இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை!

By ஏ.வி.பெருமாள்

நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தாயகம் திரும்புகிறபோது எங்களின் கிரிக்கெட் ஆட்டத்தாலும், செயல்களாலும் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்து செல்வோம். இங்கே எங்களுடைய வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அழிக்க நாங்கள் விரும்பவில்லை.

இப்படி மிக அழகாக முதிர்ச்சியோடு பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வரும் லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனுமான முகமது ஹபீஸ்தான்.

விளையாட்டில் அரசியலை கலக்காதீர்கள். பிரச்சினை என்பது இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான். வீரர்களாகிய எங்களுக்கு இடையே இல்லை. எங்களை இணைந்து விளையாட அனுமதியுங்கள். உங்களின் ஆதாயத்துக்காக அரசியல் சாயம் பூசி எங்களின் கனவுகளை சிதைக்காதீர்கள். விளையாட்டிலும் விரோதத்தை நுழைக்காதீர்கள் என்பதைத்தான் முகமது ஹபீஸ் சூசகமாக கூறியிருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.

முகமது ஹபீஸின் முதிர்ச்சியான பேச்சிலிருந்தே அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணரமுடியும். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினை எப்போது ஓயும் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. அதுவரை இரு நாடுகள் இடையே விளையாட்டு போட்டியே நடைபெறக்கூடாது என நிறுத்திவைப்பது எப்படி சரியான முடிவாக இருக்க முடியும்?

தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்

2008-ல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு 2012 டிசம்பருக்கு முன்பு வரை இந்தியா-பாக். இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. 2009-ல் பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாதுகாப்பை காரணம் காட்டி அங்கு சென்று விளையாட அனைத்து அணிகளும் மறுத்துவிட்டன. அதன்பிறகு விளையாட்டுத்துறையில் தனிமைப்படுத்தப்பட்டது பாகிஸ்தான்.

2012-ம் ஆண்டின் இறுதியில் இந்தியா-பாக். இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற பிறகும்கூட ஐபிஎல் போட்டியில் விளையாட பாகிஸ்தானியர்கள் அனுமதிக்கப்படவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள வீரர்கள் ஐபிஎல் போட்டியில் ஆடுகிறார்கள். ஆனால் திறமைக்கு பெயர்பெற்ற பாகிஸ்தானியர்களோ தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற நாடுகளைப் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செல்வாக்கு படைத்ததல்ல. இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரிய அளவில் ஊதியம் இல்லை. அதனால்தான் அவர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார்கள்.

வதைக்கப்படும் வீரர்கள்

ஹாக்கி இந்தியா லீ்க் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தானியர்கள் பெற்றபோதிலும், கடைசி நேரத்தில் வட மாநிலத்தவர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக ஒரு போட்டியில்கூட விளையாடாத நிலையில் திருப்பியனுப்பப்பட்டார்கள். தமிழகத்தில்கூட சமீபத்தில் ஆசிய இளையோர் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை சென்ற இரு வீரர்கள் போட்டி தொடங்கும் தினத்தில் திருப்பியழைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்காக, அப்பாவி விளையாட்டு வீரர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை தடுத்துவிட முடியுமா? இல்லை நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்குத்தான் தீர்வு கிடைத்துவிடுமா? நிச்சயம் எந்தத் தீர்வும் கிடைக்காது.

மறுக்கப்படும் வாய்ப்புகள்

அரசியல் மோதல்களைக் காரணம் காட்டி இனி நமக்கும், அந்த நாட்டுக்கும் இடையே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதனால் இனி அந்த நாட்டு அணியுடனோ அல்லது அந்த நாட்டிலோ சென்று எந்த வீரரும் விளையாடக்கூடாது என மிக எளிதாக அறிவித்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை பற்றி ஒரு நொடியாவது சிந்தித்திருப்பார்களா? இப்போது ஆள்பவர்கள், அடுத்த தேர்தலில் தோற்றால், அதற்கடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம். தேவைப்பட்டால் முன்பு தடை விதித்த நாடுகளுடன் மீண்டும் கை கோத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை என்பது 18 முதல் 35 வயதுக்குள் முடிவுக்கு வந்துவிடும். இந்த காலத்தில் அவருக்கு மறுக்கப்படும் வாய்ப்புகள் பிறகு எப்போதுமே கிடைக்காது.

விளையாட வேண்டாம்

இன்றைய உலகில் பணபலம் கொண்ட ஒருவர் எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடலாம். ஆனால் விளையாட்டு அப்படியல்ல. ஒவ்வொருவரும் முழுமையான வீரர்களாக உருவெடுப்பதற்காக எந்த அளவுக்கு மெனக்கெட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் கனவை நனவாக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்? அவர்களுடைய பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ தடைகளைத் தாண்டி முன்னேறி வரும் வீரர்களின் வாழ்க்கையை ஆட்சியாளர்களின் ஒரே அறிவிப்பு சிதைத்துவிடுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு நழுவிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. இனியாவது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் விளையாடாமல், அவர்களின் நலனை மனதில் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

31 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்