ஆர்பிஐயை வீழ்த்தியது ஏரோஸ்

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஏரோஸ் எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அணியைத் தோற்கடித்தது.

ஏரோஸ் தனது முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஏஜிஓ அணியுடன் டிரா செய்திருந்த நிலையில், இப்போது முதல் வெற்றியை ருசித்திருக்கிறது. செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இதில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் ஏரோஸ் எப்.சி. அணி, ஆர்பிஐ அணியை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் இரு அணிகளுமே நிதானம் காட்டிய நிலையில், ஆர்பிஐயின் ஒரு கோல் வாய்ப்பை அற்புதமாகத் தகர்த்தார் ஏரோஸ் சந்தீப். அவர் கோல் கம்பத்தை நோக்கி வந்த பந்தை தலையால் முட்டி வெளியே திருப்பினார்.

இதன்பிறகு ஏரோஸ் அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அந்த அணியின் ஸ்டிரைக்கர் வைசாகன் நூலிழையில் கோலை தவறவிட்டார். மற்றொரு வாய்ப்பை ஏரோஸின் ஸ்டிரைக்கர் திமோத்தி கோட்டைவிட, 39-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது ஏரோஸ். அந்த அணியின் மத்திய மிட்பீல்டர் மசூர் செரீப் பாஸ் செய்த பந்தை தலையால் அடித்து கோலாக்கினார் லெப்ட் விங்கர் சூசைராஜ். இதையடுத்து மற்றொரு நல்ல வாய்ப்பை ஆரோஸ் மிட்பீல்டர் செலஸ்டின் கோட்டைவிட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ஏரோஸ்.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் ஆர்பிஐ அணி அபாரமாக ஆடியது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அந்த அணி கோல் கம்பத்தை நோக்கி பந்தை எடுத்துச் சென்றாலும், ஸ்டிரைக்கர்கள் லால்ரின்புயா, முகேஷ்வரன் ஆகியோர் அதை சரியாகப் பயன்படுத்தாமல் கோட்டைவிட்டனர். இதனால் சில வாய்ப்புகள் நழுவின.

இரு அணிகளும் கோலடிக்க போராடிய நிலையில், 78-வது நிமிடத்தில் ஏரோஸ் அணி 2-வது கோலை அடித்தது. ஆர்பிஐ கோல் கீப்பர் முகமது செய்த தவறும் இந்த கோலுக்கு காரணமானது. ஏரோஸ் வீரர்கள் கோல் கம்பத்துக்கு முன்னால் சூழ்ந்து நின்ற நிலையில், தனது கையில் இருந்த பந்தை அருகில் இருந்த தடுப்பாட்டக்காரரிடம் பாஸ் செய்தார் கோல் கீப்பர்.

அப்போது அங்கிருந்த ஏரோஸ் ரைட்விங்கர் சாஜன் கண் இமைக்கும் நேரத்தில் பந்தை தன்வசப்படுத்தி தனக்கு முன்னால் வந்த மற்றொரு மிட்பீல்டரான செலஸ்டினுக்கு பாஸ் செய்தார். அதை சரியாகப் பயன்படுத்திய செலஸ்டின் இரு வீரர்களை பின்னுக்குத்தள்ளி விட்டு இடது காலால் கோலடித்தார். இதன்பிறகு ஆர்பிஐ போராடியபோதும் கடைசி வரை கோலடிக்க முடியவில்லை. இறுதியில் ஏரோஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ஏரோஸ் வீரர் சூசைராஜ் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக அமைந்தார்.

சேலஞ்சர்ஸ் வெற்றி

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் சேலஞ்சர்ஸ் யூனியன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியைத் தோற்கடித்தது.

நடுவருக்கு திட்டு

ஆர்பிஐ ஆதரவாளர்கள் அதிகமானோர் போட்டியைக் காண நேரில் வந்திருந்தனர். அந்த அணி சில கோல் வாய்ப்புகளை கோட்டைவிட்டபோது, அதன் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். போட்டி முடிந்த பிறகு ஆர்பிஐ அணியின் பெஞ்சில் இருந்த ஒருவர், தங்கள் அணிக்கு பாதமாக நடுவர்கள் நடந்து கொண்டதாக அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டினார்.

கால்பந்து போன்ற கடினமான போட்டிகளில் நடுவர் பணி மிகவும் சவாலானதாகும். ஒரு நடுவர் எப்போதும் துல்லியமாக செயல்பட முடியாது. சில நேரங்களில் நடுவரின் முடிவு நமக்கு பாதமாகவோ அல்லது சாதகமாகவோ வரலாம். அதற்காக அதை பெரிதுபடுத்தி அவர்களை திட்டுவது சரியானதல்ல. எது எப்படியோ நடுவரின் முடிவே இறுதியானது என்பதை எல்லா அணிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நடுவர்களும் முடிந்த அளவுக்கு தவறிழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். அதைவிட்டு அவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் திட்டுவது மோசமான முன்னுதாரணமாக அமையும். எனவே அதுபோன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்