கார்ல்சன் முன்னிலை; என்ன செய்யப் போகிறார் மெட்ராஸ் டைகர்?

By ச.ந.கண்ணன்

ரஷ்யாவின் சூச்சியில் நடைபெற்று வரும் ஆனந்த் – கார்ல்சன் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 4.5 - 3.5 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறார். எஞ்சிய 4 சுற்றுகளில் குறைந்தது 2-ல் வெற்றி பெற்றால்தான் 6-வது முறையாக உலக சாம்பியன் ஆகமுடியும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த்.

கடந்த உலக சாம்பியன்ஷிப் போன்று இந்தமுறை கார்ல்சனால் முழு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. சென்ற முறை எட்டாவது சுற்றின் முடிவில் கார்ல்சன் உலக சாம்பியன் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது. 5 - 3 என முன்னிலை பெற்றிருந்தார். அடுத்த இரண்டு சுற்றுகளின் முடிவில் உலக சாம்பியன் ஆகிவிட்டார். சென்னையில் கார்ல்சன் 3 சுற்றுகளில் வெற்றி பெற்றார். ஆனந்தால் ஒருமுறை கூட கார்ல்சனை வீழ்த்த முடியவில்லை.

வாய்ப்பை தவறவிட்ட ஆனந்த்

ஆனந்தின் கதை முடிந்துவிட்டது என்று அனைவரும் எண்ணியிருந்தபோது கேண்டிடேட்ஸ் போட்டியை வென்று மீண்டும் கார்ல்சனுடன் ஆடத் தயாரானார் ஆனந்த். இப்போது சூச்சியில் நீயா நானா போட்டி கொஞ்சம் கடுமையாகவே உள்ளது. ஆரம்பம் முதல் ஆனந்த் ஈடுகொடுத்து ஆடிவருகிறார். 2-வது சுற்றில் கார்ல்சன் ஜெயித்தவுடன், அவ்வளவுதான் சென்னையில் பார்த்ததெல்லாம் மீண்டும் திரும்பப் போகிறது என்று பலரும் நினைக்க அடுத்தச் சுற்றிலேயே கார்ல்சனை தோற்கடித்து பதிலடி கொடுத்தார் ஆனந்த். ஆறாவது சுற்றில் மட்டும் ஆனந்த் ஜெயித்திருந்தால் போட்டியின் நிலைமையே மாறிப் போயிருக்கும். ஆனால், செய்யக்கூடாத இடத்தில் தவறு செய்து, தங்க வாய்ப்பை தவறவிட்டார் ஆனந்த்.

26-வது நகர்த்தலில் Kd2 என்று நகர்த்தி, நம்பமுடியாத ஒரு தவறைச் செய்தார் கார்ல்சன். இதைக் கவனித்த அத்தனை பேரும் அடுத்த நொடியே ஆனந்தின் வெற்றிக்காக பரவசமானார்கள். ஆனால் ஆனந்த், அவசரமாக a4 ஆடி (Ne5 நகர்த்துவதற்குப் பதிலாக) வெற்றி பெறுவதற்கான அற்புதமான சந்தர்ப்பத்தை இழந்தார். உலக சாம்பியன்ஷிப் போன்ற ஒரு போட்டியில் கார்ல்சனும் பெரிய தவறு செய்து நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் என்று நிரூபிக்கப்பட்ட தருணம் அது. “ஆனந்த் இன்று தூங்கமாட்டார்” என்று கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருணா ட்வீட் செய்தது ஆட்டத்திலேயே பிரதிபலித்தது.

திருப்புமுனை

தவறாக ஆடியும் இயல்பாக இருந்த கார்ல்சன், ஆனந்த்தும் பதிலுக்குத் தவறுதலாக ஆடி முடித்தபிறகுதான் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ஆனந்த்தால் இயல்பாக ஆடமுடியாமல் போனது. வருத்தம், சங்கடம் எல்லாம் அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தன. இறுதியில் அந்தச் சுற்றில் தோற்றதுதான் இந்தப் போட்டியின் பெரிய திருப்புமுனையாகிவிட்டது. நல்ல வாய்ப்பைத் தவறவிட்ட ஆனந்த், இன்னும் உள்ள நான்கு சுற்றுகளில் குறைந்தது இரண்டில் ஜெயித்தால்தான் 6-வது முறையாக உலக சாம்பியன் ஆகமுடியும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. ஒரே ஆறுதல், இரண்டு சுற்றுகளில் அவர் வெள்ளை நிறக் காய்களில் ஆடப்போகிறார்.

122 நகர்த்தல் வரை சென்ற 7-வது சுற்று ஆட்டம் மாரத்தானுக்குச் சமம். 8-வது ஆட்டத்தில், 9-வது நகர்த்தலில், Re8 ஆடினார் கார்ல்சன். இந்த புதுமையான நகர்த்தல், செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் பாராட்டைப் பெற்றது. இதற்கடுத்த நகர்த்தலுக்காக 12 நிமிடங்கள் யோசித்தார் ஆனந்த். ஆனால், 25-வது நகர்த்தல் வரை கார்ல்சன் மிகவும் வேகமாக ஆடினார். இது அவருடைய ‘செகண்ட்ஸ்’ எனப்படுகிற பயிற்சியாளர்களின் தயாரிப்பு, கூர்மையாக இருப்பதை எடுத்துக்காட்டியது.

நெருக்கடியில் ஆனந்த்

ஆனந்த் இதை உடனடியாக உணர்ந்து கொண்டதால் கார்ல்சனின் வழிக்குச் செல்லாமல், பெரும்பாலான நகர்த்தல்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டார். 8-வது சுற்றில், ஆனந்த் வெள்ளை நிறக்காய்களில் ஆடியதால், இன்னும் ‘ரிஸ்க்’ எடுத்து ஆடியிருக்கவேண்டும். எப்படியும் கார்ல்சன் டிராவுக்காகத்தான் ஆடுகிறார் என்கிறபோது இன்னும் முயற்சி செய்திருந்தால் அது கார்ல்சனை யோசிக்கவைத்திருக்கும் என்று 8-வது சுற்றில் ஆனந்த் ஆடிய விதம் பற்றி விமர்சனம் எழுகிறது.

உலக செஸ் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. கார்ல்சன் எல்லா ஆட்டங்களையும் டிரா செய்தாலே எளிதாக உலக சாம்பியன் ஆகிவிடுவார். ஆனால், ஆனந்தோ இரண்டு வெற்றிகளைப் பெற்றால் தான் மீண்டும் மகுடம் சூடமுடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறார். என்ன செய்யப் போகிறார் அவர்? மெட்ராஸ் டைகரின் பாய்ச்சலுக்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்று 9-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்