தோல்வியில் இருந்து மீளுமா மும்பை?- ஹைதராபாத்துடன் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பை இண்டியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதவுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். மே 1-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அனைத்திலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஹைதரபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியன் என்ற பெருமையுடன் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் பரிதவித்து வருகிறது. எனவே இப்போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா, மைக் ஹசி, போல்லார்டு, கோரே ஆண்டர்சன், அம்பட்டி ராயுடு என சிறந்த பேட்ஸ்மேன்களையும், மலிங்கா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஒஜா என சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க பந்து வீச்சாளர்களையும் மும்பை அணி கொண்டுள்ளது. எனினும் வெற்றி என்பது அந்த அணிக்கு இப்போது வரை எட்டாக் கனியாகவே அமைந்துள்ளது.

மும்பை அணியின் பேட்டிங் தொடர்ந்து மோசமாக அமைவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் சென்னைக்கு எதிராக 141 ரன்கள் எடுத்ததே மும்பையின் அதிகபட்ச ஸ்கோர். மற்ற ஆட்டங்களில் 115 முதல் 125 ரன்கள் வரையே மும்பை பேட்ஸ்மேன்களால் எடுக்க முடிந்தது. எனவே இந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ஜொலித்தால் மட்டுமே மும்பையால் வெற்றிபெற முடியும்.

ஹைதராபாத் அணியிலும் பேட்டிங்தான் பிரச்சினையாக உள்ளது. ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஷிகர் தவண், சமி ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்தும் வலுவான ஸ்கோரை அவர்களால் எட்ட முடியவில்லை.

டெல்லி அணிக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டும் ஹைதராபாத் வெற்றி பெற்றது. அதில் பிஞ்ச் (88 ரன்), வார்னர் (58 ரன்) தவண் (33 ரன்) ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்ததால் வெற்றி வசமானது. மற்ற போட்டிகளில் பேட்டிங் எடுபடாததால் ஹைதராபாத் அணியால் வலுவான ஸ்கோரை எடுத்து எதிரணிக்கு சவால் அளிக்க முடியவில்லை.

ஹைதராபாத் அணியில் டேல் ஸ்டெயின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகிய சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மும்பை, ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுமே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இப்போட்டியை எதிர்கொள்கின்றன.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்