 ஜூன் முதல் 2015 ஜூன் வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் வீரர்கள் சம்பாதித்த வருவாயின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் இதழ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்