உலக தடகள சாம்பியன்ஷிப் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் கென்யாவின் கிபிகோன்: 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவின் மெக்லியாட் அசத்தல்

By செய்திப்பிரிவு

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் கிபிகோன் தங்கப் பதக்கம் வென்றார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 23 வயதான கிபிகோன் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் 2.59 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஜெனிபர் சிம்சன் 4:02.76 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும், தென் ஆப்பிரிக்காவின் செமன்யா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

செமன்யா முதன்முறையாக 1500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். வழக்கமாக அவர் 800 மீட்டர் ஓட்டத்தில் களமிறங்கக்கூடியவர். இந்த பிரிவில் அவர் ஒலிம்பிக்கில் இரு தங்கமும், 2009-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் முதலிடமும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்முறை தாண்டுதல்

மகளிருக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெனிசுலாவின் யுலிமார் ரோஜாஸ் தங்கப் பதக்கம் வென்றார். 21 வயதான அவர், 14.91 மீட்டர் தூரம் தாண்டினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் ரோஜாஸ் 15.02 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலம்பியாவின் கேத்ரின் ஐபர்குன் 14.89 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், கஜகஸ்தானின் ரிபகோவா 14.77 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

தடை தாண்டும் ஓட்டம்

ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட், எலைன் தாம்சன் ஆகியோர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஏமாற்றம் அளித்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த மெக்லியாட் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், 23 வயதான ஓமர் மெக்லியாட் பந்தய தூரத்தை 13.04 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய ரஷ்யாவின் சுபென்கோவ், 13.14 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரியின் பாலாஸ் பாஜி 13.28 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். உலக சாதனையை தன்வசம் வைத்துள்ள அமெரிக்காவின் அரைஸ் மெரிட் 5-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் பந்தைய தூரத்தை 13.31 விநாடிகளில் கடந்திருந்தார்.

நிர்மலா ஏமாற்றம்

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்துக்கான அரை இறுதி ஹீட் பிரிவில் இந்தியாவின் நிர்மலா சியோரன் ஏமாற்றம் அளித்தார். 22 வயதான அவரால், பந்தய தூரத்தை 53.07 விநாடிகளில் கடந்து 7-வது இடமே பிடிக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக நடைபெற்ற ஹீட் பிரிவில் மொத்தம் 24 பேர் கலந்து கொண்ட நிலையில் நிர்மலாவுக்கு 22-வது இடமே கிடைத்தது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்தார். நிர்மலா பங்கேற்ற 2-வது ஹீட் பிரிவில் பக்ரைனின் சல்வா நசீர் பந்தய தூரத்தை 50.08 விநாடிகளிலும், நடப்பு சாம்பியனான அலிசன் பெலிக்ஸ் 50.12 விநாடிகளிலும் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

சங்கலி குண்டு எறிதல்

மகளிருக்கான சங்கிலி குண்டு எறிதலில் போலந்தின் அனிதா வால்டர்கிஸ்க் 77.90 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஜெங் வாங் 75.98 மீட்டர் தூரமும், போலந்தின் மால்வினா கோப்ரான் 74.76 மீட்டர் தூரமும் எறிந்து வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்