இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் சதம் எடுத்தவர் யார் தெரியுமா? பிறந்த தினத்தன்று அவரது சாதனைகள் சில

By செய்திப்பிரிவு

இன்று இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி திணறி தொடரை இழந்துள்ளது. ஆனால் இதே இங்கிலாந்துக்கு எதிராகத்தான் இந்திய டெஸ்ட் வரலாற்றின் முதல் சதத்தை அடித்தார் இந்த வீரர். அதுவும் தன் அறிமுகப் போட்டியிலேயே அடித்தவர் என்ற சாதனையையும் நிகழ்த்தியவர்.

அவர் பிறந்த தினம் 11/9 ஆன இன்றுதான். 1911 பஞ்சாப் கபூர்தலாவில் பிறந்த அந்த வீரர்தான் லாலா அமர்நாத். வலது கை பேட்ஸ்மென், வலது கை மீடியம் வேகப்பந்து வீச்சு, விக்கெட் கீப்பர் என்று பலதிறமைகள் படைத்தவர் லாலா அமர்நாத், இவரது மகன்கள்தான் மொஹீந்தர் அமர்நாத், சுரீந்தர் அமர்நாத். இன்னொரு மகன் ரஜீந்தர் முதல் தர கிரிக்கெட்டில் ஆடியவர், ஆனால் சுரீந்தர், மொஹீந்தரை விடவும் ரஜீந்தர்தான் திறமைசாலி என்று லாலா அமர்நாத் கூறியிருப்பதாக தி இந்து ஆங்கிலத்தில் வந்த செய்தி ஒன்றின் மூலம் தெரியவருகிறது.

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆளுமையாகக் கருதப்பட்டவர் லாலா அமர்நாத். இவர் 1933-34-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட்டின் முதல் சதத்தை அடித்தவர், தன் அறிமுகப் போட்டியான இதில் சதம் கண்டார் லாலா அமர்நாத். முதல் இன்னிங்சில் 38 ரன்களையும் 2வது இன்னிங்சில் அதிரடி முறையில் 118 ரன்களையும் எடுத்தார். இந்த டெஸ்ட்டில் இந்தியா தோற்றாலும் லாலா அமர்நாத் எனும் நட்சத்திரம் பிறந்தார்.

இங்கிலாந்தில் நடந்த 1946-ம் ஆண்டு தொடரில் இருமுறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 1952-53 பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் அதிகாரபூர்வ டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை லாலா அமர்நாத் தலைமையில் இந்திய அணி வீழ்த்தியது.

பிரிவினைக்கு முன்பு பாகிஸ்தான் லாகூரில் பிறந்தார்:

பாகிஸ்தான் என்ற ஒன்று உருவாகாத காலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் லாலா அமர்நாத். இங்கிலாந்தின் எம்.சி.சி அணிக்கு எதிராக 1933-34-ல் தெற்கு பஞ்சாப் அணிக்காக மிகப்பிரமாதமான ஒரு 109 ரன்களை எடுத்ததாக கிரிக்கெட் வல்லுநர்கள் இவரை நினைவுகூரும்போது பலமுறை தெரிவித்துள்ளனர். இதற்கு 4 வாரங்களுக்குப் பிறகுதான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அறிமுகத்திலேயே சதம். இந்திய வீரர் ஒருவரின் டெஸ்ட் முதல் சதம்.

இந்த இன்னிங்சில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்ட போது திடீரென ஒரு தாக்குதல் ஆட்டத்தை ஆடினார் லாலா அமர்நாத். அவரே பின்னாளில் கூறியது போல், “ஏதோ ஒரு சக்தி என்னைப் பிடித்து ஆட்டியது போல் ஆடினேன்” என்றார். 78 நிமிடங்களில் 83 ரன்களை விளாசியதாகக் கூறப்படுகிறது. சதம் 117 நிமிடங்களில் வந்தது. நிகோல்ஸ், கிளார்க் என்ற இங்கிலாந்து வேகவீச்சாளர்களை ஹெல்மெட்டெல்லாம் இல்லாத காலத்தில் கடுமையாக இந்த சதத்தின் போது ஹூக் செய்தார் என்றும் ஹெட்லி வெரிட்டியை நடந்து வந்து தூக்கி அடித்ததாகவும் இவரைப் பற்றி கூறுபவர்கள் கூறியதுண்டு. 1946-ல் இங்கிலாந்தில் பந்து வீச்சில் சாதனை நிகழ்த்தினார். இவரது பந்து வீச்சின் அதிசயம் பற்றிக் குறிப்பிடும் மிஹிர் போஸ், வலது கை பவுலரான இவர் பினிஷ் செய்யும் போது வலது கால் முன்னால் இருக்கும் என்றார், இது கடினமான ஒரு பவுலிங் நிலையாகும்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் லாலா அமர்நாத்தை ’பெரிய ஆளுமை’ என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 878 ரன்கள்தான் எடுத்தார். ஒரு சதம் 4 அரைசதம். ஆனால் முதல்தர கிரிக்கெட்டில் 186 போட்டிகளில் 10,426 ரன்களை 41.37 என்ற சராசரியில் 31 சதங்கள் 39 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். 96 கேட்ச்கள் 2 ஸ்டம்பிங்குகள். அதிகபட்ச ஸ்கோர் 262.

1952-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தாவில் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடினார். இந்தப் போட்டி டிரா ஆனது. லாலா அமர்நாத் இந்தத் தொடரில் கேப்டனாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 2-1 என்று பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. அந்த லாலா அமர்நாத்துக்கு இன்று பிறந்த தினம்.

தனது 89-வது வயதில் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி தூக்கத்திலேயே இவர் உயிர் பிரிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்