ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

By செய்திப்பிரிவு

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 4 சுற்றில் நேற்றுமுன்தினம் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. ஷோயிப் மாலிக் 78, சர்ப்ராஸ் அகமது 44, பஹர் ஸமான் 31, ஆசிப் அலி 30 ரன்கள் சேர்த்தனர்.

கடைசி கட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்து வீசியதால்பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்த முடிந்தது. கடைசி 7 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 38 ரன்களையே சேர்த்திருந்தது. பும்ரா 10 ஓவர்களை வீசி 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அவர், வீசிய 39 பந்துகளில் ரன்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை.

238 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஷிகர் தவண் 100 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 114 ரன்களும், ரோஹித் சர்மா 119 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 210 ரன்கள் குவித்து மிரளச் செய்தது. 9 விக்கெட்கள் வித்

தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியாக அமைந்தது.  முதல் ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்தையும் தோற்கடித்திருந்தது.

இந்த இரு வெற்றிகளின் மூலம் இந்திய அணி வரும் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. ஏற்கெனவே இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் நடுகள வீரர்களின் திறனை சோதித்து பார்க்கக்கூடும் என கருதப்படுகிறது.

மேலும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடரச்செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவரும் ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 4 சுற்றில் இரு ஆட்டங்களிலும் வெற்றியை நூலிழையில் தவறவிட்டிருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் வெற்றியை தாரை வார்த்த ஆப்கானிஸ்தான் அணி, நேற்று முன்தினம் சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக, மீண்டும் ஒரு முறை கடைசி ஓவரில் தோல்வியை சந்தித்தது.

250 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் முஸ்டாபிஸூர் ரஹ்மான் வீசிய அந்த ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியால் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தாலும் தங்கள் செயல் திறனால் ரசிகர்களின் மனதை வென்றுள்ளனர். இழப்பதற்கு இனிமேல் ஏதும் இல்லை என்பதால் வலுவான பேட்டிங், பந்து வீச்சை கொண்ட இந்திய அணிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி கூடுதல் துணிச்சல் உடன் செயல்பட்டு தொடரை சிறப்பான வகையில் நிறைவு செய்ய முயற்சி செய்யக்கூடும்.

ரஷீத் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்து கூட்டணி இந்திய பேட்டிங் வரிசையை சோதனைக்கு உட்படுத்தக்கூடும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்திய அணியில் உள்ள சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. முக்கியமாக புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கக்கூடும்.

இவர்களுக்கு பதிலாக சித்தார்த் கவுல், தீபக் ஷகார் அல்லது கலீல் அகமது ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க ஜோடி மாற்றப்பட வாய்ப்பு இல்லை.

327 ரன்கள் விளாசி உள்ள ஷிகர் தவண், 269 ரன்கள் குவித்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது ரன் வேட்டையை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 116 ரன்கள் சேர்த்துள்ள அம்பதி ராயுடும் தொடரக்கூடும்.

ஆப்கானிஸ்தான் அணி போதியஅனுபவமின்மையால் ஆட்டத்தின் அழுத்தமான தருணங்களை கையாள்வதில் தடுமாற்றம் காண்கிறது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் வலுவான சுழற்பந்து வீச்சு சேர்க்கையை கொண்டுள்ள அந்த அணியிடம் இருந்து வெற்றி நழுவுவதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.

ரோஹித் சர்மா 7 ஆயிரம் ரன்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இலக்கை விரட்டும் போது இந்திய தொடக்க ஜோடிகளில் இதற்கு முன்னர் கடந்த 2009-ம் ஆண்டு ஹாமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கவுதம் காம்பீர், சேவக் ஜோடி 201 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக இதற்கு முன்னர் இந்திய தொடக்க ஜோடி (கங்குலி-சச்சின்) சேர்த்த அதிக ரன்கள் 159 ஆகவே இருந்தது. இந்த சாதனையை கடந்துள்ள ரோஹித்-தவண் கூட்டணி, ஆசிய கோப்பை வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியை அதிக விக்கெட்கள் (9 விக்கெட்கள்) வித்தியாசத்தில் முதன்முறையாக இந்திய அணி   வீழ்த்தியுள்ளது.

ரோஹித் சர்மா 94 ரன்களை கடந்த போது, ஒருநாள் போட்டியில் 7,000 ரன்களைக் குவித்த 9-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்த மைல்கல் சாதனையை விரைவாக எட்டிய 5-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர், 181 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்த வரிசையில் ஹசிம் ஆம்லா (150), விராட் கோலி (161), டி வில்லியர்ஸ் (166), கங்குலி ஆகியோர் (174) முதல் 4 இடங்களில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்