4-வது இடத்துக்கான பிரச்சினையை தீர்க்கிறாரா அம்பதி ராயுடு?

By பெ.மாரிமுத்து

இந்திய  கிரிக்கெட் அணியில் கடந்த இரு ஆண்டுகளாகவே பேட்டிங் வரிசையில் 4-வது வீரராக களமிறங்கும் வீரரின் செயல்திறன் சீரான வகையில் தொடர்ச்சியாக அமையவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அதவாது இலங்கை சுற்றுப்பயணம் முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் உள்ளிட்ட 25 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பேட்டிங்கில் 4-வது வரிசையில் மட்டும் 9 வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கிய பார்த்தது. இந்த வகையில் யுவராஜ் சிங், கே.எல்.ராகுல். விராட் கோலி, எம்எஸ் தோனி, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஜிங்க்ய ரஹானே ஆகியோரை 4-வது வரிசையில் களமிறக்கி பரீட்சார்த்த முறைகளை இந்திய அணி நிர்வாகம் செயல்படுத்தி பார்த்தது. ஆனால் எதற்கும் பலன் கிடைக்கவில்லை.

உலகக் கோப்பை தொடருக்கு சுமார் 9 மாதங்களே இருந்த நிலையில் பேட்டிங் வரிசையில் 4-வது வீரருக்கான இடம் காலியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் அம்பதி ராயுடு அணிக்குள் கொண்டுவரப்பட்டார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேஅணிக்காக விளையாடிய அம்பதி ராயுடு 16 ஆட்டங்களில் 43 சராசரியுடன் 602 ரன்கள்குவித்திருந்தார். ஸ்டிரைக் ரேட் 149.75 ஆகவும் இருந்தது. இதுவே தேசிய அணியில் அம்பதி ராயுடு மீண்டும் இடம்பெறக் காரணமாக அமைந்தது.  யோ-யோ உடற்தகுதி தேர்வால் இங்கிலாந்து தொடரில் இடம் பெற முடியாமல் போனஅம்பதி ராயுடுவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இருந்து 11 ஆட்டங்களில் விளையாடிய அவர், சராசரி 56 உடன் 392 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு சதம், 3 அரை சதங்கள் அடங்கும். 4-வது இடத்தில் களமிறங்கிய வீரர்களில் அம்பதி ராயுடு மட்டுமே நீண்ட தூரம் பயணித்தார். அணி நிர்வாகம் அவர் மீது வைத்த நம்பிக்கை நீர்த்துபோகவில்லை. மேலும் அணியின் பரீட்சார்த்த முறையிலும் மற்ற வீரர்களைவிட அம்பதி ராயுடு ஒருபடி முன்னேறியிருந்தார்.

மற்ற வீரர்களை காட்டிலும் 4-வது இடத்துக்கு அம்பதி ராயுடு தான் சரியான வீரரா?, மற்ற வீரர்களால் முடியாததை ராயுடு மட்டும் எப்படி சாத்தியமாக்குகிறார் என்ற கேள்விகள் எழலாம். இதற்கு விடை தருகிறது வெலிங்டனில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் அம்பதி ராயுடுவின் பொறுப்பான ஆட்டம்.

18 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் விஜய் சங்கருடன் இணைந்து தனதுஅனுபவத்தால் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார் அம்பதி ராயுடு. இந்திய அணியின் பேட்டிங்கில் 4-வது இடத்துக்கு மட்டும் ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது என்ற கேள்வி எழலாம். ஆட்டத்தின் மையப்புள்ளியாக 4-வது இடம் விளங்கு வதுதான் இதற்கு காரணம். டாப் ஆர்டர் சரியும் போது நடுஓவர்களை சாதுர்யமாக நகர்த்தி செல்வதும், இறுதிக்கட்ட ஓவர்களில் உத்வேகத்துடன் செயல்படுவதிலும் 4-வது வரிசையில் களமிறங்கும் வீரர் தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.

4-வது இடத்தில் களமிறங்கும் வீரர் டாப் ஆர்டருக்கும் மிடில் ஆர்டருக்கும் இடையே பாலம் போன்று செயல்படக்கூடியவர். ஆட்டத்தை சமநிலைப்படுத்துதல், உத்வேகம் பெற்று பெரிய இலக்கை அமைப்பதிலும், வெற்றிகரமாக இலக்கை துரத்துவதிலும் 4-வது இடத்தில் களமிறங்கும் வீரர் முக்கிய பங்காற்ற வேண்டும். இந்த இடத்தில்தான் அனுபவம் முக்கிய பங்குவகிக்கும்.

துணைக்கண்ட நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாகவே ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களுக்கு அம்பதி ராயுடு தேர்வானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற ஆட் டத்தில் 299 ரன்கள் இலக்கை துரத்திய போது அம்பதி ராயுடு 36 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து ஏமாற்றம் அளித்தார்.

இதன் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 350 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களத்தில் செட்டில் ஆகியிருந்த அம்பதி ராயுடு நடு ஓவர்களிலும், கடைசி கட்டங்களி லும் நிதானமாக விளையாடியது சிறிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அம்பதிராயுடுவின் அனுபவத்தை கருத்தில் கொண்டும், 4-வது இடத்துக்கான இடத்தை அவரால் பூர்த்தி செய்ய முடியும் என இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டது. ஆனால் ஹாமில்டன் போட்டியில் டக்அவுட் ஆகி கடும் அதிர்ச்சி கொடுத்தார் அம்பதி ராயுடு.

இருப்பினும் கடைசி ஒருநாள் போட்டியில் அம்பதி ராயுடுவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தேடிவந்தது. 18 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் தனது உயர்மட்ட செயல்திறனால் 113 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த ஆட்டத்தில் அவர், இரு பெரிய விஷயங்களை லாவகமாக கையாண்டார். ஒறு விஜய் சங்கருடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தது. மற்றொன்று

அதிக பந்துகளை வீணடித்தபடி எதிர்முனையில் உள்ள விஜய் சங்கரை சுதந்திரமாக பேட் செய்ய வைத்தார்.

சங்கருடன் இணைந்து விளையாடிய போது 81 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த அம்பதிராயுடு அவர், ஆட்டமிழந்த பிறகு 32 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்கள் அடங்கும். களத்தில் நீண்ட நேரம் நிலைபெற்றிருந்ததால் உத்வேகம் பெற்ற அம்பதி ராயுடு பொறுப்புடன் செயல்பட்டிருந்தார். கடந்த 7 ஆட்டங்களில் அவர், இதுபோன்ற ஒரு கட்டுக்கோப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதில்லை.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றால் சுமார் 11 ஆட்டங்களில் விளையாட வேண்டியது இருக்கும். டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்தக்கூடும். ஒருவேளை இக்கட்டான சூழ்நிலைகளில் இவர்கள் விரைவிலேயே ஆட்டமிழக்கும் போது அணியின் சுமை நடுவரிசை பேட்டிங் மீதான் விழும். இதனால் வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டம் உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி மேலும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் தற்போது அம்பதி ராயுடுவின் உறுதிமிக்க ஆட்டம் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கில் உள்ள தலைவலியை நீக்கும் அருமருந் தாக அமையக்கூடும் என கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

கல்வி

48 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்