பலவீனமற்ற டிவில்லியர்ஸை வீழ்த்த முடியாத ஆஸ்திரேலியா: அபாரமான 22வது சதம்!

By ஆர்.முத்துக்குமார்

போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் நேற்று தனது 22வது டெஸ்ட் சதத்தை எடுத்து 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இவரது இந்த மிகச்சிறந்த டெஸ்ட் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியை உருவாக்கி உள்ளது, ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்ஸில் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் (6/49) சற்றுமுன் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து மொத்தமே 72 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது.

இது வரை இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா பவுலர்கள் யாரும் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தவில்லை. டர்பன் டெஸ்ட்டில் ஆட்டமிழந்த போது ரன் அவுட் ஆனார் டிவில்லியர்ஸ். டர்பன் முதல் இன்னிங்சில் 71 நாட் அவுட் என்று எதிர்முனையில் ஆளில்லாமல் முடங்க நேர்ந்தது. இது அந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.

டிவில்லியர்ஸ் ஆடுவதைப் பார்க்கும் போது அவருக்கு பலவீனம் என்ற ஒன்று இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

அதுவும் கீழ்வரிசை பேட்ஸ்மென்களுடன் அவர் ஆடும்போது மிகவும் அபாயகரமன வீரராகத் திகழ்கிறார்.

நேற்று 20 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் எடுக்க டிவில்லியர்ஸ், வெர்னன் பிலாண்டருடன் (36) அமைத்த 84 ரன்கள் கூட்டணியும் பிறகு மஹராஜுடன் (30) சேர்ந்து அமைத்த 58 ரன்கள் கூட்டணியும் தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றியின் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்த இன்னிங்ஸில் 20 பவுண்டரிகள் 1 சிக்சரை அடித்த டிவில்லியர்ஸ் மொத்தம் 146 பந்துகளில் 126 ரன்கள் என்று 86.30 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் தன் 22வது சதத்தை எடுத்தார்.

சச்சின், லாரா, சேவாக், பாண்டிங், காலிஸ், கில்கிறிஸ்ட் ஆகியோர் ஒருவிதமாக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றால் டிவில்லியர்ஸின் ஆதிக்கம் வேறு விதமானது, இவர் பெரிய அளவில் உடல்மொழியில் தன் ஆக்ரோஷத்தைக் காட்டுவதில்லை, நல்ல பந்தை மிகவும் இழிவாகப் பார்த்து பவுண்டரிக்கு அனுப்புவதில்தான் டிவில்லியர்ஸின் ஆக்ரோஷம் அடங்கியுள்ளது. அதே போல் நான் என் குழந்தைப் பருவத்திலிருந்து பழகிய நடைமுறையை மாற்ற மாட்டேன் என்ற பிடிவாதமும் ஈகோவும் இல்லாதது இவரது ஆட்டம், எந்த ஒரு பரிசோதனை முயற்சி ஷாட்டுக்கும் எந்த ஒரு வடிவத்திலும் அயராதவர்.

அதாவது இவரால் அணியின் நிலைமை எப்படியிருந்தாலும் எங்கிருந்தாலும் ரன்களைக் குவிக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. டிவில்லியர்ஸ் நேற்று சதம் அடித்த பவுண்டரி ஷாட் இதற்கு உதாரணம். ஸ்லிப்பின் தலைக்கு மேல் பாட் கமின்ஸைத் தூக்கி அடித்து பவுண்டரி மூலம் 117 பந்துகளில் சதம் கண்டார். ஒரே சிக்ஸரும் மிட்விக்கெட் மேல் அனாயசமாக அடித்த சிக்ஸ் ஆகும். பிலாண்டர் மிகப்பொறுப்புடன் ஆடி உறுதுணையாகத் திகழ்ந்தார். ஆனால் கமின்ஸ் பந்தில் பேங்கிராப்ட்டின் சிறந்த ஷார்ட் லெக் கேட்சுக்கு ஆட்டமிழந்தார்.

டிவில்லியர்ஸ் என்ற மேதை எதிர்முனையில் இருக்கும் போது மஹராஜ் முண்டியிருக்கக் கூடாது, அதுவும் ஒரு முறை லயன் பந்தை தூக்கி அடித்து கவாஜா பந்தை கேட்ச் செய்து எல்லைக் கோட்டை கடந்து விடுவோம் என்று நினைத்து பந்தை உள்ளுக்குள் தூக்கிப் போட்டு பிடித்தார், ஆனால் பந்தைப் பிடிக்கும் முயற்சியிலேயே கயிறைத்தாண்டி அவர் கால் சென்றது தெரிந்தது. அதனால் அது சிக்ஸ் ஆனது. ஆனால் இந்த மஹராஜ் ஷாட் எதிர்முனையில் இருந்த உண்மையான பேட்டிங் மகராஜாவானா டிவில்லியர்சுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியது.

மஹராஜ் டிவில்லியர்ஸ் அடைந்த வெறுப்பை பொருட்படுத்தவில்லை மீண்டும் நேதன் லயனை லெக் திசையில் இன்னொரு சிக்ஸ் அடித்தார். பிறகு ஜோஷ் ஹேசில்வுட் பந்தை ஏதோ நெட் பவுலரின் பந்து போல் அசிங்கமாக ஸ்லாக் செய்து 24 பந்துகளில் 30 ரன்களில் பவுல்டு ஆனார். மீண்டும் வெறுப்படைந்தார் டிவில்லியர்ஸ். இந்த ஷாட் சென்னையில் சச்சின் ஒருமுனையில் வெற்றிக்காகப் போராடிக் க்கொண்டிருந்த போது வாசிம் அக்ரம் பந்தை அசிங்கமாகச் சுற்றி குச்சியை இழந்த நயன் மோங்கியாவின் ஷாட்டை நினைவு படுத்தியது.

லுங்கி இங்கிடி, டிவில்லியர்ஸை ஸ்ட்ரைக்குக்குக் கொண்டு வரும் முயற்சியில் ரன் அவுட் ஆனார். டிவில்லியர்ஸ் 146 பந்துகளில் 126 ரன்கள் நாட் அவுட். தென் ஆப்பிரிக்கா 139 ரன்கள் முன்னிலை பெற்றது. தற்போது ரபாடாவின் அற்புத ஸ்பெல்லில் ஆஸ்திரேலியா தோல்வியை எதிர்நோக்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

17 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்