3 பந்துகளில் 3 சிக்ஸர்கள் விளாசல்: மீண்டும் மஞ்சள் உடைஅணிவதில் மகிழ்ச்சி - டிஎன்பிஎல் தொடக்க விழாவில் தோனி கருத்து

By செய்திப்பிரிவு

மஞ்சள் நிற உடையை அணிவதில் மகிழ்ச்சி அடைவதாக டிஎன்பிஎல் தொடக்க விழாவில் தோனி தெரிவித்தார்.

டிஎன்பிஎல் 2-வது சீசன் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதியது. முன்னதாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிக்ஸர் விளாசும் போட்டி நடைபெற்றது. இதில் மகேந்திர சிங் தோனி, மேத்யூ ஹைடன், பத்ரி நாத், மோகித் சர்மா, எல்.பாலாஜி, அனிருத்தா ஸ்ரீகாந்த், கணபதி, பவன் நெகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோனி உள்ளிட்ட அனைவரும் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்திருந்தனர். சிக்ஸர் விளாசும் போட்டிக்கு முன்னதாக மைதானத்தை வலம் வந்த தோனியும், ஹைடனும் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு மஞ்சள் நிற டி-சர்ட்களை வழங்கினர்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற சிக்ஸர் விளாசும் போட்டியில் முதலில் ஹைடன் பேட் செய்தார். 3 பந்துகளில் அவர் 2 சிக்ஸர்கள் அடித்தார். தொடர்ந்து பவுலிங் மெஷின் மூலம் தோனி பந்துகள் வீசினார். இதில் அனிருத்தா 2, பத்ரிநாத் 2, பாலாஜி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர். பவன் நெகி, மோகித் சர்மா ஆகியோர் அடித்த பந்துகள் எல்லை கோட்டை தாண்டி விழவில்லை. கடைசியாக தோனி பேட் செய்தார். அவருக்கு மெஷின் மூலம் மோகித் சர்மா பந்து வீசினார். அவர் வீசிய 3 பந்துகளையும் தோனி, ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரிக்கு பறக்கவிட மைதானமே கரகோஷத்தில் சற்று அதிர்ந்தது. இதைத் தொடர்ந்து தோனி கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சேப்பாக்கத்தில் பேட் செய்தேன். அதன் பின்னர் ஒருநாள் போட்டி உட்பட எந்த வடிவிலான போட்டிகளிலும் நான் இங்கு விளையாடவில்லை. மீண்டும் இங்கு பேட் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசியாக இங்கு இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஆனால் அதில் நான் இடம்பெறவில்லை. சென்னை ரசிகர்கள் எப்போதுமே நிபந்தனையற்ற ஆதரவு வழங்கக்கூடியவர்கள்.

இங்குதான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். 8 வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சென்னை எனக்கு 2-வது தாய் வீடு என்பதை எப்போதுமே பெருமையாக கூறுவேன். மீண்டும் மஞ்சள் நிற உடையை அணிவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்கான நீலநிற உடை போன்று மஞ்சள் நிறமும் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

டிஎன்பிஎல் போட்டிகளை முழுவதுமாக நான் பார்த்தது இல்லை. ஆனால் அதன் சிறப்பம்சங்கள் அடங்கிய தொகுதியை பார்த்துள்ளேன். தமிழக அளவில் நடத்தப்படும் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்த தொடரின் மூலம் சிறந்த வீரர்களை தமிழகம் உருவாக்குகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் போது வீரர்கள் அதிகம் கற்றுக்கொள்கின்றனர். முதல்தர போட்டிகளில் அவர்கள் தங்களது திறனை அதிகரித்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தேர்வு செய்யப்படுவது கூடுதல் சிறப்பு.

இவ்வாறு தோனி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்