ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

By இரா.முத்துக்குமார்

கால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இலங்கையின் திலுருவன் பெரேரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

25/3 என்ற நிலையில் இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களையே தாக்குப் பிடிக்க முடிந்தது. வார்னர் மட்டுமே அதிரடி முறையில் 41 ரன்களை அதிகபட்சமாக எடுக்க ஆஸ்திரேலியா 183 ரன்களுக்குச் சுருண்டு 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வார்ன் - முரளிதரன் கோப்பையை அடுத்த டெஸ்ட் முடிந்தவுடன் இலங்கை கேப்டன் மேத்யூஸ் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

திலுருவன் பெரேரா அரைசதம் எடுத்தும், ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரரானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 முறையே அரைசதம், 10 விக்கெட்டுகள் மைல்கல் நடைபெற்றுள்ளது, இதில் பெரேரா 11-வது டெஸ்டில் தனது 50-வது விக்கெட்டைக் கைப்பற்றி அதிவேக 50 விக்கெட்டுகளுக்கான இலங்கை சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

கடந்த 19 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கூட அரைசதம் எடுக்காமல் இந்த டெஸ்ட் முடிந்துள்ளது. 38 பந்துகள் தங்கள் அணியின் மானத்தைக் காக்க போராடிய பீட்டர் நெவில் கடைசியில் ஹெராத் பந்தை பிளிக் செய்து விட்டு இரண்டு அடிகள் கிரீசுக்கு வெளியே எடுத்து வைத்ததுதான் தாமதம், ஷார்ட் லெக்கில் நின்றிருந்த குசல் மெண்டிஸ் அபாரமாக பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனார், இலங்கை வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது.

டேவிட் வார்னர் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து இன்று முதலில் ஆட்டமிழந்தார். பெரேரா பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார் திரும்பவில்லை கால்காப்பில் வாங்கினார், அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார், ரிவியூ தோல்வியில் முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித் இன்று அருமையான கவர் டிரைவ், ஆன் டிரைவுடன் இன்று தொடங்கினார், இறங்கி வந்து ஆடினார், ஆனால் 30 ரன்களில் அவர் பெரேரா பந்தில் பேட்-பேடு கேட்சில் வெளியேறினார், இம்முறை நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

மிட்செல் மார்ஷ், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சந்தகன் பந்தை ஆடாமல் கால்காப்பில் தடுத்தார், கடுமையான முறையீட்டை நடுவர் மறுக்க மீண்டும் ரிவியூ கிங் மேத்யூஸ் முடிவெடுக்க, சந்தகன் பந்து திரும்பி ஸ்டம்பை அடிக்கும் என்று ரீப்ளேயில் தெரிய 18 ரன்களில் மிட்செல் மார்ஷ் அவுட்.

ஆடம் வோஜஸ் 28 ரன்களில் ஸ்பின்னை முறையாக ஆட முடியாமல் ரிவர்ஸ் ஸ்வீப் உத்தியைக் கையாண்டார், ஒரு முறை பெரேரா பந்தை அப்படிச செய்யப்போக பந்தை விட்டார் பவுல்டு ஆகி வெளியேறினார். இது உணவு இடைவேளைக்கு முன்பான நடப்பு.

இடைவேளைக்குப் பிறகு சம்பிரதாயம் நிறைவேறியது, மிட்செல் ஸ்டார்க், ஒரு சிக்ஸ் 3 பவுண்டரி அடித்து 26 ரன்களில் ஹெராத் பந்தில் பவுல்டு ஆனார். ஹேசில்வுட் பெரேரா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இது பெரேராவின் 10-வது விக்கெட்டாகும். அதன் பிறகுதான் பீட்டர் நெவில், மெண்டிஸின் ‘ரிப்ளெக்ஸிற்கு’ ரன் அவுட் ஆனார். இலங்கை முகாமில் கொண்டாட்டம்! குதூகலம்!

ஆட்ட நாயகனாக பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை ஸ்பின்னர்கள் கிராஸ் சீம் பவுலிங்கையும் மேற்கொண்டனர் இதனால் சில பந்துகள் பிட்ச் ஆகி திரும்பாமல் சறுக்கிக் கொண்டு சென்றன, இத்தகைய பந்துகளையும் திரும்பும் பந்துகளையும் ஆஸி.வீரர்களால் ஒரு போதும் திருப்திகரமாகக் கணிக்க முடியவில்லை. ஸ்மித் ஆட்டம் முடிந்து கூறியபோது, “இத்தகைய பவுலிங்கை எதிர்கொள்வது எங்களுக்கு அன்னியமானது” என்று கூறியதில் உண்மை உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

8 mins ago

வாழ்வியல்

18 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

42 mins ago

சுற்றுச்சூழல்

48 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்