கபடி போட்டியில் அதிவேகமான ரைடு மட்டுமே வெற்றிக்கு கைகொடுக்காது: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பி.சி.ரமேஷ் கருத்து

By பெ.மாரிமுத்து

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்த படியாக தற்போது இளைஞர்களிடம் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக கபடி மாறி வருகிறது. இப்போட்டியை அவர்கள் தங்களது வாழ்க்கையாக தேர்வு செய்யவும் தொடங்கி உள்ளனர். இவை அனைத்துக்கும் அடித்தளமிட்டுள்ளது புரோ கபடி லீக் தான்.

இந்தியாவில் தற்போது 5-வது முறையாக நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் ஈரான் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் பல்வேறு அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 12 அணிகளில் ஒன்றான புனேரி பால்தான் இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான யு மும்பா அணியை 33-21 என்ற புள்ளிகள் கணக்கிலும் அடுத்த ஆட்டத்தில் 26-21 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியையும் வீழ்த்தி சிறப்பான முறையில் தொடரை தொடங்கி உள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களில் மிகவும் பரபரப்பாக இருந்த புனேரி பால்தான் அணியின் பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான பி.சி.ரமேஷை சந்தித்த போது அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றாலும் ஓரளவு நேர்த்தியான உச்சரிப்புடன் தமிழில் அவர் கூறியதாவது:

புரோ கபடி லீக் தொடரில் எங்கள் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சேரலாதன் தர்மராஜ், சுரேஷ் ஆகிய இரு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருமே அனுபவமிக்க வீரர்கள். சேரலாதன் ஆல்ரவுண்டராகவும், சுரேஷ் குமார் ரைடராகவும் செயல்படக்கூடியவர்கள்.

கபடியை பொறுத்தவரையில் நமது வீரர்களுக்கும், வெளிநாட்டு வீரர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் உடல் தகுதியை பராமரிப்பது தான். உணவு, உடற்பயிற்சி விஷயங்களில் வெளிநாட்டு வீரர்கள் கண்டிப்புடன் இருப்பார்கள். மேலும் வீடியோ பகுப்பாய்வு விஷயத்தில் அதிக அளவில் அக்கறை காட்டுவார்கள். நமது வீரர்களிடம் இது அலட்சியப் போக்காகவே உள்ளது. புரோ கபடியைப் பொறுத்தவரையில் புனேரி பால்தான் அணியில் இந்த விஷயத்தில் நாங்கள் தற்போது அக்கறை கொண்டுள்ளோம். வீடியோ பகுப்பாய்வு செய்தால் தான் அணியின் திறன் மெருகேறும்.

நான் விளையாடிய காலக்கட்டங்களில் இருந்தே அதே உத்வேகம் தற்போது நான் பயிற்சி அளிக்கும் வீரர்களிடமும் உள்ளது. ஆனால் திறன் அடிப்படையில் அவர்கள் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. புரோ கபடி லீக் தொடரில் எங்களுக்கு ஏ பிரிவு ரைடர் என்று பார்த்தால் தீபக் நிவாஸ் மட்டும் தான் உள்ளார். மற்ற ரைடர்கள் அனைவரும் பி, சி பிரிவு வகையைச் சேர்ந்தவர்கள் தான். எனினும் கடினமான பயிற்சிகள் மூலம் அவர்களை சிறப்பாக தயார் செய்துள்ளோம். அனுபவம் மற்றும் திறன் மூலமாகவே அதிக புள்ளிகளை குவிக்க முடியும். எங்களது போட்டி திட்டங்கள் எதிரணியின் பலவீனத்துக்கு தகுந்தபடி மாறும். அதேவேளையில் எங்களது பலவீனங்களையும் பயிற்சியின் போது சரி செய்து வருகிறோம். 100 சதவீதம் அளவுக்கு இல்லா விட்டாலும் 50 சதவீதம் தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம்.

இந்த சீசனில் எங்களது அணியில் தடுப்பாட்டம் சிறப்பாக உள்ளது. அதேவேளையில் ரைடும் நன்றாக உள்ளது. எனினும் வெற்றி பெறுவதற்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. வெற்றி பெற வேண்டும் என அணி உரிமையாளர்கள் எந்தவித நெருக்கடியும் கொடுப்பதில்லை. தொடரில் கலந்து கொண்டு உள்ள எல்லா அணிகளுக்குமே பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். எங்களுக்கும் அந்த ஆசை உள்ளது. முயற்சி, தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த செயல்பாடு, தனிப்பட்ட வீரர்களின் திறன் ஆகியவற்றைக் கொண்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலான வெற்றியை பெற வேண்டும். இந்த வகையிலேயே எங்களது வெற்றி அமைய வேண்டும் என விரும்புகிறேன்.

அதேவேளையில் அதிர்ஷ்டம் எல்லா ஆட்டத்திலும் கை கொடுக்காது. முயற்சி, தன்னம்பிக்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு, கடின உழைப்பு ஆகியவை தான் நேர்மறையான எண்ணங்களை கொடுக்கும். வெறும் அதிவேக ரைடு மட்டுமே வெற்றியை கொடுத்து விடாது. அனைத்து திறன்களுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி வசப்படும். நான் வீரர்களிடம் எதிர்பார்ப்பது ஒருங்கிணைந்த ஆட்டத்தை மட்டுமே. தடுப்பாட்டம், ரைடிங் சிறப்பாக அமைந்து விட்டால் அணி, இலக்கை (சாம்பியன் பட்டம்) சரியாக பயணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யார் இந்த ரமேஷ்

புரோ கபடி லீக்கில் புனேரி பால்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கும் பி.சி. ரமேஷ் இந்திய அணிக்காகவும் விளையாடி உள்ளார். 1991-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பையில் கர்நாடக அணிக்காக அறிமுகம் ஆனார். இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரில் பணி கிடைத்தது. எனினும் தொடர்ந்து கபடி போட்டிகளில் விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தார். 1995-ல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டில் கபடியில் தங்கம் வென்ற இந்திய அணியில் ரமேஷ் முக்கிய பங்கு வகித்தார். இந்திய கபடி அணிக்கு கேப்டனாகவும் பணியாற்றி உள்ள ரமேஷ், அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார். கடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்கு ரமேஷ் பயிற்சியாளராகவும் செயலாற்றி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்