அப்ரிதி விளாசலில் பாக். த்ரில் வெற்றி

By செய்திப்பிரிவு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தான் ஏறக்குறைய இறுதிச்சுற்றை உறுதி செய்தது. அதேநேரத்தில் 4 புள்ளிகளை மட்டுமே வைத்திருக்கும் இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.

ஒருவேளை வங்கதேசத்திடம் பாகிஸ்தான் தோற்று, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா போனஸ் புள்ளியுடன் மட்டுமின்றி நல்ல ரன் ரேட்டில் வென்றால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஸ்டூவர்ட் பின்னிக்குப் பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஹபீஸ் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஷிகர் தவண் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் அதிரடி

இதையடுத்து கேப்டன் கோலி களம்புகுந்தார். கடந்த ஆட்டங்களில் சொதப்பிய ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார். உமர் குல் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஜூனைத் கான் வீசிய 7-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியையும் ரோஹித் சர்மா விளாச, 9 ஓவர்களில் 56 ரன்களை எட்டியது இந்தியா.

ஆனால் உமர் குல் வீசிய அடுத்த ஓவரில் கோலி (5 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ரஹானே அதே ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் வேகமாக விளையாடிய ரோஹித் சர்மா, அப்ரிதி வீசிய 15-வது ஓவரில் பவுண்டரி அடித்து 44 பந்துகளில் அரைசதம் கண்டார். ஒருநாள் போட்டியில் ரோஹித் அடித்த 22-வது அரைசதம் இது. இதன்பிறகு ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் வேகம் குறைந்தது. இந்தியா 92 ரன்களை எட்டியபோது ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 58 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார்.

ராயுடு அரைசதம்

இதன்பிறகு ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 23 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், அம்பட்டி ராயுடு-ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்க்க, இந்தியா 200 ரன்களைக் கடந்தது. 55 பந்துகளில் அரைசதம் கண்ட ராயுடு 62 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த அஸ்வின் 9 ரன்களிலும், முகமது சமி ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.

12 ரன்களில் இருந்தபோது முகமது ஹபீஸ் தவறவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்த ரவீந்திர ஜடேஜா 49 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க, இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிரடி தொடக்கம்

245 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தானுக்கு ஷர்ஜீல் கான்-அஹமது ஷெஸாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவர்களில் 71 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஷர்ஜீல் கான் 25 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டாக, ஷெஸாத்தை 42 ரன்களில் வெளியேற்றினார் மிஸ்ரா.

பின்னர் வந்த கேப்டன் மிஸ்பா உல் ஹக் 1 ரன் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். இவர் கடந்த போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. பின்னர் வந்த உமர் அக்மல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் சற்று தடுமாற்றம் கண்டது.

ஹபீஸ் 75

இதன்பிறகு முகமது ஹபீஸ் சிறப்பாக ஆடி பாகிஸ்தானை சரிவிலிருந்து தூக்கி நிறுத்தினார். அவருக்குப் பக்கபலமாக சோயிப் மசூத் ஆடினார். ஹபீஸ் 82 பந்துகளில் அரைசதமடித்தார். பாகிஸ்தான் 200 ரன்களை எட்டியபோது ஹபீஸை வீழ்த்தினார் அஸ்வின். 117 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து அப்ரிதி களமிறங்க, சோபிய் மசூத் ரன் அவுட்டானார். அவர் 53 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அப்ரிதியுடன் இணைந்தார் உமர் குல். கடைசி 5 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சமி வீசிய 46-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் அப்ரிதி.

அப்ரிதி விளாசல்

ஆனால் 49-வது ஓவரில் உமர் குல்லும், தல்ஹாவும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அஸ்வின் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அஜ்மல் ஆட்டமிழக்க, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆட்டமும் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஜுனைத் கான் 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்க, அடுத்த இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை விளாசி போட்டியை வெற்றியில் முடித்தார் அப்ரிதி.

18 பந்துகளைச் சந்தித்த அப்ரிதி 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். முகமது ஹபீஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

சினிமா

42 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

36 mins ago

தொழில்நுட்பம்

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்