கோலி, ரோஹித் சர்மா அதிரடி சதம்: இந்தியா 375 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

கொழும்புவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது.

ஸ்கோர் 450 ரன்களுக்குச் சென்றிருக்க வேண்டும், 375 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதுவே இலங்கைக்கு பெரிய வெற்றி என்று ரஸ்ஸல் ஆர்னால்டு வர்ணனையில் தெரிவித்தது, இந்த ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக வர்ணிப்பதாக அமைந்தது.

தோனி, மணீஷ் பாண்டே ஜோடி 6-வது விக்கெட்டுக்காக 101 ரன்களை சுமார் 12 ஒவர்களில் சேர்த்தனர்.

ராகுல் 3-வது முறையாக குறைந்த ரன்களில் அவுட் ஆனார். தனஞ்ஜயாவின் செல்லப்பிள்ளையானார் ராகுல். அடித்து நொறுக்க வேண்டிய பிட்ச், ஒன்றுமேயில்லாத பந்து வீச்சு இதில் தொடக்கத்திலேயே அவுட் ஆனதற்கு தவணும் நிச்சயம் வருந்தியிருப்பார். ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

கடைசியில் மணீஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்தும் 300-வது ஒருநாள் போட்டியில் ஆடும் தோனி 42 பந்துகளில் 49 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர். இன்னிங்சின் 39-வது ஓவரை மேத்யூஸ் வீச அதனை தோனி மெய்டன் ஓவராக்கினார், இல்லையெனில் தோனியும் அரைசதம் கடந்திருப்பார். உண்மையில் ஆட்டத்தின் போக்குக்கு எதிரான ஒரு தருணமாக அது அமைந்தது, மேத்யூஸே ஆச்சரியமடைந்திருப்பார், அம்மாதிரி அகால தருணத்தில் ஒரு மெய்டன் ஓவரை தோனி அளித்தார். கடைசியில் மலிங்காவை தோனி ஸ்லோயர் பந்தில் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சர் ஒன்றை அடித்தார். தோனி தனது 49 ரன்கலில் 5 பவுண்டரி 1 சிக்சர் அடிக்க, மணீஷ் பாண்டே தன் 50 ரன்களில் 4 பவுண்டரிகளை அடித்தார்.

முன்னதாக ரோஹித் சர்மா 88 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 104 ரன்களையும் விராட் கோலி மிகவும் அனாயசமான ஒரு இன்னிங்ஸில் 17 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 96 பந்துகளில் 131 ரன்களை விளாசி மலிங்காவின் ஸ்லோ பந்தில் ஸ்வீப்பர் கவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மலிங்காவின் 300-வது ஒருநாள் போட்டி விக்கெட்டாக கோலி பரிசானார்.

கோலியும் ரோஹித் சர்மாவும் 2-வது விக்கெட்டுக்காக 28 ஓவர்களில் 219 ரன்களைச் சேர்த்தனர். ஒரு நேரத்தில் இருவருமே இரட்டைச் சதம் நோக்கிப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரோஹித் சர்மா தொடர்ச்சியாக தனது 2-வது சதத்தையும் மொத்தமாக தனது 13-வது ஒருநாள் சதத்தையும் எடுத்தார்.

30வது ஓவரில் ஸ்கோர் 225 ரன்கள் எனும் போது அடுத்த 20 ஓவர்களில் 150 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் கோலி, ரோஹித் சர்மா தொடர்ந்து ஆடி இறுதி வரை நின்றிருந்தால் இன்று பல சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கும்.

இலங்கை பந்து வீச்சாளர்களில் மேத்யூஸ் மட்டுமே சிக்கனமாக வீசி 6 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் மலிங்கா 10 ஓவர்களில் 82 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், பெர்னாண்டோ 76 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் தனஞ்ஜயா 10 ஓவர்களில் 68 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்ற அறிமுக ஸ்பின்னர் புஷ்பகுமாரா 9 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ஒன்றுமேயில்லாத பந்து வீச்சு, உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பந்துகள் மின்னல் வேகத்தில் செல்லும் அவுட் ஃபீல்ட் ஆகியவையும் பங்களிப்பு செய்தது. ஒரு நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களான 444 ரன்கள் முறியடிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

76 பந்துகளில் சதம் விளாசிய விராட்; 29-வது சதம் அடித்தார்

டாஸ் வென்று பேட் செய்ய முடிவெடுத்த விராட் கோலி, தவன் விக்கெட்டுக்குப் பிறகு இறங்கியது முதல் அனாயசமான பவுண்டரிகளை துச்சமாக அடித்து விளாசி 76 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் கண்டார், தற்போது 80 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் என்று ஆடி வருகிறார். கோலி அடிக்கும் 29-வது ஒருநாள் சதமாகும் இது.

இவருடன் ரோஹித்சர்மா 67 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 78 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இந்திய அணி 26-வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் கோலி, ரோஹித் சர்மா கூட்டணி 24.2 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 194 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெர்ணாண்டோவை முதலில் ஒரு ராஜகவர் டிரைவ் பிறகு சக்தி வாய்ந்த மிட் ஆஃப் டிரைவ், அதன் பிறகு நகர்ந்து கொண்டு லெக் திசையில் சக்தி வாய்ந்த பிளிக் என்று 3 பவுண்டரிகளுடன் தொடங்கினார் கோலி. பிறகு பெர்ணாண்டோவை அடுத்த ஓவரிலும் மிட் ஆஃபில் புல்லட் ஷாட் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டி மீண்டும் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு லெக் திசையில் மணிக்கட்டு பிளிக் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டினார்.

புஷ்பகுமாரா பந்து வீச வந்தவுடன் நடுவர் உடல் தப்பிய நேர் பவுண்டரி ஒன்றையும், பிறகு குசால் மெண்டிஸ் மிஸ் பீல்ட் செய்ய பந்து கவர் பவுண்டரிக்கும் பறந்தது. மலிங்கா ஆப் கட்டராக வீசியவர் திடீரென ஒரு பவுன்சரை வீச அதனை முறையாக பவுண்டரிக்கு அனுப்பினார் கோலி. 11வது ஓவரில் கோலி 38 பந்துகளில் அரைசதம் கண்டார், இதே 38 பந்துகளில் இன்னொரு 50 ரன்களை எடுத்து 76 பந்துகளில் சதம் கண்டார் விராட் கோலி.

முன்னதாக... டாஸ் , அணி விவரம்:

கொழும்புவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.

ரோஹித் சர்மா 3 ரன்களுடனும், கோலி 15 ரன்னுடனும் ஆடுகின்றனர். 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் களம் கண்டுள்ளார், இன்னும் ஒரு ஸ்டம்பிங் செய்தால் 100 ஸ்டம்பிங்குகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவண், பெர்னாண்டோ வீசிய பந்து சற்றே லேட் ஸ்விங் ஆக தவண் அதனை பாயிண்டில் ஒரு சுழற்று சுழற்றினார், ஆனால் பந்து டீப் தேர்ட்மேனுக்கு வேகமாகப் பறந்து சென்றது, அங்கு புஷ்பகுமாரா அருமையான கேட்ச் எடுத்தார்.

இந்திய அணி வருமாறு:

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ராகுல், மணீஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்குர்.

இலங்கை அணி:

மலிங்கா (கேப்டன்), பெர்னாண்டோ, டிக்வெல்லா, முனவீரா, மெண்டிஸ், திரிமானே, மேத்யூஸ், சிறிவதனா, டிசில்வா, தனஞ்ஜயா, புஷ்பகுமாரா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்