இன்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் ஃபெடரர்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் இன்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் ஃபெடரர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார். 1 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஒரேயொரு முறை மட்டுமே சர்வீஸை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஃபெடரர், அதிலும் சிறப்பாக ஆடி சர்வீஸை மீட்டார்.

6.5 அடி உயரமுடைய கெவின் ஆண்டர்சனின் அதிரடி சர்வீஸ்களை சிறப்பாக எதிர்கொண்ட ஃபெடரர், முதல் செட்டின் கடைசி கேமில் ஆண்டர்சனின் சர்வீஸை முறியடித்து அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர் இரு முறை ஆண்டர்சனின் சர்வீஸை முறியடித்து 6-1 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், “முதல் செட்டின் கடைசி கேமில் வென்றது மிகப்பெரிய வெற்றியாகும். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் ஆண்டர்சனின் இரு சர்வீஸை முறியடித்தது போனஸ் போன்றது. என்னைப் பொறுத்தவரை இது மிகச்சிறந்த போட்டியாகும்” என்றார்.

ஃபெடரர் தனது அரையிறுதியில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவை சந்திக்கிறார். அது குறித்துப் பேசிய ஃபெடரர், “துபை டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக டோல்கோபோலோவுடன் பயிற்சிபோட்டியில் விளையாடியிருக்கிறேன். அதில் அவர் நன்றாக ஆடினார். பந்தை மிக விரைவாக திருப்பியடித்தார். ஷார்ட் பந்துகள் எப்போது கிடைத்தாலும், அதை சிறப்பாகக் கையாண்டு முன்னிலை பெற விரும்புவார். அபாரமாக சர்வீஸ் அடிக்கக்கூடியவர். எனவே அவருடனான அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பானதாக இருக்கும்” என்றார்.

இதற்கு முன்னதாக பெடரரும், டோல்கோபோலோவும் 2010-ல் பேசலில் நடைபெற்ற ஸ்விஸ் இண்டோர்ஸ் போட்டியில் விளையாடினர். அதில் ஃபெடரர் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக டோல்கோபோலோவ் விலகினார்.

டோல்கோபோலோவ் தனது காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலஸ் ரயோனிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். டோல்கோபோலோவ் முதல்முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். சர்வதேச தரவரிசையில் 31-வது இடத்தில் இருப்பவரான டோல்கோ போலோவ் தனது 3-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நடாலையும், காலிறுதியில் ரயோனிச்சையும் வீழ்த்தியிருப்பதால் ஃபெடரருக்கு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிச்சுற்றில் சானியா ஜோடி

இன்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய-ஜிம்பாப்வே ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-4, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் லூஸி ரடேக்கா-சீனாவின் ஜி ஜெங் ஜோடியைத் தோற்கடித்தது.

கடந்த சீசனின் இறுதிக் கட்டத்தில் அடுத்தடுத்து இரு சாம்பியன் பட்டங்களை வென்ற சானியா-காரா ஜோடி, இந்த சீசனில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. முன்னதாக இந்த சீசனில் இரு முறை முதல் சுற்றோடும், இரு முறை காலிறுதியோடும் சானியா ஜோடி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்