அனைவரும் பங்களிப்பு செய்ய விரும்புகின்றனர்: விராட் கோலி மகிழ்ச்சி

By இரா.முத்துக்குமார்

கான்பூரில் நடைபெற்ற 500-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்தவுடன் பரிசளிப்பு விழாவில் அவர் கூறியதாவது:

வீரர்கள் தங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டனர். சில தருணங்களில் கவலை ஏற்பட்டது உண்மைதான். முதலில் 100 ரன்கள் கூட்டணி, பிறகு 2 தேவையில்லாத எதிர்பாராத ஆட்டமிழப்புகள். பிறகு ஜடேஜா, அஸ்வின் உமேஷ் 30-40 கூடுதல் ரன்களைப் பெற்றுத் தந்தனர். இது மனோவியல் ரீதியாக வித்தியாசத்தை ஏற்படுத்தியது. கேப்டன்சியில் இன்னமும் அனுபவம் பெற்றவனில்லை என்பதால் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறேன்.

கடந்த காலத்தில் ஆக்ரோஷமான களவியூகத்துடன் பந்து வீசியதால் ரன்களைக் கசியவிட்டோம். ஆனால் விக்கெட்டுகள் விழாத தருணத்தில் பொறுமை மிகவும் அவசியம். ரன்களை கட்டுப்படுத்த வேண்டும், கள வியூகத்தை நெருக்கமாகவும் அதே வேளையில் ரன்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் அமைத்தோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒரு விஷயம் பின்கள வீரர்களின் பங்களிப்பு.

அனைத்து நல்ல அணிகளிடத்திலும் இது பெரிய பலம். இந்தப் புலத்தில் நாங்களும் கடினமாக உழைத்து வருகிறோம். அஸ்வின்க் சஹா, மிஸ்ரா ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். அனைவரும் பங்களிப்பு செய்ய விரும்புகின்றனர். பின்கள வீரர்கள் ரன்கள் அடிப்பது எதிரணியினரை நிலைகுலையச் செய்வதாகும். 300 ரன்களுக்குள் எங்களை மட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் 330 ரன்கள் எடுத்தோம்.

இது மறக்க முடியாத டெஸ்ட், இது ஒரு நல்ல டெஸ்ட் போட்டி. ஏனெனில் நியூஸிலாந்து அணி 2-ம் நாளில் அற்புதமாக பேட் செய்தனர். நானும், அஸ்வினும் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தினோம். ஆட்டம் கடைசி நாள் வரை வந்ததற்கு நியூஸிலாந்து அணியின் உறுதியே காரணம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

கேன் வில்லியம்சன் கூறும்போது, “நிறைய உடன்பாடான விஷயங்களைப் பெற்றோம், சில பாடங்களையும் கற்றோம். இந்தியா எங்களை அனைத்து விதங்களிலும் முறியடித்தது. 2 செஷன்களில் ஆட்டம் எங்கள் பிடியிலிருந்து நழுவியது. முதல் இன்னிங்ஸில் நல்ல பேட்டிங் சூழ்நிலையில் இந்திய அணியை 300 ரன்கள் பக்கம் மட்டுப்படுத்தியதும், பிறகு அந்த ரன்களுக்கு சற்று அருகில் வந்ததும் குறிப்பிடத்தகுந்தவை. ரோங்கி, சாண்ட்னர் அற்புதமாக ஆடினர், குறிப்பாக பந்துகள் கடுமையாக திரும்பும் இன்றைய தினத்தில் அபாரமாக பேட் செய்தனர். சாண்ட்னர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சோபித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ரோங்கி மீண்டும் அணிக்கு வந்து அருமையாக ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது, எனினும் தோல்வியிலிருந்து மீள வேண்டியுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்