கேப்டன்சியில், உத்தியில் முன்னேற்றம் காண்பிப்பாரா விராட் கோலி?

By இரா.முத்துக்குமார்

பிரிஸ்பன் தோல்வியை அடுத்து இன்று மெல்பர்னில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றேயாக வேண்டிய சூழலில் உள்ளது, முதல் போட்டியில் கோலி கேப்டன்சியில் சிலபல தவறுகளைச் செய்தார்.

இந்தப் போட்டியில் அவர் கேப்டன்சி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பிட்ச் கணிப்பில் விராட் இன்னும் பல காத தூரம் முந்தைய கேப்டன்களைக் கடக்க வேண்டியுள்ளது.

காட்டடி கிறிஸ் லின்னுக்கு எதிராக பும்ரா நல்ல ரெக்கார்ட் வைத்திருந்த நிலையில் அவர் பேட் செய்யும் போது பும்ராவைக் கொண்டு வரவில்லை, அதே கதைதான் மேக்ஸ்வெல் பேட்டிங்கின் போதும். பும்ராவை தொடக்கத்தில் கொடுக்காமல் மிடில் ஓவர்களிலும், பிறகு கடைசி ஒவரை வீசச் செய்தாலும் பயன் கிட்டும்.

அனுபவமற்ற, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வீசும் கலீல் அகமெட்டைக் கொண்டு வந்து கிறிஸ் லின்னிடம் கோலி காட்ட, கிறிஸ் லின் கோலிக்கு காட்டு காட்டென்று காட்டி 3 சிக்சர்களுடன் 21 ரன்களை விளாசினார், இந்த ஓவர்தான் திருப்பு முனையாகி விட்டது. அதே போல் குருணால் பாண்டியா. அவரை தொடர்ச்சியாக 4 ஒவர்கள் வீசச் செய்யக் கூடாது, ஒரு ஒரு ஓவராக அவ்வப்போது கொடுத்து முடிக்க வேண்டும், இந்த இடத்தில்தான் ரெய்னா, கேதார் ஜாதவ் போன்ற பகுதி நேர ஸ்பின்னர்கள் உண்மையில் அணிக்கு உதவுவார்கள், அணித்தேர்வில் தோனி உண்மையில் கோலியைக் காட்டிலும் சிந்தனைத் திறமுடையவரே.

மிட்செல் ஜான்சனை எப்படி மைக்கேல் கிளார்க் பயன்படுத்தினார் என்பதிலிருந்து விராட் கோலி பாடம் கற்க வேண்டும். மேலும் ராகுலை அணியில் சேர்த்து ஆடவைப்பதற்காக தனது பேட்டிங்கில் 3ம் நிலையைத் தியாகம் செய்தது கோலியின் மிகப்பெரிய தவறு. மேலும் லெக் ஸ்பின்னரிடம் தொடர்ந்து ஆட்டமிழப்பது குறித்து அவர் கொஞ்சம் ஒர்க் செய்ய வேண்டும்.

அதே போல் குருணால் பாண்டியாவுக்கு கடும் லாபி உள்ளதால் அவரை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை, இங்கு தன் அதிகாரத்தை கோலி பாசிட்டிவாகப் பயன்படுத்தி சாஹலை அணிக்குள் கொண்டு வர வேண்டும். குருணாலுக்கு கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டு விட வேண்டும்.

ராகுலுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கை 3ம் நிலையில் இறக்கிப் பார்க்கலாம், ஆனால் 3ம் நிலைக்கு கோலியே சிறந்த வீரர், அவர்தான் பினிஷ் செய்வார். ஆனால் தன்னுடைய தவறுகளால் அணி எப்படி தோற்கிறது என்பதை கோலி உணர்ந்து மாற்றி கொண்டால் இந்த ஆஸ்திரேலிய அணியை எளிதில் வெல்லலாம்.

ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மிகப்பிரமாதமான ஒரு ஆல்ரவுண்டராக திகழ்கிறார் அவருக்கு எதிராக சாஹல் போன்ற பவுலர்கள் வேண்டுமே தவிர நேர் நேர் தேமா பவுலர் குருணால் பாண்டியா தேவைப்படமாட்டார்.

மெல்பர்ன் பிட்சும் வெளியில் செய்து இங்கு கொண்டு வந்து பதியப்பட்டதாகும், ஆகவே ஸ்பின் எடுப்பது சற்று கடினம் தான். இன்றும் மழை வரலாம் என்று கணிப்புக் கூறுவதால் இதுவும் குறைக்கப்பட்ட ஓவர் போட்டியாக வாய்ப்புள்ளது.

விராட் கோலி 235 டி20 இன்னிங்ஸ்களில் 178 இன்னிங்ஸ்கள் 3ம் நிலையில் இறங்கியுள்ளார், சராசரி 45, மற்ற டவுன் ஆர்டர்களில் சராசரி 27 என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே அவர் டவுன் ஆர்டரை அவர் விட்டுக்கொடுக்கக் கூடாது. கே.எல்.ராகுலை அணிக்குள் கொண்டு வர முடியவில்லையா, அவர் ஆடாமல் இருக்கட்டும் என்ன கெட்டு விடப்போகிறது? புதிய வீரர்களை முயற்சி செய்யலாமே. அவருக்காக தன் டவுன் ஆர்டரை கோலி மாற்றியது கடந்த போட்டியில் பின்னடைவை ஏற்படுத்தியது.

கலீல் அகமெடை அந்தப் பிட்ச்களில் அதிகம் நம்புவதும் தேவையற்ற ஒன்றாகவே படுகிறது, கலீலிடம் வெரைட்டி இல்லை, டி20க்கு முக்கியமானது வெரைட்டி. ஆகவே கோலி கேப்டன்சிக்கு இது சவாலான தருணம், காரணம் ரோஹித் சர்மா இந்த வடிவத்தில் சிறந்த கேப்டன் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

க்ரைம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்