ஆசிய போட்டி ஸ்குவாஷ்: வெண்கலம் வென்றார் தீபிகா

By ஏஎஃப்பி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அவர் முதல்நிலை வீராங்கனையான நிகோல் டேவிட்டிடம் 4-11,4-11, 5-11 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து தீபிகா வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைய வேண்டியதாயிற்று.

எனினும் இரு மாதங்களில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டம் இது. கடந்த மாதம் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து அவர் தங்கப்பதக்கம் வென்றார். இப்போது ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள தீபிகா பலிக்கல், ஆசிய விளையாட்டு அரையிறுதியில் நிகோலுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆசிய போட்டியில் இதுவரை தோல்வியையே சந்தித்திராத நிகோல் 25 நிமிடங்களில் தீபிகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக காலிறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீராங்கனையும், தனது இரட்டையர் பிரிவு ஜோடியுமான ஜோஷ்னா சின்னப்பாவை தீபிகா வீழ்த்தினார்.

சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 10 இடத்துக்குள் வந்த முதல் இந்திய வீராங்கனை என்று சாதனையையும் தீபிகா ஏற்கெனவே படைத்துள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய மகளிர் அணிக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியின் அணி பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் ராஹி சர்னோபட் 580 புள்ளிகளும், அனிஷா சையீத் 577 புள்ளிகளும், ஹீனா சிந்து 572 புள்ளிகளும் எடுத்தனர். இதன் மூலம் மொத்தம் 1,729 புள்ளிகளுடன் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

மகளிர் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவு போட்டியில் சர்னோபட் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆசிய விளையாட்டில் இது துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்துள்ள 4 வது பதக்கமாகும். 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தென்கொரியா 1,748 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சீனா 1,747 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஜீது ராய் 50 மீட்டர் பிஸ்டர் பிரிவில் ஏற்கெனவே தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றது. ஸ்வேதா சவுத்ரி மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் வெண்கலம் வென்றார்.

சைக்கிள் வீரர்கள் தொடர்ந்து ஏமாற்றம்

சர்வதேச சைக்கிள் போட்டிகளில் இந்திய அணியின் ஏமாற்றம் தொடர்கிறது. ஆசிய விளையாட்டிலும் இந்திய வீரர்கள் தகுதிச் சுற்றுடன் வெளியேறினர். நேற்று நடைபெற்ற ஆடவர் ஸ்ரின்ட் சைக்கிள் போட்டி தகுதிச் சுற்றில் இந்தியாவின் அமர்ஜீத் சிங் 13-வது இடத்தையும், அம்ரீத் சிங் 14-வது இடத்தையும் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினர். முதல் 12 இடங்களில் வந்த வீரர்கள் பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.

அமர்ஜீத் சிங் 65.952 கி.மீ. வேகத்திலும், அம்ரீத் சிங் 64.917 கி.மீ. வேகத்திலும் சைக்கிளை ஓட்டினர். எனினும் அவர்கள் மற்ற வீரர்களைவிட முறையே 10.917 விநாடி, 11.091 விநாடி பின்தங்கியதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

ஹாக்கியை வெற்றியுடன் தொடங்கினர் இந்திய மகளிர்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை இந்திய மகளிர் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நேற்று தாய்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் வென்றனர். இதில் பூணம் ராணி 2 கோல்களை அடித்து அசத்தினார்.

கூடைப் பந்து போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது தகுதிச் சுற்றில் கஜகஸ்தானை 80-61 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

தீபிகாவுக்கு ரூ.20 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தீபிகாவுக்கு நேற்று அவர் அனுப்பிய பாராட்டுக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழக மக்கள் அனை வரையும் பெருமை அடைய செய்துள் ளீர்கள். உங்களின் இந்த உன்னதமான சாதனைக்காக எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தமிழக மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை 2011 டிசம்பர் முதல் ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்தேன். அதன்படி, தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

தங்களையும், தங்களின் வெற்றிக்காக உழைத்தவர்களையும் வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று இந்திய திருநாட்டின் சார்பாகவும், தமிழ்நாடு சார்பாகவும் மீண்டும் தங்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

7 mins ago

சுற்றுலா

10 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

35 mins ago

சினிமா

30 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்